Monday, January 31, 2022

#இந்தியாவின்_75வது_ஆண்டு_பட்ஜெட்.

#இந்தியாவின்_75வது_ஆண்டு_பட்ஜெட்.
-------------------------------


 மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23-ஐ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை,பிப்ரவரி 1ம் தேதி அன்று காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யவுள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் இறுதி கட்ட நடவடிக்கையை குறிக்கும் வகையில், இதன் தயாரிப்பில் ஈடுபட்ட நிதியமைச்சக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வழக்கமாக இந்தப் பணி அல்வா தயாரிப்புடன் நடைபெறும். இந்தாண்டு பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக அல்வா தயாரிக்கும் விழாவுக்கு பதிலாக இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிதிநிலை அறிக்கை ரகசியத்தை பராமரிக்க, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், நிதி நிலை அறிக்கை வெளியாகும் வரை, பட்ஜெட் பிரஸ் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்திலேயே தங்கியிருப்பர். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்பே, இந்த  அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வர். 

 மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22, முதல் முறையாக காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்பட்டது.  மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த செயலியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டது. அதேபோலவே, 2022-23 மத்திய  நிதிநிலை அறிக்கையும், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பின்பு கைப்பேசி செயலியில் கிடைக்கும்.

 இந்த கைப்பேசி செயலியில், பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை,  மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை  முழுமையாக பார்வையிடலாம். ஆங்கிலம்,  இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும்.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 75 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தை சேர்ந்த, நீதிக் கட்சியில் இருந்த, கோவை ஆர்.கே.எஸ்.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார், நேரு பிரதமராக இருந்தபொழுது.  எத்தனையோ  மாற்றங்கள் பட்ஜெட்டுகளில். 

அன்றைக்கு நேரு அவர்கள், ரஷ்யாவில் திட்டங்களின்படி ஐந்தாண்டு திட்டத்தை இந்தியாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். திட்டக்குழு இருந்தது. இன்றைக்கு நிதி ஆயுக் என்று அது மாறிவிட்டது. 

ஒரு நீண்ட தொடர் பயணமாக இந்திய பட்ஜெட்டுடைய பரிணாமங்கள், வளர்ச்சியும், நிறைகளும், குறைகளும் அடங்கிய வண்ணமே உள்ளன. மாநில அதிகாரங்களும் சில நேரங்களில் இந்த பட்ஜெட் தாக்கலின்போது பாதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் 25வது ஆண்டு பட்ஜெட்டை ஒய்.பி.சவான் நிதியமைச்சராக இருந்து தாக்கல் செய்தார். அதேபோல ப.சிதம்பரம் 50வது ஆண்டில் தாக்கல் செய்தார். இப்போது 75 வது ஆண்டில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கின்றார். அன்றைக்கு சண்முகம் செட்டியார் பட்ஜெட் தாக்கல் செய்ய இருந்த போது, பல மாதிரியான நெருக்கடியான சூழ்நிலைகள்‌, இந்தியா முன்னேற வேண்டும், பிரிட்டிஷார் விட்டுச் சென்ற நிலையில், நாட்டில் உள்ள வருவாய்களை கூட்டி, மேலும் வளப்படுத்தி,  நாட்டுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பணிகள் அன்றைக்கு இருந்தது. 

நேரு நம் நாட்டை தொழில் மயமாக்க வேண்டுமென விரும்பி பல்வேறு முனைப்புகளை காட்டிய வகையில், அவருடைய காலம், அதாவது நேரு- சாஸ்திரி காலம் வரை அது ஒரே போக்கில் பட்ஜெட் சென்றது. பிறகு இந்திரா காந்தி பிரதரமாக வந்தபிறகு  ஒரு சில மாற்றங்கள் வந்தன. கல்வி முறைகளில் மாற்றம் வரவேண்டும், அதே போல பசுமைப்புரட்சி என்று சி.சுப்பிரமணியம்  காலத்தில் விவசாயத்தில் கொண்டு வந்து, நம்முடைய தற்சார்பு விவசாயம் அழிந்து, பாரம்பரிய விவசாயம் அழிந்து அதில் பல சிக்கல்களும் வந்தன. அன்றைக்கு இந்தியாவில் உணவுப் பஞ்சம் வேறு இருந்தது. ஒரு கட்டத்தில் அனைவருக்கும் உணவு, உடை, வீடு என்ற கோஷத்தை இந்திராகாந்தி முன்னெடுத்தார். 

