இந்துமகாசமுத்திரத்தை தன் ஆதிக்கத்தில் கொண்டு வரவேண்டுமென்று அமெரிக்கா, சீனா மற்றும் மேலை நாடுகளும் போட்டி போடுகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு இதனால் பாதிக்கப்படுமோ என்ற விவாதங்களும் ஒருபக்கத்தில் நடக்கின்றன.
இந்தியப்பெருங்கடல் இந்தியாவின் கடல். இந்தக்கடலில் அந்நியர்கள் புகுந்தால் அவர்களுடைய ஆதிக்கம் வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் உட்புகுந்து இந்தியாவிற்குப் பல சிக்கல்கள் எதிர்காலத்தில் வரும்.
இலங்கை அரசாங்கம் இராஜபக்ஷே ஆட்சியில் இருந்தபோது, சீனாவின் ஆதிக்கமும் இந்தியப்பெருங்கடலில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. இந்திராகாந்தி பதவியில் இருந்தவரை இந்தியப்பெருங்கடலில் அயலார்களின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது. அமெரிக்கா அமைத்த டீக்கோகர்சியா தளத்தைக் கூட இந்திராகாந்தியின் எச்சரிக்கையால் அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது.
இப்போது இந்துமகாக்கடல் குழப்பமான நிலையில் பல ஊடுருவல்களும், ஆப்பிரிக்க கடல் கொள்ளையர்களும், ஆதிக்கம் செலுத்தும் இடமாக அதிகரித்துவருகின்றது. இவற்றைக் குறித்து கடந்த பதிவுகளில் சற்று விரிவாகச் சொல்லியிருந்தேன்.
இந்துமகாக்கடலில் பல சின்னஞ்சிறுத் தீவுகள் உள்ளன.
அவற்றில் சிலத் தீவுகளில் பூர்வகுடிகள் மட்டுமே வாழ்கின்றனர். அவர்கள் வெளிநாட்டவர்கள் யாரையும் உள்ளே நுழைய அனுமதிப்பது கிடையாது. தங்களுடைய பழமையான அடையாளங்களோடே இன்றும் வாழ்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு தீவைக் குறித்து ஏடுகளில் வந்த செய்தித் துளிகள் சில.
***
இந்தியப் பெருங்கடலில்அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகில் சென்டினல் தீவு அமைந்துள்ளது. வெளியுலகத் தொடர்புகள் ஏதுமற்று மனிதர்கள் வசிக்கும் மிகப் பழமையான தீவாக செண்டினல் தீவு கருதப் படுகிறது.
60 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இதே தீவில் வசிக்கும் பழங்குடிமக்களை 2004ம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலைச் சீற்றத்திற்குப் பிறகு ஆய்வு செய்யச் சென்ற இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மீது கற்களையும் தீவட்டிகளையும் கொண்டு எறிந்து தாக்கியுள்ளார்கள்.
மிகவும் அழகுவாய்ந்த இந்தத் தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்ற தீவாகவே கருதப்படுகிறது. அடர்ந்த காடுகள் மற்றும் கடற்கரைகள் கொண்ட இத்தீவு சுற்றுலா பயணிகள், மீனவர்கள் என யாரும் கால் வைக்க முடியாத படி பழங்குடியினரால் பாதுகாக்கப் பட்டுள்ளது. அந்நியர்கள் யாரும் கால்வைக்க முடியாது என்ற புகழை சென்டினல் தீவு பெற்று உள்ளது.வெளியுலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கு வசிக்கும் பழங்குடியினர் எதிரியாகவே பார்க்கின்றனர். அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ள முடியாத சூழலே இன்றும் உள்ளது.
தீவில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் இருக்கலாம் என்று முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2006-ம் ஆண்டு இரண்டு மீனவர்களை கொலை செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கற்கால பழங்குடியினர் என்றே கருதப்படுகின்றனர். சென்டினல் தீவே உலகில் மிகவும் தனிமை படுத்தப்பட்ட தீவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்டினல் தீவை ஆய்வு செய்யச் சென்ற இந்திய விமானப்படையினர் இம்மக்களைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். தொடர்ந்து பழங்குடியின மக்களை தொடர்பு கொள்ள இந்திய அரசானது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலே முடிந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி அமைந்து உள்ள மன்ஹாட்டன் தீவை போன்று அமைந்து உள்ள சென்டினல் தீவில் பழங்குடியினர் விவகாரத்தில் தலையிடுவதை அரசு நிறுத்திக் கொண்டது. இதற்கிடையே சென்டினல் தீவில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்வது குற்றம் என்றும் அதன்பிறகு பாதுகாப்பை காரணம் காட்டி யும் அரசுகள் இப்பழங்குடி மக்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிட்டு விட்டது. சென்டினல் தீவை சுற்றிலும் 3மைல் தொலைவு பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வைவல் இன்டர்நேஷனல் இயக்குனர் ஸ்டீபன் கொர்ரி, “இந்தியாவின் அந்தமான் தீவில் உள்ள பழங்குடியின மக்கள், 1800-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தபோது பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட, “போ” பழங்குடியினத்தை சேர்ந்த கடைசி ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இதேபோன்ற நிலை வடக்கு சென்டினல் தீவில் உள்ள பழங்குடியினருக்கும் ஏற்படாது, அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை அந்தமான் அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்”என்று தெரிவித்து உள்ளார்.
வெளியாட்களிடம் இருந்து எச்சரிக்கை இருந்தாலும் தீவில் உள்ளவர்கள் உடல்நலத்துடனும், எச்சரிக்கையுடன், செழிப்புடனும் வாழ்கின்றனர், அவர்கள் பழைய வாழ்க்கை முறையுடனே வாழ்ந்து வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டின் இறுதி மற்றும் 1990-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆயுதம் தாங்கியவர்களுக்கும் - பழங்குடியினத்தவர்களுக்கும் இடையிலான மோதலில் பல பழங்குடியினர் உயிரிழந்தனர். ஆயுதம் தாங்கியவர்கள் உடந்தை கப்பல் பாகம் மற்றும் இரும்பை மீட்க சென்றவர்கள் என்று கூறப்படுகிறது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment