Sunday, January 9, 2022

#ரசிகமணி_டிகேசியின்_கம்பர்_தரும்_ராமாயணம். இன்றைய(9-1-2022) தினமணி கலாரசிகனில்….



•••••
சென்ற வாரம் ஒரு நாள் மயிலாப்பூர் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சட்டென "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாஸனின் நினைவு வந்தது. அவரை சந்தித்துப் பல மாதங்களாகிவிட்டதே, ஒரு எட்டு பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தேன்.

வழக்கம்போல, புத்தகப் பொக்கிஷக் குவியலுக்கு நடுவே இளமைக் கோலத்தில் காட்சி தந்தார். நடைப்பயிற்சிக்குத் தயாராக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. 

"இந்தப் புத்தகத்தைப் பாருங்கள்' என்று ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார். 

அப்போது நானடைந்த பூரிப்பை எழுத்தில் வடிப்பது இயலாது. ரசிகமணியின் ராமாயணம் என்று நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பார்த்ததில்லை எனும்போது படிப்பது எப்படி?  "ரசிகமணி' டி.கே.சி.யின் "கம்பர் தரும் ராமாயணம்' புதுப்பொலிவுடன் "அல்லயன்ஸ்' நிறுவனத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. 1953-இல் "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரால், திருக்குற்றாலத்திலிருந்த அவரது பொதிகைமலைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், ஏறத்தாழ 67 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பு கண்டிருக்கிறது.

1953 அக்டோபர் 31-ஆம் தேதி திருக்குற்றாலத்தில் அன்றைய முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி வெளியிட்டபோது, பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்திய புத்தகம் அது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

கம்ப காதையில் இருக்கும் பத்தாயிரம் பாடல்களில் பல ஆயிரம் பாடல்கள் கம்பருடையவை அல்ல என்று சந்தத்தின் அடிப்படையில் "ரசிகமணி' அகற்ற முற்பட்டபோது எதிர்ப்பு எழத்தானே செய்யும்? "கம்பனில் கைவைக்க டி.கே.சி. யார்? என்று கோபத்தில் கொந்தளித்தார் பாரதிதாசன் என்பார்கள். கம்பனில் ஈர்ப்பு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் கச்சை கட்டிக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

"இதுவும் கடந்து போகும்' என்று பகவான் ரமணர் சொன்னதுபோல, அவையெல்லாம் கடந்து போயின. கம்பராமாயணமும் இருக்கிறது; "'ரசிகமணி' டி.கே.சி.யின் "கம்பர் தரும் ராமாயணமும்' மறுபதிப்புக் கண்டிருக்கிறது.

கம்பராமாயணத்தில் இரண்டு முறை படித்தால் மனனமாகிவிடும் பாடல்கள் எவை என்று யாரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதில்லை. "கம்பர் தரும் ராமாயணம்' புத்தகத்தில் உள்ள பாடல்களைப் படித்தால் போதும். ரசித்துப் படிக்கவும், ரசித்துப் பாடவும் உகந்த பாடல்கள். "ரசிகமணி' அவற்றை ரசித்துப் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தனராம் ராஜாஜியும், ரசிகமணியின் நண்பர்களும்.
இந்தப் புத்தகம் மறுபதிப்புக் கண்டிருப்பதில் மிகப்பெரிய பங்கு வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு உண்டு. எழுத்தாளர் கி.ரா.விடமும், "ரசிகமணி' பெயரன் தீப.நடராஜனிடமும் இருந்த  "கம்பர் தரும் ராமாயணம்' முதல் பதிப்பைக் கேட்டு, வாங்கிக் கொடுத்து மறுபதிப்புக்கு வழிகோலியவர் அவர்தான். அதனால், அவருக்கும் நன்றி. பதிப்பித்திருக்கும் "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாஸனுக்கும் நன்றி!

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...