Saturday, January 1, 2022

#புத்தாண்டு_2022ம்_செய்யவேண்டிய_பணிகளும்_தீர்மானங்களும்.

#புத்தாண்டு_2022ம்_செய்யவேண்டிய_பணிகளும்_தீர்மானங்களும். 
——————————————————-
My experiments with silence…….                             எங்கோ தென் திசையில், வானம் பார்த்த கந்தக பூமியில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, இன்றைக்கு 50 ஆண்டு மேலாக அரசியல் வாழ்க்கையை கடந்து,  எந்தவித அங்கீகாரமும் இல்லாமல், பணிகள் மட்டுமே தொடர்ந்து, எந்தவிதமான வசதியும் இல்லாமல் பயணிக்கின்ற வாய்ப்பை இயற்கை அடியேனுக்கு வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தியாகும். 

வழக்கறிஞர், அரசியலாளர், Arbitrator (மத்தியஸ்தர்), கிரா வின் கதைசொல்லியை ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நடத்தியது. பொதுநல வழக்குகளை விவசாய போராட்ட காலத்திலிருந்து நதிநீர் பிரச்சனைகளிலும் உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றங்களில், இன்று வரை 45க்கும் மேலான பொதுநல வழக்குகளை 1977 காலகட்டங்களில் இருந்து இன்று வரை தாக்கல் செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ள திருப்தி எனக்கு இருக்கிறது.  தேர்தல் களத்தில் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் சிலரால் தகுதியே தடை என தடைகளும், தடங்கல்களும்,  முதுகில் குத்துவது நடந்தாலும் இன்றும் ஜீவிக்கின்றேன். இயற்கை எனக்கு வழிகாட்டுகின்றது. 




அந்த வகையில் 50 ஆண்டுகளைக் கடந்து வந்த இந்த  அரசியல் பயணத்தில் தொடர்ச்சியாக பணிகள் இருந்துகொண்டே இருக்கின்றது, தனிமனிதனாக இயங்கிக் கொண்டு இருக்கின்றேன். செய்யவேண்டிய பணிகள் காத்திருக்கின்றன. 

அவை;

1)11வது உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டிய பணிகள் உள்ளன. 

2)ஏற்கனவே குறிப்பிட்டவாறு 45 பொதுநல வழக்குகளில்;
இன்றைக்கு நிலுவையிலுள்ள 
1. மேற்கு தொடர்ச்சி மலை கிழக்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு. 
2. தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தான வழக்கு. 
3. தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை குறித்தான வழக்கு. 
4. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஒலி எழுப்பான்கள் பிரச்சனையும், கார்பன் வாயு வாகனங்களால் வெளிவருவதும் குறித்த வழக்கு, 
இப்படி மனித உரிமை ஆணையத்திலும் சில வழக்குகள் உள்ளன. 

இது மட்டுமல்ல, நூல் பணிகள் இருக்கின்றன. அவை 

1. கரிசல் காட்டின் கவிதை சோலை பாரதி (விலையற்ற-800 பக்கங்கள் ) நூல்களை அச்சடித்து வந்துவிட்டது. முறையாகஅனைவருக்கும்,நூலகங
களுக்கும், கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
 2. கி.ரா நினைவுத் தொகுப்பு ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. (400 கட்டுரைகள் பெறப்பட்டு அதில் 160  கட்டுரைகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.)
 3. தமிழகத்தில் 1966 இருந்து 1992 வரை நடந்த விவசாய சங்க போராட்ட வரலாறை விரிவாக இரண்டு தொகுதிகள், ஏறத்தாழ 700 பக்கங்கள் வருகிறது. 
4. தமிழகத்தில் உள்ள 70  நதிநீர் பிரச்சினைகளை விரிவாக 800 பக்கங்களுக்குகான நூல் தயாராகி கொண்டுள்ளது. 
5. தினமணி கட்டுரைகள் தொகுப்பு. 1978 முதல் நான் தினமணியில், தமிழ் இந்து, சுதேசமித்திரன், ஆங்கில பத்திரிக்கைகளில் எழுதிய தேர்வு செய்யப்பட்ட 600 மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன, 1000 பக்கங்கள் மேல் கொண்ட நூலாக தயாராகிக் கொண்டிருக்கின்றது. 
6. தமிழக உரிமைகள் மற்றும் பிரச்சனைகள் தொகுப்பு, அதுவும் 500 பக்கங்கள் வரை வருகின்றது. அறியப்படாத உரிமைகளும், இன்றைக்கும் பேசப்படாத பிரச்சனைகளும் இதில் உள்ளன. பார்த்தாலே சிலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். அதற்கு உதாரணம், தமிழகத்தில் சென்னைக்கு வடக்கே சோழாபுரம், உளுந்தூர்பேட்டை, சிவகங்கை மாவட்ட செட்டிநாடு, கோவில்பட்டி, கயத்தார் போன்ற இடங்களிலுள்ள விமானநிலையங்கள் 70 ஆண்டுகளாகியும் பயன்படுத்தாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அறியப்படாத செய்திகள், தமிழக உரிமைகள், பிரச்சினைகளின் ஆய்வு கட்டுரைகளாக வர இருக்கின்றன. 
7.  நிமிர வைக்கும் நெல்லை, ஐந்தாம் ஐந்தாம் பதிப்பாக வருகின்றது. இரண்டு தொகுதிகளாக வருகின்றது. இது  அனைவராலும் வரவேற்கப்பட்ட நூல். 2004ல் முதன் முதலாக வெளியிடப்பட்டது. 
8. கனவாகிப் போன கச்சத்தீவு இரண்டாவது பதிப்பாக வர இருக்கின்றது. 
9. தமிழக மேலவை இதுவும் இரண்டாம் பதிப்பாக வரவிருக்கிறது. 
10.தூக்குக்கு தூக்கு இரண்டாம் பதிப்பாக வரவிருக்கிறது. 
11. கி.ரா அவர்கள் எனக்கு எழுதிய கையெழுத்துப் பிரதிகளை தொகுத்தும், அவர் எழுதிய கடிதங்களும் சிறப்பு வெளியீடாக அவர் நூற்றாண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
12. மாநில சுயாட்சி குறித்தான என்னுடைய கருத்துக்கள் அடங்கிய இதுவரை பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுப்பான நூல். 
13. கடந்த 1975 முதல் உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு ஆணையங்களில் தொடுத்த பொதுநல வழக்கு சம்பந்தமான மனுக்களும் உத்தரவுகளும் கூடிய ஆங்கில தொகுப்பு, 
இவை மட்டுமல்ல என்னுடைய ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, அரசியலில் நான் பார்த்த நிகழ்வுகள், நான் சந்தித்தவர்கள், நான் கடந்து வந்த பாதை குறித்தான ஒரு தொகுப்பு, மூன்று தொகுப்புகளாக ‘நெஞ்சில் பதிந்த சுவடுகள்’என்று எழுதிக் கொண்டு வருகின்றேன். அடுத்தாண்டு அது நிறைவுக்கு வரும். இப்படி பல நூல்கள் வெளியிட வேண்டிய நிலையில் நூல்கள் வெளியீட்டு பணிகளும் அதை உருவாக்கும் பணிகளும் அதை ஆக்கும் பணிகளும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக கருதி பணிகள் செய்ய வேண்டும். 

அதுமட்டுமல்ல அடுத்து தனிப்பட்ட வகையில அரசியலாளர் என்ற நிலையில்  பல்வேறு ஆதாயம் கருதாத களப்பணிகள், அடுத்து ஈழத்தமிழர் பிரதிநிதிகள் இந்தியா வருவதையொட்டி ஒரு விரிவான சந்திப்பு ஏற்படுத்தி, மீனவர் பிரச்சினைக்கும், ஈழத்தமிழர் பிரச்சனைக்கும்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டிய பணி. 

இதை தாண்டி  எனக்கு தனிப்பட்ட வகையில் வழக்கறிஞர் ரீதியாக ஆர்பிட்டேடராக இருக்கும் வழக்குகளை விசாரிக்க வெளிமாநில பயணத் திட்டங்கள், 
என்னுடைய கிராமத்தில் விவசாய பணிகளை சற்று சீர்திருத்தம் செய்ய வேண்டியது, 

இவை மட்டுமல்ல இதுவரை செல்லாத நாடுகளுக்கும், இந்தியாவிலுள்ள செல்லாத  பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை. 

இதுவரை சேகரித்த 25000 வரை உள்ள நூல்களில் படித்து மீதி உள்ள நூல்கள்  சிலவற்றை பிரித்து சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் வழங்கக்கூடிய பணிகளும் உள்ளன. 

இப்படியாகத் இந்தாண்டு முழுமையாக பல்வேறு பணிகள் உள்ள ஆண்டாக இருக்கும். 

கிராமத்தில் பிறந்தோம், தவழ்ந்தோம், வளர்ந்தோம், கல்வியை கற்றோம். கடந்த 1971முதல்காமராஜர், இந்திராகாந்தி காலம் முதல் பிரபாகரன் கலைஞர் என பல தலைவர்கள் வரை அரசியல் களத்தில் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவில் இருந்துவிட்டோம் இதைவிட வேறு என்ன வேண்டும் என நிம்மதியோடு இருக்கின்ற எஞ்சிய காலத்தில் நமக்கான பணிகளும், கடமைகளையும் செய்வோம். எந்த அரசியல் ஆதாய அங்கீகாரத்துக்கோ எதிர்பார்க்காமல், வந்தால் வரட்டும், வரவில்லை என்றால் அதைப்பற்றி ஒன்றுமில்லை. ஒரு காலத்தில் இதை பற்றிய அக்கறையும் ஆர்வமும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. படிப்படியாக வயது மட்டுமல்ல ஒரு முதிர்ச்சி, இதன் காரணமாக இதெல்லாம் பெரிதாக தற்பொது தெரியவில்லை. நம்ம பணியை நாம் செய்து கொண்டிருப்போம். அடுத்தவர்கள் எவரையும் குறை பார்க்காது, குறை ஒன்றும் இல்லை என்று, நிமிர்ந்து நடந்து நமக்கான கடப்பாடுகளை கவனிப்போம் என்று உறுதி கொண்டுள்ளேன். அதறக்கு புத்தாண்டு 2022 இதற்கு இடம் கொடுக்க வேண்டும். இயற்கையை அதற்கான வழிவகை செய்யும்  என்று இயற்கையை வேண்டுகிறேன். 

யாரும் எந்த சூழ்நிலையிலும் துவண்டு விடாதீர்கள்...

காலம் வரும், காட்சிகள் மாறும்... உங்கள் கனவு, லட்சியம் பழிக்கும்... நினைத்தது நிறைவேறும்...


(படம்நான் பிறந்து வளர்ந்த கிராமத்து வீடு, என் வீட்டின் தலைவாசல், என் வீட்டின் முற்றம், இதில்தான் பிறந்து, தவழ்ந்து 1950 காலக்கட்டங்களில் விளையாண்டு, தவழ்ந்து எனக்கு சூரியனையும் சந்திரனையும் வானத்தையும், வெளி உலகத்தையும் காட்டிய இந்த இடம்தான், இந்த முற்றம் தான் எனக்கு சிறு பிரயத்தில் எல்லாமே……)




கே. எஸ். இராதாகிருஷ்ணன்
1-1-2022


2 comments:

  1. புதிய ஆண்டு தீர்மானமும் பணிகளும் விரைந்து நிறைவேற வாழ்த்தும்...
    துறையூர்கிமூ

    ReplyDelete
  2. 2022 ஆம் ஆண்டில் தங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
    தங்களுக்கு எந்த வகையிலாவது தோளோடு தோள் நிற்கவும் விரும்புகிறேன், சரவணன் 🙏

    ReplyDelete

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...