ஒரு பக்கத்தில் சோஷலிஸ்டுகளாக  இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன், லோகியோ போன்றவர்களெல்லாம் சோஷலிஸ்ட் முறைகள் நடைமுறைக்கு வரவேண்டும் என்று  குறிப்பிட்டார்கள். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்முனையில் இருந்து தங்கள் கடமைகளை ஆற்றினர். 

இந்த காலகட்டத்தில் 1967ல் திராவிட இயக்கம் தமிழகத்தில் வலுப்பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. மாநில சுயாட்சி என்ற குரலும், அண்ணாவின் கொள்கையை தலைவர் கலைஞர் முன் நிறுத்தி குரல் கொடுத்தார். இதற்கும் பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கக் கூடாது. நிதி ஆதாரங்களை, அதன் சம்பந்தமான தொகுப்புகளை சரிசமமாகப் மாநிலங்களுக்கு பங்கிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் இருந்தது. 

அதன்பின் எத்தனையோ மாற்றங்கள், இந்திராகாந்தி மறைவு, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்து தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அதற்கான முன்னெடுப்பு திட்டங்கள் நிதி அறிக்கையில் இருந்தன. ராஜீவ் காந்திக்கு பிறகு வி.பி.சிங், அவர் காலத்தில் நிதி அறிக்கையில் பெரிதாக ஒன்றுமில்லை, அதுவும் ஓராண்டு தான் தாக்கல் செய்யப்பட்டது. 

நரசிம்மராவ் காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சர். நெருக்கடியான கட்டம். சந்திரசேகர் காலத்தில் நம்மிடமிருந்த தங்கத்தை வெளியே அடகு வைத்தோம். அதை மீட்டோமா, இல்லையா என்று தெரியவில்லை. பிறகு நரசிம்மராவ் காலகட்டத்தில், பொருளாதார ரீதியாக ஒரு முக்கியமான காலகட்டம். அன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கையும்,டங்கல் திட்டத்தின்படி தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற நிலைக்கு இந்தியா வந்தது. அதற்குப்பிறகு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் மாற்றங்கள் எழுந்தன. 

அதற்குப் பிறகு தேவகவுடா, குஜரால் காலங்களில் சிதம்பரம் 50ம் ஆண்டு நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். மராட்டியத்தை சேர்ந்த ஒய்.பி.சவான் 25வது ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். மூத்த அமைச்சர், காங்கிரஸின் மூத்த தலைவர். அப்போது தேவகவுடா, குஜரால் பிரதமராக  இருந்தபோது ஒரு நிலையற்ற அரசாங்கம் அமைந்தது. கூட்டணி சேர்ந்து அன்றைக்கு மத்தியிலே ஒரு ஆட்சி அமைந்தது, ஒன்றரை இரண்டு ஆண்டுகள் கடந்தன. 

அதன்பிறகு, அந்த ஆட்சிக்குப்பின் வாஜ்பாய் பிரதமர் ஆகி ஐந்து ஆண்டுகள் இருந்தார். யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் போன்றவர்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது தான், தமிழகத்தில் சேதுக்கால்வாய் திட்டத்தை அறிவித்தார்கள். அப்போதும் நரசிம்மராவினுடைய கொள்கையின் தாக்கங்கள் அடிப்படையில் தான் நிதிநிலை அறிக்கைகள் இருந்தன. 

