“சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே
நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?”
என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடலும்...
*******
“ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருகு போன்ற தான் கருத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி”
*******
“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே...”
******* போன்ற பாடல்களை இன்றைக்கும் கேட்கும் போது உழைக்கும்
தொழிலாளிக்கு வாழ்த்துகள் சொல்லி ஒரு சல்யூட் அடிக்க ஆசைப்படுவோம்.
நாட்டின் மூலதனத்தை விட தொழிலாளியின் சக்தியே வீரியமானது. அதனை நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். வேர்வை நிலத்தில் பட உழைக்கும் தொழிலாளி இல்லையென்றால் உலகில்
எந்தப் பராக்கிரமங்களும் கிடையாது.
எப்படித் தொழிலாளர்களை மேதினத்தில் நினைத்துப் பார்க்கின்றோமோ, அதுபோல விளைநிலத்தில் பாடுபடும் விவசாயிகளைக் கொண்டாட வருடத்தின் 365நாட்களில் ஒரு நாள் கூட கிடையாது.
பாடுபடும் விவசாயிகளைப் பற்றி எண்ணும் போது பட்டுக்கோட்டைக் கவிஞன் சொன்னது போல, “காடு வெளஞ்சென்ன மச்சான் –நமக்கு கையும் காலும் தானே மிச்சம்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.
“கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி ....” என்று பாடல்களில் தான் உள்ளது. “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்”,
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றார் அய்யன் வள்ளுவர்.
பாடல்களால் விவசாயத்தைச் சிறப்பிப்பது ஒருபுறம் இருந்தாலும் தங்கள் உழவுத் தொழிலை கொண்டாடுகின்ற தைத்திங்களை எல்லோரும் கொண்டாடினாலும், உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தங்கள் உழைப்பை, உழைப்பின் உன்னதத்தை மே 1-ம் நாளில் சிறப்பித்துக் கொண்டாடுவது போல,
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும் தாங்கள் படுகின்ற பாட்டைப் பாடுகின்ற வகையில், ”உழவர் தினம்” என்று வருடத்தில் ஒர்நாள் சர்வதேச அளவில் அறிவிக்கப்பட வேண்டும்.
இது விவசாயத்தையும், விவசாயத் தொழிலாளிகளையும் சிறப்பிக்கின்ற முக்கிய நடவடிக்கையாக அமையும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-04-2015.
No comments:
Post a Comment