கவிக்கோ.அப்துல் ரகுமான் அவர்களின் பவள விழா மலருக்கு எழுதிய பத்தி.
மதுரை மாவட்டத்தில் பிறந்து, வடக்கே வாணியம்பாடியை நோக்கிச் சென்ற புதுக்கவிதைப் புயல்தான் நமது மாபெருங்கவிஞர் கவிக்கோ. அப்துல்ரகுமான் அவர்கள். வாணியம்பாடி இஸ்லாமிய
கல்லூரியில் பணியாற்றி, கவிதைகளினால் வாணியம்பாடிக்கு
புதுஅடையாளத்தைத் தந்தவர் நமது கவிக்கோ. நவீனக் கவிதை வரலாற்றில் இவர் ஒரு முக்கிய அங்கம்.
“கஸல்”, “நஜீம்” என்ற இரு வடிவங்களில் தமிழில் புதுக்கவிதைகள் வடித்தவர். சாகித்ய அகாடமி விருதுபெற்று கவியரசர், கம்பக் காவலர், கலைமாமணி, எனப்பல விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கும் புகழ்சேர்ந்தவர்.
கவிதை தொகுப்புகள், ஆய்வு நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள்,மொழிபெயர்ப்பு நூல்கள் என பலபடைத்த பெருந்தகை. இன்றைக்குப் புதுக்கவிஞர்கள் பலர் வந்தாலும் அவர்களுக்கு ஆசானாக கவிக்கோ இருக்கின்றார்.
பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல வடிவங்களைக் கையாண்டனர். இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறியது. புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றவர் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால
வகையினானே என்பது நன்னூலார் கூற்று.
காலவேகத்தில் கவிதைத்துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் புதுக்கவிதை. தமிழ்க் கவிதையில் மறுமலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு ‘நியூ பொயட்ரி’ என்றும், ‘மாடர்ன் பொயட்ரி’ என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுவதை ஒட்டி, தமிழில் ‘புதுக்கவிதை’ என்ற பெயர் 1960களில் இடப்பட்டது.
யாப்பு முறைகளுக்கு கட்டுப்படாமல், கவிதை உணர்வுகளுக்கு
சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி
‘வசன கவிதை’ என்றும் பின்னர், ‘யாப்பில்லாக் கவிதை’ என்றும்
‘இலகு கவிதை’, ‘கட்டில்டங்காக் கவிதை’ (Free Verse) எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது.
எட்டையபுரத்தின் மகாகவி பாரதியாரே தனது எல்லாக்
கவிதைகளையுமே ‘புதுக்கவிதை’ என்றுதான் குறிப்பிடுகிறார்,
‘சுவை புதிது, பொருள் புதிது,
வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’
-என்று தன் கவிதைகளைப் பற்றிப்
பெருமையோடு பாடுகிறார்.
பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி, ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன்,
புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்
புதுக்கவிதைகளை வளர்த்தனர். மணிக் கொடி, சூறாவளி,
காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி
ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள்
மணிக்கொடி இதழ் முதலில்தோன்றியதால் இக்காலத்தை
மணிக்கொடிக் காலம் என்றே அழைக்கின்றோம்.
இந்த காலகட்டத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் கதாநாயகர்களாக
விளங்கினர். பின்னே, எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் புதுக்கவிதையை வளர்த்தன.
ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து
இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர்
ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா, க.நா.சுப்பிரமணியன் போன்றோர்
புதுக்கவிதைக்குச் சிறப்பு சேர்த்தனர்.
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்களும் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை
கொண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
இப்படியான புதுக்கவிதை வரலாற்றில் படைப்புகளுக்கும் , தரவுகளுக்கும் முக்கிய கர்த்தாவாக விளங்குபவர் நமது
கவிக்கோ அவர்கள். புதுக்கவிதைக்கு அடையாளம் காட்டிய
கவிக்கோ.அப்துல் ரகுமான் வழியில் சற்று ஆராய்ந்தால் இதுதான்
புதுக்கவிதை என்பதை உணரமுடியும்.
தலைவர் கலைஞர் போற்றும் கவிஞர் நம் கவிக்கோ. கவியரசர் கண்ணதாசன் சொல்கிறார், “கவிக்கோ கவிதைகளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் ஆர்வத்தோடு இந்த உலகம் விசாரிக்க விரும்பும்” என்று.
யாரையும் அளவோடு பாராட்டும் கலைமகள் ஆசிரியர், உ.வே.சா-வின் மாணவர் கி.வா.ஜ, “கம்பனுக்குத் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்குத் தோன்றுகின்றன” என்று பாராட்டி இருக்கிறார்.
இப்படி ஆன்றோர், சான்றோர் ஏன் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு பவளவிழா.
இது தமிழர்களின் விழா.
-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
05-04-2015.
"அழுகின்ற போதும் மழையாக அழு!
ReplyDeleteவிழுகின்ற போதம் விதையாக விழு!"
என்று பேரறிஞர் அண்ணா மறைவுற்ற வேளையில் இரங்கற் கவிதையிலே, இந்தச் தமிழினத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அருந்தலைவரின் பெருமையை உணர்ந்து தமிழர்கள் கடமையாற்ற வேண்டும் என்று, அழகிய வரிகளில் மக்களின் நெஞ்சங்களில் இடம்பெற்றக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். பவளவிழா காணும் அவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்ப்பணியைத் தொடரவேண்டும் என்று பெரிதும் வேண்டுகின்றோம். வாழ்த்துக்கள்!
-கு.மா.பா.திருநாவுக்கரசு