பிறகு மன்மோகன் சிங் பிரதமர். இந்த காலகட்டத்தில் சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்கள். மன்மோகன் சிங் உடைய ஒரு பொருளாதார பார்வையில், அவருடைய பரிந்துரையில் 2004 லிருந்து 2014 வரை உலகமயமாக்கல் என்ற நிலையில், அன்றைய பட்ஜெட்டுக்குள் அமைந்தன. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இன்றைக்கு நிர்மலா சீதாராமன் உடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தாலும், சில குறைகளும் நிறைகளும் உண்டு. 

இன்றைக்கு 75வது ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இன்றைக்கு பட்ஜெட் தாள்களாலான ஆவணங்கள் இல்லாமல், அனைத்தும் இணையம் வழியாக தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முன்னால் பல தரப்பினருடன் விவாதங்கள் நடத்தி, ஆலோசனைகள் பெற்று என்னென்ன, எம்மாதிரியான பட்ஜெட் தயாரிக்கலாம், தொழில்துறையில் விவசாயத்தில், கல்வித்துறையில், மருத்துவத்துறையில் என்று, ஒரு மாதம் இரண்டு மாத காலம் பல்வேறு தரப்பு தொழிற்சங்கவாதிகளுடன் ஆலோசனை நடத்தி தாக்கல் செய்வது ஒரு வாடிக்கை. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னால் அந்த பட்ஜெட் ஆவணத்தை மிகவும் ரகசியமாக, யாருக்கும் தெரியாமல், மூடிய பெரிய அச்சகத்திலிருந்து அடித்து, அவர்களை வெளியே விடாமல், தாக்கல் செய்த பின்புதான் அந்தப் பணியாளர்கள் வெளியே வருவார்கள். அதுதான் மரபு. அதுபோல அந்த பணியில் இறுக்கம் இருந்த காரணத்தினால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இனிப்பு கொடுப்பது வழக்கம். அதாவது அல்வா மாதிரி தயாரித்து நிதி அமைச்சர் முன்னிலையில் அவர்களுக்கு வழங்குவது போல எல்லாம் நடப்பது வழக்கம். இது எப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் பற்றி நான் கடந்த காலத்தில் எழுதிய விரிவான பதிவுகளும் உள்ளன. பட்ஜெட்டும், நம்முடைய அரசியல் அமைப்பு சட்டமும் தான் நம்மை வழிநடத்துகின்றன. அது முக்கியமான விடயமும் கூட. பட்ஜெட்டை பொறுத்தவரை, மத்திய பட்ஜெட் பிரதானமானது. அதைப் பொறுத்து பல்வேறு திட்டங்கள் மாநில வாரியாக பெறக்கூடிய திட்டங்கள் எல்லாம் அதில் குறிப்பிடப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும், சட்டமன்றங்களில் அந்த மாநில நிதி அமைச்சர்கள், நிதி அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அந்த மாநிலத்தில் இருக்கும் வருவாயைப் பொறுத்து, அங்கே கிடைக்கின்ற வருவாயைப் பொறுத்து, மத்திய தொகுப்பிலிருந்து எவ்வளவு நிதி வருகிறது, இது குறித்தான பல்வேறு குழுக்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறது. அந்தக் குழுக்களுடைய பட்டியல் ஒரு நீண்ட பட்டியலாகும். இப்படியான முறையில் மத்திய அரசினுடைய நிதிநிலை அறிக்கை என்பது ஒரு பிரதானமான விடயமாகும்.

