Wednesday, April 15, 2015

நதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நதிநீர் பிரச்சனைகள் ஆர்வலர்களின் கவனத்திற்கு- River Linking Questions and Supreme Court Order.








மத்திய அரசு நேற்றைக்கு நதிநீர் இணைப்புத்திட்டத்தை
விரைவு படுத்த பி.என். நவலவாலா தலைமையில்
சிறப்புக்குழு ஒன்றைத் திருத்தி அமைத்துள்ளது.

1983லிருந்து நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, தேசிய நதிகளை இணைக்கவேண்டும் என்றும், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை  ஆகிய நீர்படுகைகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்கப்பட்டு கேரளாவில் மேற்குநோக்கிப்பாயும் நதிகளின் உபரிநீரைத் தமிழகத்திற்கு திருப்ப வேண்டும். இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, உதகை, ஈரோடு, கரூர் மாவட்டங்கள் மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு குடிநீர்வசதியும் கிடைக்கும் என பொதுநல வழக்காகத் தொடுத்தேன். இதுகுறித்து  உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த பொதுநல வழக்கிற்கு  30ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 27-02-2012 அன்று தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பில் மத்தியஅரசு நதி நீர் இணைப்புகளைப் பற்றி ஆராய ஒரு ஆக்கப்பூர்வமான குழுவை அமைத்து, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூடி, இந்த முக்கிய பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டும். ஒருபக்கத்தில் வெள்ளம், ஒருபக்கம் வறட்சி என்ற நாட்டின் நிலையை சரி செய்ய இது உதவுவதோடு இதுஒரு முக்கியப்பிரச்சனை. இதைப்பற்றி ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டுமென்று தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, மற்றும் நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், சுவந்திரகுமார் அடங்கிய நீதிபதிகள் குழு நதிநீர் இணைப்பைக் குறித்து முதல் தடவையாக தெளிவான தீர்ப்பை வழங்கியது.

சங்கரன் கோவில் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் அப்போது இருந்ததால், உடனே இந்தத் தீர்ப்பு பற்றி  முழுமையாக அறியமுடியவில்லை. 2012 மார்ச் மாத இறுதியில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்கவேலு அவர்களும் மன்மோகன்சிங் அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ஹரீஷ் ரவுத்தை சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், இது குறித்து குழு அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவையும் அளித்தோம்.



ஆனால் அன்றைய மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. திரும்பவும் அக்டோபர் மாதம் அமைச்சர் ஹரீஷ் ரவுத்தைச் சந்தித்து மனுகொடுத்தும் நீங்கள் அதை பரிசீலிக்கவில்லை.

உச்சநீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன் என்று குறிப்பிட்டவுடன், 02-11-2012ல், உத்தரவு எண் : BM/683-707 என்ற உத்தரவின் மூலம்  ஒரு குழுவை அமைத்தார்கள். அந்தக்குழு ஒப்புக்காக நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்வதற்காக நியமிக்கப்பட்டது. ஆனாலும் அந்தக்குழுவின் உத்தரவை முறைப்படி சரியாக வெளியிடவில்லை.

திரும்பவும் இதைக் குறித்து உச்சநீதிமன்றத்தின்  கவனத்திற்கு சென்ற பின்தான் ஒரு வருடத்திற்கு மேலாக, அதாவது 15மாதத்திற்கு பிறகுதான் முறையான உத்தரவும் வெளியிடப்பட்டது.

ஏனெனில், அன்றைய மன்மோகன்சிங் அரசு இந்திரா காந்தி விரும்பிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை  ராகுல் விரும்பவில்லை என்ற காரணத்தினால் கிடப்பில் போட்டது. இதற்கிடையில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பொழுது ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, இன்றைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீரிணைப்பு குறித்தான சாத்தியங்களை அறிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு 80சதவிகிதப் பணிகளை முடித்து இதுபற்றிய அறிக்கையை இறுதிப்படுத்தும் நேரத்தில் மன்மோகன்சிங்கின் யு.பி.,ஏ முதல் அரசு 2004ம் ஆண்டு பதவியேற்றது.

அப்போது, சுரேஷ் பிரபு குழுவின் காலம் முடியும் தருவாயில் இருக்கும் பட்சத்தில் அந்தக்குழுவுக்கு ஆறுமாத கால நீட்டிப்புத் தந்திருந்தால் அறிக்கையை தாக்கல் செய்திருக்கும். ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்டு உழைத்த அறிக்கையின் பயன் விரயமாகிவிட்டது.

