Wednesday, April 1, 2015

கூடங்குளம் அணுக்கழிவுகள் மதுரை-தேனி நெடுஞ்சாலைகளில் பதிப்பா?


______________________________________________________________


கூடங்குளம் அணுக்கழிவுகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலாரில் கொட்டப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதைத் எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடத்தியதன் விளைவாக அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
பின், மதுரை-தேனி நெடுஞ்சாலையில் உள்ள வடபழஞ்சி அருகே அணுக்கழிவை கொட்டி புதைக்கப் போகின்றார்கள் என்ற செய்தி
2013-காலகட்டத்தில் வெளியானது. பிறகு அந்தச் செய்தியும் மறுக்கப்பட்டு, கூடங்குளத்திலே அணுக்கழிவுகள் கொட்டப்படும் எனறார்கள்.
இந்நிலையில், மானிடத்திற்கு கொடுமையினை ஏற்படுத்தும் கூடங்குளம் யுரேனிய அணுக்கழிவை திரும்பவும் தேனி-மதுரை சாலையின் ஓரத்திலே கொட்ட முடிவுசெய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த முடிவு உண்மைதானா?
இதுபற்றி மத்திய அரசு அதன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும்.
இந்த அணுக்கழிவிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு பாதிப்பு 50மைல் கல் சுற்றுவட்டாரத்திலும் இருக்கும். இதில் விபத்து ஏற்பட்டால், போபாலில் கார்பைடு ஆலையில் நடைபெற்ற விபத்தைவிட பன்மடங்கு தாக்கம் இருக்கும்.
30ஆண்டுகளுக்கு மேலாகியும் போபால் விபத்துக்கு எந்த நிவாரணமும், பரிகாரமும் இன்றுவரை ஏற்படாமல் பாதிக்கப்பட்ட மக்கள் துயர்களைச் சுமந்துகொண்டு போபால் வீதிகளில் திரிகின்றனர். அதுமாதிரி தமிழகத்தில் கூடங்குளத்தால் தீர்க்கமுடியாத , மோசமான விளைவும், ஏற்பட்டுவிடக் கூடாதென்ற பயம் தான் நமக்கு.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, நெல்லை கங்கைகொண்டானிலும்- ஈரோடு பெருந்துறையிலும் நமது தண்ணீரை உறிஞ்சும் கோக்,பெப்ஸி ஆலைகள். கொங்குமண்டலத்தில் விவசாயிகளின் அடிவயிற்றில் அடிக்கும் கெய்ல் குழாய்ப்பதிப்பு, காவிரி டெல்டாவை சாம்பலக்கப்பார்க்கும் மீத்தேன். தேனிமலைகளில் நியூட்ரினோ திட்டம் என்று மக்களை ரணப்படுத்தும் ஆலைகளை அமைக்கவும், அதன் கழிவுகளைக் கொட்டிவைக்கவும் தானா நம் தமிழகம் .
இயற்கை வளங்களான, அரியவகை மணல்ச் செல்வங்களை தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரிலிருந்து நெல்லை, குமரிமாவட்டம் வரை தனியார்கள் சுரண்டி கொழுத்துவருகின்றனர்.


இயற்கைக்கு மாறாக நடப்பதில் மத்திய, மாநில அரசுகள் நொண்டியாட்டம் ஆடுகின்றது! இயற்கையின் அருட்கொடையினை மாற்றவோ அபகரிக்கவோ கபளீகரம் செய்யவோ, எவருக்கும் உரிமைகிடையாது. இயற்கையின் சீற்றத்தோடு யாரும் விளையாடவேண்டாம்.

வல்லான் வகுத்ததே வாய்க்காலென்று நினைத்துக் கொண்டு நியாயங்கள் நிராயுதபானியாக இருக்கின்றது, உண்மைகள் உறங்குகின்றன என கனவுகண்டுகொண்டு மக்கள் சக்திக்கு எதிராக இயற்கையை நாசப்படுத்துகின்றவர்களை எதிர்த்து ஜனசக்தி கொதித்தெழும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...