 மத்திய அரசினுடைய நிதி அறிக்கையில், என்ன வருகின்றது என்று எதிர்பார்ப்போடு நிதி நிலை தாக்கல் செய்யும் நிலையில், பல தரப்பினரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். நிதிநிலை அறிக்கை பல காலங்களில் பிப்ரவரி 28ஆம் தேதி மாலைப்பொழுதில் தாக்கல் செய்வது வாடிக்கை. தற்போது சில ஆண்டுகளாக அதை காலையிலேயே தாக்கல் செய்யக் கூடிய நிலையில் மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று நோய் பாதிப்பின் காரணமாக, பல்வேறு சூழலில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். கடந்த 2021-22 நிதி அறிக்கை தாக்கல் செய்யும் பொழுது, தொற்று நோய் குறித்தான வகையில், என்ன செய்யலாம், அதை கடந்து முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், 2021-22 இல் காணப்பட்ட ஜிடிபியில் 9.5 புள்ளி நிதி பற்றாக்குறையை அடுத்த 5 ஆண்டுகளில் ஜிடிபி ஐ 4.5 புள்ளியாக கொண்டு வருவதென்பது என்று ஒரு இலக்கை அன்றைக்கு அறிவித்தார். 

15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது. நிதியமைச்சர் எதிர்பார்த்ததை போல நிகழாண்டில் வருவாய் பற்றாக்குறையை ஜிடிபி ஐ 6.8 என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஜிடிபி வளர்ச்சி பட்ஜெட் இலக்கை விட அதிகமாக இருக்கும் என்று நினைக்கக் கூடிய அளவில், சூழல் அமைந்தது. மத்திய அரசின் வரி வருவாய் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம். நிகழாண்டில் மாதம் ஒத்த வரி 15.4 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. நேரடி வரி, மறைமுக வரிகள் எதிர்பார்த்தபடி அதிகமாக கிடைத்துள்ளன. இன்றைக்கு நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்பது நல்ல முடிவல்ல. நீண்டகாலமாக அதை கட்டிக்காத்து, பாதுகாத்து வருகின்ற ஒரு பாரம்பரியமான, ஒரு கம்பீரத்தை இன்றைக்கு நாம் இழந்து வருகின்றோம். ஏர் இந்தியாவை திரும்பவும் டாடாவுக்கு விற்டுவிட்டோம். இப்படியான சில குறைகள் உள்ளன. இது கடந்த வந்த புதிய பொருளாதார சூழ்நிலை, அதாவது மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட காலத்திலிருந்தே இதற்கான சூழல் அமைந்துவிட்டது. அன்றைக்கு நரசிம்மராவ் இந்த நிறுவனங்களை விற்கலாமா என்று வைத்த தீர்மானத்தால் தான், இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் கையிலிருந்து தனியாருக்கு செல்கின்றது. இன்றைக்கு என்ன நிலைமை? நிதிப்பற்றாக்குறை, இது மட்டுமல்ல விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், அதேபோல சமூகம் சார்ந்த மதம், ஜாதி என்ற பிரச்சினைகளில் நம்மிடம் முன்னேற்றத்திற்கான தடைகள் என்று வைத்துக்கொண்டாலும், பல்வேறு இனங்கள் பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியாவில் இதையும் தாண்டி நிதியும் சமூக அமைப்பும் தன் பணியை செய்து கொண்டிருக்கின்றன. சிக்கல்கள் இருந்தாலும் செய்யவேண்டிய பணிகள் ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டு சிக்கலைத் தீர்த்து கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் சண்முகம் செட்டியார் விதைத்த விதைதான் இன்றைக்கு தாக்கல் செய்கின்ற நிதி அறிக்கைகளின் முன்னெடுப்புனுடைய முக்கியமான அணுகுமுறையாகும். 

சண்முகம் செட்டியார் என்ற தமிழர் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விடுதலை பெற்று 50 ஆவது ஆண்டு பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இன்றைக்கு நிர்மலா சீதாராமன் செய்கிறார் என்றால் டெல்லி மத்திய சர்க்கார் வரலாற்றில். தமிழகம் என்றும் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இது மட்டுமல்ல வெவ்வேறு காலகட்டங்களில் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் சி.சுப்பிரமணியம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் எல்லாம் மனதில் கொள்ள வேண்டும். ஓரளவு தமிழ்நாட்டில் இருந்து சென்ற மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் முக்கிய கட்டங்களில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பது தமிழகத்தின் பெருமையாகும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
31-1-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...