இது குறித்து, உடனே அப்போது உச்சநீதிமன்றத்தில் என் வழக்கின் மூலமாக கவனத்திற்கு கொண்டு வந்தேன். அன்றைக்கு அரசு வழக்கறிஞர் மன்மோகன்சிங்அரசுக்கு இதில் அக்கறையும் ஆர்வமும் இருக்கின்றது. குழுவின் காலத்தையும் நீட்டிப்போம் என்று சொன்ன உறுதிமொழியை மத்திய சர்கார் காப்பாற்றாமல் கிடப்பில் போட்டது.

காங்கிரஸ் அரசு பத்தாண்டு காலமும் நதிநீர் இணைப்பு என்பது
ஒரு ஒவ்வாமையாகக் கருதியது. இந்நிலையில் மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தபோது, நாடாளுமன்றத்தின் தேர்தல் 2014ல் நடந்தது.

2014ம் ஆண்டு மே மாதம் மோடி அரசு பதவியேற்றபின்,
24-07-2014அன்று இன்றைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து நானும் தங்கவேலுவும்,  ஹரீஷ் ரவுத்திடம் அளித்த மனுவைப் போன்றே அமைச்சர் உமாபாரதியிடமும் கோரிக்கை மனுக்களையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு நகலையும் அளித்தோம்.



அவற்றைப் பெற்றுக் கொண்ட உமாபாரதி “ இன்றைக்கு இதை அமைச்சரவையில் பேசினோம், இது எங்கள் வாஜ்பாயின் கனவுத் திட்டம், உறுதியாக நிறைவேற்றுவோம்” எனக்கூறினார்.
உங்களின் 30ஆண்டுகால வழக்குப் பணியும், உச்சநீதிமன்றத்தில் நீங்கள் பெற்ற உத்தரவும் தான் எங்களுக்கு இந்தப்பணியை எடுத்து செய்ய அவசியப்படுத்துகிறது என்று சொல்லி என்னை இதுகுறித்து வாழ்த்தவும் செய்தார்.

குடிநீர் வினியோகம், 3.5கோடி ஏக்கர் நிலங்கள் விவசாயம், உள்நாட்டு நீர் போக்குவரத்து, 34,000மெகா வாட் நீர்மின்சார உற்பத்தி, உள்நாட்டு மீன்வளப் பெருக்கம் அதுமட்டுமில்லாமல் மண்ணில் வெப்பத்தை தடுக்கும் ஈரப்பதம் என்பதெல்லாம் நதி நீர் இணைப்பால் ஏற்படும் பயன்கள்.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசப்பட்டு இந்திராகாந்தி, மொரார்ஜி ஆகிய பிரதமர்கள் விரும்பிய திட்டம். இவ்வாறான திட்டத்திற்கு நிறைவேற்ற இவ்வளவு காலம் சுணக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  நதிகள் இணைப்புத்திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கேன், பேத்வா நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதனால் கேன் நதியின் உபரி நீர் பேத்வா நதியுடன் இணைக்கப்பட்டு மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்கள் பயனடையும்.

அதேபோன்று தமிழகத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் பயன்பெறும் வகையில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டங்கள் கிட்டத்தட்ட 600கோடி ரூபாய் மதிப்பீட்டில் தி.மு.க ஆட்சியில் துவங்கப்பட்டு நான்குநேரிவரை கால்வாய்கள் வெட்டப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின்படி, காவிரி, அக்னியாறு, தென்வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டமும், தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டமும் தமிழகத்தில் நிலுவையில் உள்ளன.

நதிநீர் இணைப்பு சாத்தியப்படுத்தப் பட்டால்தான் மற்ற அணைத் திட்டங்களையும் சரியாக செயல்படுத்த முடியும்.
ஒரு உதாரணத்திற்கு செண்பகத்தோப்பு அணைத்திட்டம் கட்டி இடிக்கப்பட்டு, பல போராட்டங்கள் நடத்தியும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.
நதிநீர் இணைத்தால் தான் அந்த அணைக்கும் தண்ணீர் வரும்.

குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை அச்சன்கோவில்-பம்பா-வைப்பாறு இணைத்தால் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, அழகர் அணை வரை நீர்வரத்து ஏற்படும்.
அடுத்தகட்டமாக, மேற்கு நோக்கிப்பாயும் கேரள நதிகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்பும் போது ஆழியாறு- பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா என்ற அணைப்பகுதிகளுக்கும் நீர்வரத்து வரும். அதுமட்டுமில்லாமல் குமரிமாவட்டத்திலும் மூடப்பட்டுள்ள நெய்யாறு, மற்றும் முல்லைப்பெரியாறு, சிறுவாணி, பம்பாறு ஆகிய நீர்ப்பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கிடைக்கும்.

