என்றைக்கும் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய, திரு.பழ.நெடுமாறன் அவர்களுடைய புதல்வர் திரு.பழனி குமணன் அவர்களுக்கு 2015ம் ஆண்டிற்கான ஆன்லைன் இன்வட்ஸ்டிகேசன் ஜர்னலிசம் துறைக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான செய்தி இன்றைய தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
1917ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வரும் புலிட்சர் விருது ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு துறைகளுக்காக வழங்கப்படும் உயரிய விருது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள, கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. ஜோசப் புலிட்சர் என்ற பத்திரிக்கையாளர் பெயரிலே இந்த விருது வழங்கப் பட்டு வருகிறது. அதனை ஒரு தமிழராகிய திரு.பழனி குமணன் பெற்றிருப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பழனி குமணன் அவர்களைச் சிறுவயதிலிருந்தே கவனித்திருக்கிறேன். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். தந்தையார் பழ.நெடுமாறன் அவர்களைச் சந்திக்க வருபவர்களுக்கு சிரிப்போடு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவார். ஆனால் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்னால் வந்து நிற்பார்.
1981-82 காலகட்டத்தில் மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அவர்களது விவேகானந்தா அச்சகத்தின் எதிரே, ஒரு சைக்கிளும், சைக்கிள் ரிக்சாவும் மோதிக் கொண்டது. சைக்கிளில் வந்தவர் வயதானப் பெரியவர், அவரை உடனே தன் தந்தையின் உதவியாளரிடம், “அப்பாவிடம் எதுவும் சொல்லவேண்டாம் இவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று தன்கையிலிருந்த மொத்தப்பணத்தையும் கொடுத்தனுப்பினார்.
அந்தச் சிறுபிராயத்திலே அவருடைய பொறுப்புணர்வும், மனிதநேயமும் மெச்சக் கூடியவகையில் இருந்தது.
திரு. பழநெடுமாறன் அவருடைய மரியாதைக்குரிய மனைவியார் பார்வதி அம்மையார் அவர்களின் நான்கு பிள்ளைகளான பழனி குமணன், இனியன், பிரம்ம நாயகம், பூங்குழலி ஆகியோர் தங்கள் பாட்டனார், தாய், தந்தையார் போன்றே பண்பானவர்களாகவே இன்றைக்கும் திகழ்கின்றார்கள்.
திரு.பழ.நெடுமாறன் அவர்களுடைய மகள் பூங்குழலி, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம் வரைச் சென்று ஈழத்தமிழர் நலன்களுக்காக போராடிவருபவர்.
நீண்டகாலமாகவே அவர்களது குடும்பத்தோடும் தொடர்புடையவன் என்பதால் இவர்களது ஒவ்வொருகட்ட வளர்ச்சியிலும் பெருமிதம் அடைகிறேன். இவர்களுடைய பாட்டனார் அருளாளர். பழனியப்பனார் மதுரை திருவள்ளுவர் கழகத்தை நிறுவியது மட்டுமல்லாமல், தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்வேள். பி.டி.ராஜனுடன் இணைந்து மதுரைமாநகரில் இவர் ஆற்றியப் பணிகள் ஏராளம். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை முருகன் திருக்கோவிலுக்கும் பக்தர்கள் செல்லக்கூடிய வகையில் திருப்பணிகள் செய்தவர்.
கடந்த திங்கள்கிழமை, "வால் ஸ்ட்ரீட்' இதழ், இதழியல் துறையில் உயரிய விருதான புலிட்ஸர் விருதை தனது புலனாய்வுத் திட்டமான "மெடிகேர் அன்மாஸ்க்ட்' என்ற திட்டத்திற்காகப் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, செய்திகளை அளிப்பது குறித்துக் கண்டறிந்ததற்காக புலனாய்வு இதழியல் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசை, வால் ஸ்ட்ரீட் இதழின் கிராபிக்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்த மார்ட்டின் புர்ச், கிரிஸ் கேன்பி, மேட்லைன் பார்ஃப்மேன், ஜோன் கீகன், ஸ்டூவர்ட் தாம்சன் ஆகியோருடன் பழனி குமணன் பகிர்ந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துகள் திரு.பழனி குமணன்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-04-2015.
#
No comments:
Post a Comment