கடந்த ஏப்ரல்.9ம் தேதி காலையில் கதைசொல்லியின் ஆலோசனைக்குழுவில் உள்ள உறுப்பினரும், அன்புக்குரிய நான் மகளாக மதிக்கும் ராதா ராமச்சந்திரனுடைய பிறந்த நாள். வாழ்துகளம்மா ராகுல்ஜி பிறந்த தினத்தில் பிறந்துள்ளாய். உன்னுடைய முகநூலிலும் புத்தத் துறவியாக இருந்த ராகுல்ஜி நேசித்த புத்தரையே முகப்புப் படமாக வைத்துள்ளாய், அதே சிந்தனைகளோடு உன்னுடைய பணிகள் சிறக்க வேண்டுமென்று வாழ்த்தினேன். அப்போது ராகுலைப் பற்றித் தெரியும் அவரைப்பற்றி விரிவாக சொன்னால் நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் என்ற ஆளுமை அனைவராலும் நேசிக்கப் படுகின்ற படிக்காத மேதையாவார். நம்முடைய திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருமலிசை ஊரில் வந்து தமிழ் படிக்கத் தங்கி இருந்தார். தன்னுடைய வாழ்கையையே பயணமாகக் கருதி, பயணத்தில் கண்ட காட்சிகளையும், அனுபவங்களையும் தன்னுடைய படைப்புகளாக நமக்களித்தார்.
“வால்காவிலிருந்து கங்கை வரை, சிந்துமுதல் கங்கை வரை என அற்புதமான பல படைப்புகளை நாட்டுக்கு அர்ப்பணம் செய்த மாமேதை ராகுல்ஜி. எவரையும் தோற்றத்தால் ஈர்க்கக்கூடிய முகப்பொலிவும் கனிவும் கொண்டவர்.
1893 ஏப்ரல் 9ம் தேதி உத்திரபிரதேசத்தில் பிறந்து 1963 ஏப்ரல் 14ல் காலமானார். இளம்வயதிலே பெற்றோர்களை இழந்து தன்னுடைய பாட்டியால் வளர்க்கப்பட்டார். இந்தி, சமஸ்கிருதம், தமிழ், அரபி, உருது, பாரசீகம்,கன்னடம் போன்ற மொழிகள் மட்டுமில்லாமல், சிங்களம் ரஷ்யம், பிரெஞ்ச், ஆங்கிலத்தையும் கற்றறிந்தவர். இவர் ஒரு புகைப்பட நிபுணரும் கூட.
புத்தமதத் துறவியாக சில காலம் வாழ்ந்தார். கால்நடையாகவே பல ஊர்களுக்குச் சுற்றித்திரிந்தார். 45வருட கால பயணங்களை “ஊர்சுற்றிப் புராணம் “ என்று நூலாகப் படைத்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இவரது படைப்புகளும் கருத்துகளும் இருந்ததால் மூன்றாண்டு காலம் சிறையில் அடைக்கப் பட்டார்.
புத்த மதத்தை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் மார்க்சீய சிந்தனைகளில் ஆர்வம் காட்டினார். சோவித் யூனியனுக்குப் பயணம் செய்தார். அப்போது லெனின் கிராட் பல்கலைக் கழகம் இவரை பேராசிரியராக நியமித்தியது.
சீனம், திபெத், நேபாளம், இலங்கை, ஈரான் போன்ற நாடுகளுக்கும் பயணித்தார். தனது 20ம் வயதில் எழுதத் தொடங்கி 146 நூல்களைப் படைத்தார். புத்தகங்கள் மீதும் ஓவியங்கள் மீதும் இவருக்கு பெரும் ஈர்ப்பு உண்டு. திபெத்துக்குச் சென்றிருந்த போது, நாளந்தா பல்கலைக்கழகங்களில் இருந்த புத்தகங்களை இந்தியாவுக்கு திரும்பப் பெற்று வந்தார். இன்றைக்கும் அவை பாட்னா அருங்காட்சியகத்தில் உள்ளன. இவர் சேமித்த நூல்கள் பல இன்றைக்கு மின்புத்தகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
வால்காவிலிருந்து கங்கை வரை நூல் கி.மு6000ல் தொடங்கி கி.பி 1942 வரைக்குமான 20 கதைகளைக் கொண்டு முடிவடைகிறது. இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை. இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு எல்லா மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கண. முத்தையா, அகிலன் ஆகியோர்களில் முயற்சியால் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்ட இந்நூலை ஒவ்வொரு தமிழரும் படிக்கவேண்டுமென்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.
