Wednesday, April 1, 2015

தமிழகத்தின் பின்தங்கிய நிதிநிலைமையில் தொழிற்சாலைகள் மூடப்படுதல். - Factories Closing



தற்போது தமிழகஅரசு 1.80லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கின்றது. இன்றைக்குள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டுமென்றால் இன்னும் 20ஆயிரம் கோடியை கடனாகப்பெறவேடும். மொத்தகடன் தொகை ஏறத்தாழ 2 லட்சம் கோடியை எட்டிவிடும். இன்னும் பொதுத்துறை நிறுவனங்களுக்காக வாங்கின கடன்களையெல்லாம் சேர்த்தால் 4லட்சம் கோடி கடனில் தமிழகம் மூழ்கியுள்ளது.




ஜெயலலிதா ”தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023” என்று வெளியிட்டார். அதனை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கான முதலீடுஎங்கே உள்ளது. இந்த ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை ரூபாய் 25,214.32கோடியாகும். அடுத்த ஆண்டு இந்த தொகை இன்னும் அதிகமாகும்.தமிழகம் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 18-வது இடத்தில் உள்ளது. இதன் அளவுக்குறியீடு 3.9% வீதமாகும். பீகார் 10.73 %வீதத்தில் உள்ளது.

தொழிற்சாலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அடைக்கப்பட்டு வருகின்றது. நோக்கியோ நிறுவனம் திருப்பெரும்புதூர் பகுதியிலிருந்து தமிழகத்தின் எல்லை முடிவிலுள்ள ஆந்திரத்தின் தடா-வுக்கு தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது. பாக்ஸ்கான் போன்ற பெரிய ஆலைகளும் படிப்படியாக மூடப்பட்டு வேலைவாய்ப்புகளை பலர் இழந்துவருகின்றார்கள்.
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன், நியூட்ரினோ போன்ற மற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்பட்ட ஆலைகள் தான் இங்கு செயல்படுகின்றது.

ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கும் மூடுவதற்கான முயற்சி, தி.மு.க. ஆட்சியில் 15,000கோடி ரூபாயில் 2520ஏக்கர் பரப்பில் கொண்டுவரப்பட்ட நாங்குநேரி தொழில்பூங்கா முடக்கப்பட்ட்து. சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலை 1971ம் ஆண்டிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தி இன்னும் வந்தபாடில்லை. தி.மு.க ஆட்சியில் அதற்காக 80கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


கடலோரத்தில் அரிய கனிமவளங்களைத் தனியார்கள் கொள்ளையடிக்கின்றனர். கார்னெட், ரூட்டைல், இலிமனைட், சிலிக்கா, மோனோசைட், சிலிக்கான் போன்ற அரிய மணற்தாதுகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைவரை கொள்ளையடிக்கப் படுகின்றன. சேலம் இரும்பு ஆலை வளர்ச்சியிலும் சுணக்கம். உதகை இந்துஸ்தான் போட்டோபிலிம்ஸ் தொழிற்சாலைக்கும் மூடுவிழா.
1989-தி.மு.க ஆட்சியில் இராமநாதபுரத்தில் துவக்கப்பட்ட மக்னீசியம் ஆலையும் மூடப்பட்டது. திருப்பூரில் நடைபெற்றுவரும் பனியன் தொழிற்சாலைகள் மெல்ல குஜராத்துக்கு நகர்ந்து செல்கின்றது.

திண்டுக்கல்லில் பெரிய சலவை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியங்களும், பாளையத்தில் சிமெண்ட் ஆலை அமைக்க வாய்ப்பிருந்தும் அவற்றை அ.தி.மு.க அரசு கண்டும் காணாமல் இருக்கின்றது.
கோவை மாவட்டத்தில் ஜவுளி ஆலைகள், பொறியியல் உதிரிபாகங்கள், பம்புசெட் மோட்டார் தயாரிப்பு போன்ற பல தொழில்கள் முடங்கப்பட்டு தென் இந்தியாவின் மான்செஸ்டரைக் குறிவைத்து கர்நாட, ஆந்திர முதலமைச்சர்களும் கோவை தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் தொழில்முதலீடு செய்ய அழைப்புவிடுக்கின்றனர்.

இவ்வாறு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட்த்திலும் சிறப்பாக நடக்கின்ற தொழிற்சாலைகள் முடக்கப்படுவதும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதும் இல்லை என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். தமிழ்நாட்டில் தொழில்களும், பொருளாதாரமும் மந்தமாக இருக்கின்றன.
குளச்சல், வாலிநோக்கம், நாகை, கடலூர் போன்ற பல துறைமுகத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மீன்பிடி துறைமுகங்களான முட்டம், வேம்பார் போன்ற பல திட்டங்களும் நிலுவையில் உள்ளன. இதில் மாநில அரசின் பங்களிப்பும் உள்ளது.

மதுரை, தேனி, போடிநாயக்கனூர் ரயில்பாதை போன்ற இருப்புப்பாதை திட்டங்களும் ஆமைவேகத்தில் நகர்கின்றன.
கூடங்குளத்தின் அணுக்கழிவுகளை ஆபத்து ஏற்படுகின்ற வகையில் மதுரை – தேனி நெடுஞ்சாலை ஓரத்தில் தரையில் புதைக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. அணுக்கழிவுகளை கர்நாடக கோலார் தங்கவயலுக்குக் கொண்டு செல்வதாகத் திட்டமிடப்பட்டு, எதிர்ப்பின் காரணமாக தமிழகத்தையே குப்பைத்தொட்டியாக எதிர்காலத்தில் மாற்றிவிடும் அச்சம் ஏற்படுகின்றது.

ஆந்திரத்தில் தொழில் துவங்குவது எளிதாகவும், விரைவிலும் ஒற்றைச் சாரளம் முறையில் உரிய உரிமங்கள் கிடைத்துவிடுகின்றது. இதே நிலைதான் அண்டைமாநிலமான கர்நாடகத்திலும், கேரளத்திலும் ஆனால், தமிழகத்தில் ஒரு தொழில் துவங்க சிவப்பு நாடாக்களின் தாமதமும், அரசியல் குறுக்கீடுகளும் இருப்பதால் தொழிலதிபர்கள் தொழில்துவங்க தயங்குகின்றனர்.

இம்மாதிரியான அனைத்துப் பிரச்சனைகளையும் உரிய ஆதாரங்களோடும், புள்ளிவிபரங்களோடும் ஒரு தனி நூலாகத்தான் எழுத வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ், அறிவித்த அறிவுப்புகள் நடைமுறைக்கு வரவில்லை. 100க்கும் மேலான இந்த அறிவிப்புகள். வெற்று அறிக்கைகளாகவே தூங்குகின்றன. பின்வரும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்குவதற்கே தடுமாற்றமான நிலை ஏற்படும் .

பேரறிஞர்.அண்ணா பானியில் சொல்லவேண்டுமென்றால் தமிழகம் தாழ்ந்துவிடுமா என்ற அச்சம் நம் எல்லோருக்கும் வரத்தான் செய்கிறது.

-கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

19-02-2015

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...