Friday, April 10, 2015

எல்லைகளும் உயிர்களும் 1947/2015. - Life and Borders of Rule. 1947/2015.



இந்த புகைப்படங்களில் அறுபத்து ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த கோரக்காட்சிகளும், 2015ல் இரண்டு நாட்களுக்கு முன்னாl சித்தூர் மாவட்டம் திருப்பதி (ஆந்திரா) அருகே 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற கோரக் கொடூரக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

1947ல் சுதந்திரம் பெற்றவுடன் மனிதர்களை மனிதர்களாக நினைக்காமல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தவர்களும், அதேபோல பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களும் பட்ட கொடூர ரணங்கள் சொல்லமுடியாதவை.

அன்றைக்கு தற்போது உள்ள காலக்கட்டம் போல ஊடகங்கள், தொழில்நுட்ப வளர்சிகள்  கிடையாது. ஆயிரக்கணக்கான உயிர்கள் பூமியில் செத்துவிழுந்து மடியக்கூடிய நிலை அன்றைக்கு இருந்தது.

ஆந்திர மாவட்ட  காவல் துறையினரால்  மரம் வெட்ட வந்ததாக,  தமிழர்கள் 20பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதில் பல மர்மங்கள் உள்ளன.

வறுமையில் வாடும் கிழக்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளான ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை, சித்தேரி மலை, சேர்வராயன் மலை, அறுநூத்துமலை, கல்வராயன் மலை ஆகிய மலைகளைச் சேர்ந்த பூர்வக் குடிகள் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, பர்க்கூர் போன்ற இடங்களில் மரம்வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள்  அன்றாடங்காட்சிகள் பாவம்.

இவர்கள் வெட்டித்தருகின்ற மரத்தைக் கொண்டு, கொழுத்துக் கொண்டிருக்கும் முதலாளிகள், இடைத்தரகர்கள் பலர். அன்றாடக் கூலிக்காக இந்தக்குற்றத்தில் ஈடுபட்டு அப்பாவியாகச் சாகடிக்கப்படுகிறார்கள் இம்மக்கள்.

செம்மரக் கடத்தல் பிரச்சனை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இருந்து வருகின்றது. இதற்கு முன்பு மரம் வெட்டிய பிரச்சனையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த எஸ்.வெங்கடேசன், எஸ்.சிவா, எஸ்.விஜயகாந்தன் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டதும், அதேபோல சேலம் மாவட்டம்   மற்றும் ஜமுனா மரத்தூர் பகுதியிலும் இத்தொழிலாளிகள் கொல்லப்பட்ட செய்திகளே வெளித்தெரியாமல் மறைக்கப்பட்டது என்ற செய்திகளும் வெளிவருகின்றன.

தமிழகத்தின் மரம்வெட்டும் தொழிலாளர்கள் சித்தூர், கடப்பா மாவட்டச் சிறைகளில் கைதிகளாக பலகாலமாக வதை படுகின்றனர். இது குறித்து ஒரு ஆவணக் காணொளியும் சமீபத்தில் வெளிவந்தது. இந்தக் குற்றங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆயிரத்து ஐநூறுக்கும் மேலான வழக்குகள்  கடப்பா, சித்தூர் மற்றும் ஆந்திராவின் தென்மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது.






மரம்வெட்டச் சென்ற தொழிலாளிகளைச் சுட்டு படுகொலை செய்தது அரச பயங்கரவாதம். மனித உரிமைகளைக் குழிதோண்டி புதைத்துவிட்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46-னை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆந்திர வனகாவல்த்துறையினர் இந்த கொடூரப் படுகொலைகளை நடத்தி முடித்துள்ளனர்.

தமிழர் உலகத்தின் மூத்தகுடி, உலகின் மூத்த மொழி தமிழ், இமயத்துக்குச் சென்றான் செங்குட்டுவன். கடாரம் வென்றவன் இராஜேந்திரன், முக்கடலிலும் தமிழருடைய பராக்கிரமம் கொடிகட்டிப் பறந்தது ஆன்று. ஆனால் இன்றைக்கென்ன நிலைமை. டெல்லியிலும் மும்பையிலும், கொல்கத்தாவிலும் தமிழர்கள் எவ்வளவு பாதிப்பான நிலையில் உள்ளனர்.

மும்பை தாராவியில் தமிழன் எத்தனைப் பாடுபடுகிறான். சிவசேனா 40ஆண்டுகள் முன் அங்கிருந்து தமிழர்களை விரட்ட என்ன பாடுபடுத்தியது. வரலாற்று ரீதியாகப் பார்த்தாலும் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கைத் தோட்டத் தொழில்களுக்காக மந்தை மந்தையாக அழைத்துச் செல்லப்பட, தமிழனுடைய உழைப்பில் அந்த நாடுகள் வளர்ந்தன.