மத்திய ஆசியாவின் இதிகாசம் என்ற இவருடைய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது 1958ல் வழங்கப்பட்டது. இவரை கௌரவப்படுத்தும் வகையில் 1963ல் பத்மபூசன் விருதும் அழிக்கப்பட்டது. ராகுல்ஜியின் பெயரில் அமைந்த “மகா பண்டிதர் சாங்கிருத்யான்” என்ற தேசிய விருதும் மற்றும் இவர் பேரில் அமைந்த சுற்றுலா விருதும் தற்போதும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.
ராகுல் தான் ஏற்றுக்கொள்ளும் கருத்துகளை, “ஓடத்தைப் போல் வாழ்க்கை நதியைக் கடப்பதற்கே நான் கருத்துக்களை ஏற்றுக்கொண்டேன்; அவற்றை தலைமேல் சுமந்து திரிவதற்காக அல்ல” என்று குறிப்பிடுவார். தன் வாழ்வில் தனிமையில் இனிமை கண்டவர்.
நியூ செஞ்சுரி புக் கவுஸ் ராகுல் சாங்கிருத்யாயனின் மொழிபெயர்கப்பட்ட சுயசரிதையை மூன்று பகுதிகளாக தமிழில் வெளியிட்டுள்ளது. அந்த நூலை அவர் ” நான் முன்னேறிச் செல்ல வாய்ப்பளித்துவிட்டு, பின்னாலேயே நின்றுவிட்ட என்னோடு ஓடிவந்தவர்களின் நினைவுக்கு...” சமர்ப்பணம் என்கிறார்.
சமீபத்தில் பொறியியல் படித்த, எங்கள் கோவில்பட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு உதவிக்காக என்னைப் பார்க்க வந்தபொழுது, என் மேசையிலிருந்த ராகுல்ஜியின் படம் போட்ட புத்தகங்களைப் பார்த்துவிட்டு, “இந்த புக்கெல்லாம் ராஜீவ் காந்தியோட பையன் ராகுல் காந்தி எழுதினதா” என்று கேட்டார். “எனக்கு கோபம் வந்துவிடும் முதல்ல கீழே போப்பா.. உங்க அப்பாவை எனக்குத் தெரிஞ்சதனால் உன்னை சும்மா விட்டிருக்கேன். ராகுல்ஜியைத் தெரியாமல் என்ன மெத்தப் படிப்பு படிச்சே” என்றேன்.
இன்றைக்குள்ள இளைஞர் சமுதாயம் வரலாற்றை எப்படி அறிந்துள்ளது என்பதை நினைத்தால் அச்சமாக இருக்கின்றது.
சரி அந்த இளைஞர் தான் அப்படி இருக்கிறார் என்று பார்த்தால் கூகுளில் ராகுல்ஜியின் படத்தைத் தேடினால் ஒரே ஒருபடம் தான் அவருடையது வருகிறது. மற்றதெல்லாம் சோனியாவின் புதல்வர் ராகுல் காந்தியின் படங்கள் தான் பிரகாசிக்கின்றன. இதை எங்கே போய் சொல்ல....
இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எனக்கு உதவியாக இருக்கும் கார்த்திக் புகழேந்தி “ நான் இத்தனை புத்தகம் ராகுல்ஜியோடது வாங்கிப் படித்திருக்கிறேன். ” என்று எடுத்துக் காட்டியது எனக்கு ஆறுதலாக இருந்தது. எனவே இராதா இராமச்சந்திரன் போன்ற இன்றைய இளைய சமுதாயம் கடந்த கால வரலாற்றையும் தரவுகளையும், வருகின்ற தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு இருப்பதை உணரவேண்டும்.
-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
13-04-2015.
மிக்க நன்று.
ReplyDelete