Wednesday, April 29, 2015

தொலைக்காட்சி விவாதங்கள் – TV channel Discussions.



சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்கு கழகத்தின் சார்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டேன். ஒரு கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் அழைக்கப்படுவதுதான் வாடிக்கை. ஆனால் அன்றைக்கு ஒரு மூத்த பத்திரிகையாளரும், அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் அழைக்கப்பட்டதாக விவாதத்தை நடத்தும் ஊடகத்தின் நெறியாளர் விவாதத்தின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தினார்.

வரிசையாக ஒவ்வொருவருடைய விவாதங்களை வைத்துக் கொண்டு வரும்பொழுது வழக்கறிஞர் என்று அறிமுகப் படுத்தப்பட்டவர் சட்டரீதியான தரவுகளை முன்வைத்துப் பேசாமல், மக்கள் முதல்வர், அம்மா அவர்களென்று அ.தி.மு.க பிரமுகராகவே பேசினார். அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் பேசும்போது, வழக்கறிஞர் ஒருவரும் அ.தி.மு.க சார்பில் பேசுகிறார்.  இது எப்படி நியாயமான விவாத முறையென்று நேரடியாக நெறியாளரிடம் கேட்டேன். அந்த பிரமுகர் அ.தி,மு,கவைச் சேர்ந்தவர் தான் என்று தெரிந்துதானே அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.

அப்படியென்றால் அ.தி.மு.க சார்பில் பேசவேண்டிய நபர்களும் இரட்டிப்பாகிறார்கள். பேசவேண்டிய கால அளவும் அதிகமாகும். இது ஊடகத்தின் நியாயமான நிலைப்பாடு இல்லையே?
பொதுவாக தொலைக்காட்சிகளில் நாங்களெல்லாம் தி.மு.க சார்பில் விவாதத்தில் பங்குபெற்றாலும் மற்ற விவாதத்திற்கு வரும் மற்ற உறுப்பினர்கள் மூவரும், தற்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சியிலிருக்கும் கட்சி போல விமர்சனங்களையும், கேள்விக்கணைகளைத் எங்கள் மீது தொடுப்பது இன்றைக்கும் வாடிக்கையாக இருக்கின்றது.

நாகரீகம் கருதி இதைக் குறித்துப் பேசக்கூடாது என்று நினைத்தாலும், குறைபாடுகளைச் சுட்டிக் காட்டவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றோம். ஊடக விவாதத்திற்கு வரும் சிலர் தவறானத் தகவல்களை அடிப்படை ஆதாரமாகச் சொல்லும் போது, அதனைத் திருத்தவேண்டிய கடமையும் இருப்பதால், சற்று உரத்த குரலில் அதைத் திருத்தும் போது “கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கோபப்படுகின்றார்” என்று சிலர் சொல்கின்றனர்.

உதாரணத்திற்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்திலிருந்த, நவநீதம் பிள்ளையை ஆண் என்றும், தமிழகத்தின் உரிமைப் பிரச்சனைகளான காவிரி, முல்லைப்பெரியார், கச்சத்தீவு போன்ற பிரச்சனைகளிலும் சிலர் தவறான தகவல்களைச் சொல்கின்றனர். மக்களுக்குச் சென்றடையும் இந்தத் தவறான கருத்துகளை உடனடியாக திருத்துவது எப்படி கோபப்படுவதாகும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைகளும், ஊடகங்களும் துலாக்கோல் நிலைபோல நடுநிலையாக இயங்கவேண்டும். கட்சி சார்ந்த தொலைக்காட்சிகள் பற்றி கவலையில்லை. பொதுவாக இயங்கும் வெகுஜன தொலைக்காட்சிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதில் அர்த்தமில்லை.

ஊடகத்துறையில் உள்ள அத்தனைபேரும் நண்பர்கள் தான். யாரையும் குறைசொல்லி புண்படுத்துவதாக நினைக்கக்கூடாது இந்த எதார்த்த நிலையை உணரவேண்டும் என்றுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-04-2015.


No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...