Saturday, January 8, 2022

#மார்கழி_திருப்பாவை_அரையர்_சேவை_திருவில்லிபுத்தூர்.

#மார்கழி_திருப்பாவை_அரையர்_சேவை_திருவில்லிபுத்தூர்.
——————————————————-
அரையர் சேவை, திருப்பாவை என்பது மார்கழி மாதங்களில் முக்கியமாக கொண்டாடப்படுகின்ற விஷயமாகும். திருவில்லிபுத்தூர், திருவரங்கம் மற்றும் ஏனைய வைணவ திவ்ய தேசங்களில் அரையர் சேவை முக்கியமானது. மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். பாவை நோன்பும், திருப்பாவையும்  நினைவில் வரும். ஆண்டாள் நினைவுக்கு வந்தாலே, அவள் பிறந்த திருவில்லிபுத்தூர் நினைவில் வரும்.

அதிகாலை பனி வேலையில் அரைத்தூக்கத்தில் திருப்பாவை கேட்பது என் போன்றோருக்குச் சுகம். முன் நாட்களில்(1960களில்)விடியலில் அகில  இந்திய ரேடியோவில் தூத்துக்குடி வஉசி கல்லூரி முதல்வர் சகித்திய அகாடமி  விருது பெற்ற மறைந்த  அ.சீனிவாசராகவனின் திருப்பாவை அழகு தமிழில் கவிதை வரிகள் உரையை போர்வை போர்த்தி தூக்கத்தில் கேட்க இதமாக இருக்கும்,




மார்கழி அரையர்சேவை விமரிசையாய் நடைபெறும். அதிலும் திருவில்லிபுத்தூர் ,  நம் அரையர், சொல்லவே வேண்டாம்,. அவருடைய வியாக்கியானங்களும், அபிநயங்களும் அரையர் சேவையின் உச்ச வெளிப்
பாடுகள்.

அத்யயனோற்சவ காலம்பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள்
ஜனவரி மூன்றாம் (03.01.2022) தேதி தொடங்குகியது. இச் சமயங்களில் அரையர்  அழகிய மணவாளப் பெருமாள்  அரையர் என்று அருளிப்பாடிட்டு மாலை பரிவட்ட மரியாதைகளோடு அன்றைய பாசுரங்களும் வியாக்கியானங்களும் சிறப்பாக நடைபெறும். 

முதலில்  இசையாய், பின்னர் அபிநயமாய்,அதன் பின்னர் வியாக்கியானமாய். ஒவ்வொரு நாளும் வியாக்கியானங்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது நீடிக்கும். வியாக்கியானம் முடிந்தவுடன் தினமும் அரையர் சேவைக்கான சம்பாவனை கேட்க. அவரவர்கள் தங்களின் பெயரைச் சொல்லி சமர்ப்பிப்பார்கள். இது திருவில்லிபுத்தூர் நடைமுறை.

சம்பாவனை முடிந்தவுடன் அன்றைய வியாக்கியான பாசுரத்தைத் தொடங்கி வைக்க கோஷ்டியார் ஏனைய பாசுரங்களை சேவித்து சாற்றுமுறையோடு அரையர் சேவை நிறைவடையும்.

திருவில்லிபுத்தூர் அரையரின் தந்தையார்  அரையர் சேவைக்காக 2013ல் குடியரசுத்தலைவர் விருதினைப் பெற்றவர்.

நாச்சியார் திருமொழி, திருப்பாவை என்ற இவ்விரு பக்தி பனுவல்களும்  வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில்  ஒருவரே பெண்ணாவார்,  பெரியாழ்வரின் திருமகள் ஆண்டாள் செய்தவையாகும்.
இவர் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.  

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாகக் காணப்படுகின்றது. இவை இரண்டும் அற்புத தமிழில் பாடப்பட்டது.கோதையின் தமிழ்…..

நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவதாக வைக்கப்பட்டிருப்பது - திருப்பாவை.

திருப்பாவை பாக்கள் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை - முப்பதும். கரவேல் என்பதன் இலக்கணக்குறிப்பு - எதிர்மறைஏவல் வினைமுற்றுபாவைஎன்பதுவகைகளுள் ஒன்று - சிற்றிலக்கியமாகும்

ஆழி என்பதன் பொருள் - கடல், சக்கரம்.உதைத்த என்பதன் இலக்கணக்குறிப்பு - பெயரெச்சம்
பெய்திடாய்என்பதன்இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று

திருப்பாவை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் விடியலில் பனிப்பொழிய, முற்பனிக்காலத்தில் பாவையிசையோடு கேட்பது தனி சுகம்தான்.

#KSRPost
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
08-01-2022

No comments:

Post a Comment

*Sometimes you might feel like giving up on everything*.

*Sometimes you might feel like giving up on everything*. You might have both good  and bad days, but more bad than good or so it seems. Ever...