இலங்கை த்தீவில் தமிழன் இல்லையென்றால் ரப்பரும் , தேயிலையும் விளைந்திருக்குமா?  அந்நாட்டின் முக்கிய விளைபொருளாக இன்றைக்கும் இலாபத்தை அள்ளித்தருகின்ற இந்த விவசாயத்தை தமிழர்கள் இல்லையென்றால்  அங்கே விளைவித்திருக்க முடியுமா? ஆடுமாடுகள் போல இலங்கைக்கு அழைத்துச் சென்று,
 ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு  சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலட்சக் கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு நன்றியில்லாமல் விரட்டப்படனர்.

அன்றைய பர்மா( இன்றைய மியான்மர்)வில், ஜீவநதி ஐராவதி தீரத்தின் சமவெளியில்   உள்ள சதுப்பு நிலங்களைச் சீர்செய்து, பல லட்சம் ஏக்கர் நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்றியது தமிழன் தானே. இதற்கு ஒரு இலட்சம் தமிழர்கள் பர்மாவுக்கு அன்று சென்றார்கள்.

அதே பர்மாவை இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ஆக்கிரமித்தபோது மலேஷியத்  தமிழர்களை கைதிகளாக்கி அங்குள்ள காடுகளில் இரயில்பாதை அமைத்தபோது நோயாலும் , இயற்கைச் சீற்றத்தாலும் ஆயிரக்கணக்கானோர் இறந்தார்கள். இதற்காகவே அந்த இரயில்பாதையினை மரண இரயில்பாதை என்று பூகோளத்தில் அழைக்கப்படுகிறது.

சிங்கப்பூர் இன்றைக்கு வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் இவ்வளவு சிறபுகளை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு தமிழர்கள் உழைப்பே முக்கிய காரணம்.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழர்கள் எவ்வளவு பாதிப்புகளை அனுபவித்தார்கள், மொரீசியஸில் ஆரம்ப காலகட்டங்களில் தமிழன் பட்ட துன்பங்கள் தான் என்னென்ன?. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கரும்புத் தோட்டங்களுக்காக பிஜி தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர் இனம் என்ன சிரமங்களை எதிர்கொண்டது.

எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை 2009ல் முள்ளிவாய்காலில்,  நடந்தது என்ன? கிட்டத்தட்ட 1960களிலிருந்து ஈழத்தில் தமிழர்கள் சாகடிக்கப்பட்டு, 80களில் இனப்படுகொலையே நடந்தது.

இந்தியா ஒரே நாடுதான் என்றாலும் வறுமையில் வாடும் தமிழர்கள் பிற  மாநிலங்களுக்குப் பிழைப்புக்காகச் செல்லும் பொழுது என்னென்ன பாடுகள், என்னென்ன அவஸ்தைகள். பெங்களூருவில் பேப்பர் விற்கிறான். பேப்பர் குப்பைகளை அள்ளக்கூடியவனாகவும் வறுமைப்பட்ட தமிழன் இருக்கிறான்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்,சிறுமிகளைக் கடத்திச் சென்று பிச்சை எடுக்கவும், திருடச் செய்வதும் நடக்கின்ற செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கொடுமையிலும் கொடுமையாக சிறுமியர்களைக் கடத்திச் சென்று மும்பை, கல்கத்தா , பெங்களூரு போன்ற நகரங்களில் விபச்சாரங்களில் தள்ளுகின்ற செயல்களைச் சொல்லுகின்றபொழுது நம்மை அறியாமல் நெஞ்சம் கொதிக்கின்றது.

இப்படியான நிலையில் ஆந்திராவுக்கு மரம்வெட்டும் கூலியாகச் சென்று, வனங்களில் கைகளைக் கட்டிச் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் அப்பாவித் தமிழர்கள்  20பேரைச் சுட்டுக்கொன்ற அரக்கன்களை தண்டிக்கவேண்டாமா?

20பேரையும் நெஞ்சில் சுட்டது திட்டமிட்ட செயல் என்று தெரிகின்றதே? இதற்கெல்லாம் காரணம் என்ன?மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபொழுது தமிழகத்தின் பகுதிகளான சித்தூர், நெல்லூர், திருப்பதி, குப்பம் போன்ற பகுதிகளை  ஆந்திராவிடம் இழந்ததால் தான் தானே இந்தக் கெடுதல்கள்.

அதனால் தானே பாலாற்றிலும், பொன்னை ஆற்றிலும் பழவேற்காட்டு ஏரியிலும் தமிழருடைய அதிபத்யம் கைவிட்டுப் போய்விட்டது. இதுதான் அடிப்படைக் காரணம், இதை எத்தனை பேர் உணருவார்கள் என்று தமிழினம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய நேரம்.

இருபது பேர் திட்டமிட்டுச் சாகடித்த பின்னும் நாடு கொந்தளிக்கவில்லையே. இதேபோல  வடபுலத்தில் நடந்தால் சும்மா இருப்பார்களா?

எங்கள் எட்டையபுரத்தின் முண்டாசுக் கவி சொன்ன வரிகள் இன்றைக்கும் சிரஞ்சீவியாக நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.


விதியே விதியே தமிழ்ச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறிக்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையாய் இருந்து நின்னருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ ?
---
ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ்
செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை
யுள்ளதம் நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டு என துளம்
அழிந்திலேன் ...


*
-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
10-04-2015.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...