Thursday, May 10, 2018

பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்களை வைத்து 300 கோடியில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அருங்காட்சியகம்


கேரள அரசு ரூ.300 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்களை பொது மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஆலோசித்து வருவதாக செய்தி. உலகப் பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள அறைகளில் பல கோடிக்கணக்கான ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் 6 ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க ஒரு கமிட்டியை நியமித்தது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கேரள அரசு  ‘ஏ’ முதல் ‘எப்’ வரை 6 ரகசிய அறைகளாக பெயரிடப்பட்டது. இக்கோயிலில் உள்ள ‘பி’ ரகசிய அறை பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. 

அதை திறந்தால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பி அறையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து மற்ற 5 ரகசிய அறைகளைதிறந்து பரிசோதிக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான தங்க செயின்கள், விலை மதிக்க முடியாத ரத்தினங்கள், வைரங்கள், வைடூரியங்கள், ஒன்றரை அடிக்கு மேல் உயரமுள்ள 1500 தங்க கலச குடங்கள், 100க்கும் மேற்பட்ட ரத்தின கிரீடங்கள், பல தங்க செங்கோல்கள், 750 கிலோ தங்க நாணயங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு பல லட்சம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

திறக்கப்படாமல் உள்ள ‘பி’ அறையில் இதை விட அதிகமான அளவில் பொக்கிஷங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து இக்கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு எஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் உள்ளேயும் வெளியேயும் அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இக்கோயிலில் உள்ள பொக்கிஷங்களை பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கையை பரிசீலிக்க தற்போது கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன், மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அரசு மற்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதி அளித்தால் பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்களை அருங்காட்சியகத்தில் வைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக முதல்வர் பினராய் விஜயன் உறுதியளித்தார்.
விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் என்பதால் பலத்த பாதுகாப்புடன் தான் அருட்காட்சியகத்தை அமைக்க முடியும். அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்க ரூ. 300 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தை கோயில் அருகாமையிலேயே அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இங்கு வரும் பக்கதர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் அனைவரும் பொக்கிஷங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் தான் வருகின்றனர். எனவே இவற்றை அருங்காட்சியகத்தில் வைத்தால் கேரளாவுக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.50 கோடி கேரள அரசுக்கு வருவாய் கிடைக்கலாம்.
#திருவனந்தபுரம்_பத்மநாபசாமி_கோயில்
#Trivandrum_padmanabha_samy_temple
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-05-2018

No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...