எனவே அணைகளைச் சீர்செய்யவேண்டும், கட்டவேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் அச்சன்கோவில்-பம்பை –வைப்பாற்றோடு இணைத்து மேற்கு நோக்கிப் பாயும் கேரள நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்பினால் தான் நீர்வரத்துகளும் அணைகளுக்கு வரும் என்பதை நதிநீர் ஆர்வலர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில் இன்றைக்கு பி.என்.நவலவாலா தலைமையில், குழுவை மறுசீரமைத்து ஆய்வுகளைத் தொடங்க உள்ளன. ஏற்கனவே சுரேஷ் பிரபு ஆய்வு செய்த அறிக்கைகளையோடு இந்தக்குழுவும் ஆய்வு செய்து பணிகளை முடித்தால் நதிநீர் இணைப்பின் முதல்கட்டம் நிறைவு பெறும்.

வெற்றுப்பேச்சாக இல்லாமல், இவை நடைமுறைக்கு வரவேண்டும். இதில் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்கின்றனர். அதை மறுக்கவில்லை. ஆனால் இன்றைக்கு நீர் என்பது அடிப்படை ஆதாரம்.

வட இந்தியாவிலும் வடகிழக்கிலும் வெள்ளங்கள் ஓடுகின்றன. தக்காணபீடபூமியும் தென்னிந்தியாவும் வறட்சியில் வாடுகின்றன. மகாகவி பாரதி குறிப்பிட்டவாறு மையத்து நாடுகளைப் பயிர் செய்யும் வகையில் நதிநீர் இணைப்பை விரைவு படுத்தவேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு நதிநீர் இணைப்பு வேண்டுமென்று இந்த வழக்கை நான் தாக்கல் செய்தபோது, என்னை பரிகாசம் செய்த நண்பர்களும் உண்டு. ஃபீஸ் வாங்கிக்கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ்வதை விட்டுவிட்டு நதிநீர் இணைப்பு, இமயமலையைக் கொண்டுவா என்று வழக்குத்தொடுப்பதா என்று என்னைக் கிண்டல் செய்த மூத்த வழக்கறிஞர்கள் ஒருசிலர் இப்போது இல்லை.

ஏகடியம் எல்லாம் பொருட்படுத்தாமல் முப்பது ஆண்டுகாலம் இந்த வழக்கை நடத்தி டெல்லிக்கும் சென்னைக்கும் விமானத்தில் அலைந்திருக்கிறேன். திடீரென இரவில் டெல்லியிலிருந்து நாளை வழக்கு வருகிறது உடனே வாருங்கள் என்பார்கள் நண்பர்கள். அதிகாலையில் டெல்லிக்கு கிளம்பவேண்டும். அப்பொழுதெல்லாம் இவ்வளவு விமான வசதிகள் கிடையாது. காலையிலும் மாலையிலும் தான் விமான சேவைகளும் உண்டு.

டெல்லிக்கு விமானத்தில் சென்றவுடன், துணிகளை மாற்றிக்கொண்டு வழக்கறிஞர் கோட்டோடு உச்சநீதிமன்றத்திற்கு ஓடவேண்டும். இப்படியெல்லாம் பட்டபாடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதன்மேல் எப்படி ஆர்வம் ஏற்பட்டதென்றால் 1975ல் ஒன்றுபட்ட நெல்லைமாவட்டமாக எங்கள் மாவட்டம் இருந்தபோது வறட்சி, விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை, அரிசி கிடைக்காமல் மக்காச் சோளத்தை மக்கள் உண்டனர். அன்றைக்கு கவர்னராக இருந்த மோகன்லால் சுகாடியாவோடு பழ.நெடுமாறனும் நானும் நெல்லையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிப் பயணித்தோம்.

அன்றைக்குத்தான் , கேரளாவில் தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது அதைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பலாம் என்று ஒரு அறிக்கையை மத்திய அரசு   தாக்கல் செய்தது. அப்போது சுகாடியா ஏன் கேரளா தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்கொடுக்கக் கூடாது என்று சொன்னதால் ஆர்வமேற்பட்டு தரவுகளைச் சேகரித்தேன். அதன்விளைவே இந்த வழக்கு.

நதிநீர் இணைப்புத் திட்டம் பற்றி மத்திய அரசின் குழு நியமிக்கப்பட்டிருப்பது ஒரு பிரச்சனையை எடுத்தோம், நம்மால் முடிந்த அளவு முடித்தோம் என்ற இதய சுத்தியோடு உழைத்த உழைப்பு மனத்தளவில் மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகின்றது.

நதிநீர் இணைக்கப்பட்டால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம்……

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-04-2015.

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...