மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
இன்றைக்கு (06-04-2015) பேராசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பிறந்தநாள். திருச்சி மாவட்டம் எண்ணெயூரில் 1815ம் ஆண்டில் இதே நாளில் பிறந்தார். இது அன்னாருடைய 200வது பிறந்தநாள்.
சிறுவயதில் தன் தந்தையிடம் தமிழ் கற்று, பாக்கள் புனையும் திறனையும் பெற்றார். சென்னையில் சபாபதி முதலியார், அம்பலவான தேசிகர் ஆகியோரிடம் தமிழக் கல்வி பெற்று, பல சிற்றிலக்கிய நூல்கள் மட்டுமில்லாமல் தமிழ்ப் பாடல்களையும் புனைந்தார்.
இவருடைய மாணாக்கர்கள் உ.வே.சா, குலாம் காதர், யாழ்ப்பாணம். ஆறுமுக நாவலர், சவுரி ராயலு நாயக்கர் ஆவார்கள். இவருடைய சகாக்கள் மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை படைத்தார். கும்பகோணம் தியாக ராஜ செட்டியார் தமிழறிந்த பண்டிதர்.
மயிலாடுதுறையில் தங்கி தமிழ்கல்வியை மாணவர்களுக்கு போதித்தார். திருவாடுதுறை ஆதீனம் மடத்தில் தமிழாசிரியராகவும், ஆதீன கர்த்தர் அம்பலவாண தேசிகருக்கு தமிழ் இலக்கிய ஆலோசகராகவும் விளங்கினார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் திருவாடுதுறை ஆதீன கர்த்தர் “மகா வித்வான் “ பட்டத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு வழங்கி கௌரவப் படுத்தினார்.
19ம் நூற்றாண்டில் அதிக தமிழ் நூல்களை ஓலைச்சுவடிகளில் எழுதியவர் இவர்தான். காப்பியங்கள் , பிள்ளைத்தமிழ், அந்தாதி, புராணங்கள், கலம்பகங்கள், கோவைகள் என கவிகள் பாடியதில் இவருக்கு நிகர் எவருமில்லை அக்காலத்தில். இரண்டு லட்சம் பாடல் வரிகளை அக்காலத்திலே இயற்றியுள்ளார் என்றால் இவருடைய ஆற்றலும் கீர்த்தியும் எப்படிப்பட்டது என்று நாம் அறிய முடியும்.
பெரிய புராணத்தை அற்புதமாக சொற்பொழிவு செய்து கூட்டத்தை தன் பக்கம் மயங்கச் செய்வார். தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களை தாய்போல பேணுவார். பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால் சாப்பிட்டுவிட்டீர்களா அனைவரும் என்று கேட்டுவிட்டுத் தான் பாடத்தையே தொடங்குவார். சாதி, மதத்துக்கு அப்பால் மாணவர்களை நேசித்து, அவர்களின் முகவாட்டத்தை வைத்தே துயரத்தை அறிந்து அதனைப் போக்குவார். நெடிய உயரம், வெறும் வேட்டி, எளிய தோற்றம், இவையெல்லாம் தான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் அடையாளங்கள்.
இவரை மிகவும் நேசித்த தேவராஜர் ஐயாயிரம் ரூபாய் (அந்தகாலத்தில் கோடிக்கணக்கில் மதிப்பாகும்) குருகாணிக்கையாக வழங்கியபோது, மறுத்தும் தேவராஜரின் வலியுறுத்தலால் தவிர்க்க முடியாமல் பெற்றுக் கொண்டு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார்.
கவிச்சக்ரவர்த்தி கம்பர், கம்பராமாயணத்தில் 11661 செய்யுள்களை இயற்றினார். ஆனால் அதில் ஆயிரக்கணக்கான பாடல்களை மிகைப்பாடல்கள் என்று ரசிகமணி டி.கே.சி போன்றவர்கள் ஒதுக்கினார்கள். கம்பருக்கடுத்து மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைதான் அதிகமான பாடல்களை தமிழில் இயற்றியவர்.
கவிதைகள் புனைவதில் வேகமாகவும், விரைவாகவும் இருப்பார். எந்த நோவு தனக்கு வந்தாலும் தினமும் பாக்கள் இயற்றுவதை தன் வாடிக்கைச் செயலாகவே கொண்டவர்.
லண்டனில் இருந்து ஒரு கடிதம்,”மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை , இந்தியா” என்று மட்டும் எழுதி முத்திரையிட்டு வந்தது. அக்காலத்தில் இன்றைக்கிருக்கும் தகவல்தொடர்பு வளர்ச்சிகள் இல்லாத போது, அன்றைய மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) தங்கி இருந்த இவரை அக்கடிதம் சென்று சேர்ந்தது என்றால், அக்காலத்தில் இவர் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தார் என்பது நமக்குப் புலப்படும்.
தன்னுடைய 61வது வயதில் 1876ல் காலமானார். இவருடைய வரலாற்றை இவரின் மாணவரான உ.வே.சா விரிவாக எழுதி நூலாக வெளியிட்டார். தமிழ்தாத்தாவாக நாம் அழைக்கும் உ.வே.சா-வுக்கே குரு மகா வித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவார்.
இத்தகையப் பெருந்தகைக்கு இன்றைக்கு 200வது பிறந்தநாள். தமிழ்கூறும் நல்லுலகம் அவரை வணங்கவேண்டாமா!
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-04-2015.
உண்மை அய்யா, பெரும்பேரறிஞர், சேக்கிழார் பிள்ளைதமிழ், குளத்தூர்கோவை எ ந இலக்கிய அணிவகுப்பு நல்ல பதிப்பாசிரியர் செவ்வந்திப்புராணம் உட்பட. மகாவித்வான் அவர்களின் தமிழ்ப்பணி அளவிடற்கரியது
ReplyDelete