Thursday, May 31, 2018

கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், டாபர் டூபாண்ட் பிரச்சனைகளில் ஆரம்பக் கட்ட போராளிகள் பற்றிய நினைவுகள்.


1.   கூடங்குளம் அணு உலை
இந்தியா – சோவியத் யூனியன் இணைந்து அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, சோவியத் யூனியன் அதிபர் கோபர்சேவ் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி 1987 வாக்கில் கூடங்குளம் அணுஉலை திட்டமிடப்பட்டது.  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை 1988இல் ஒய்.டேவிட் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் தொடங்கினர். சமூக ஆர்வலர் ஓவியா அப்போது நாகர்கோவிலில் குடியிருந்தார். அவரும் இந்த போராட்டத்திற்கு அவ்வப்போது பங்கேற்று பணிகளை ஆற்றியதெல்லாம் நினைவுக்கு வருகின்றன. சென்னையில் இருந்து எங்களைப் போன்றவர்கள் எல்லாம் கூடங்குளத்திற்கு சென்றால் அங்குள்ள மக்கள் எங்களிடம், எதுக்கய்யா? ஒரு பெரிய தொழிற்சாலை வருது. நீங்க தடுக்கறீங்க. வேலைவாய்ப்பு, தொழில், பேச்சிப்பாறைத் தண்ணீர் எங்களுக்கு வருமேஎன்று கோபத்தோடு பேசியதெல்லாம் இன்றைக்கு நினைவுக்கு வருகின்றன.
பத்திரிக்கையாளர்கள் நாகர்ஜூனா என்கிற ரமேஷ், .எஸ். பன்னீர்செல்வம், இயற்கை ஆர்வலர் பூவுலகு நெடுஞ்செழியன் போன்றோர்கள் எல்லாம் அந்த காலக்கட்டத்தில் அணுஉலை எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். கூடங்குளம் ஏன் கூடாது என்று ஜுனியர் விகடனில் அப்போது ரமேஷும், .எஸ்.பன்னீர்செல்வமும் தொடர் கட்டுரைகளை எழுதினர். கிட்டத்தட்ட மூன்று, நான்கு மாதங்கள் இந்த தொடர் கட்டுரைகள் வந்ததாக எனக்கு நினைவு. கூடங்குளம் அணு உலை கூடாது என்று அந்த கட்டத்தில் பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் 1988இல் தாக்கல் செய்தேன். மீண்டும், இரண்டாவது முறையாக 2011லும் என்னுடைய ரிட் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்ற மனுக்களைவிட முதல் மனுவாக தாக்கல் செய்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையம் 1987 காலக்கட்டங்களில் ஒப்பந்தம் நிறைவேற்றி இருந்தாலும் சோவியத் ரஷ்யா சிதறுண்ட காரணத்தினால் இந்த நாசகார அணு உலையை அமைக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கிடப்பில் போட்டு அமைதி காத்தனர். திரும்பவும் தேவேகவுடா ஆட்சிக் காலத்தில் இதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டது. நரசிம்மராவ், தனது ஆட்சிக் காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டினார்.
ஜார்ஜ் கோமஸ், ஒய்.டேவிட், ஸ்டீபன் விக்டோரியா, ஆண்டன் கோமஸ், மைக்கேல்ராஜ் போன்றோர்கள் எல்லாம் ஆரம்பக் கட்டத்தில் போராடியபோது, மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸும் இந்த திட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதும் உண்டு. மேலும் பாலபிரஜாபதி அடிகள், விவசாய சங்கத் தலைவர் மருங்கூர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு இயக்கத் தலைவரான பத்மதாஸ், மீனவர் சங்கத் தலைவர் பீட்டர், முன்னாள் எம்.எல்.ஏவான குமாரதாஸ் போன்ற பலர் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து களப் பணிகளை மேற்கொண்டனர்.
அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் 1989இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமென்று மாருதி ஜிப்சி ஜீப்பில் சோனியா காந்தியுடன் தமிழகம் முழுவதும் அவரே வண்டியை ஓட்டி பலமுறை சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார். அந்த காலக்கட்டத்தில் வடக்கன்குளம் பொறியியல் கல்லூரியின் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருந்தபோது, கூடங்குளம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பார் என்ற செய்தி வந்தவுடன் பலரது எதிர்ப்பு போராட்டத்தை நடத்த திட்டமிட்டனர். அதன் காரணமாக மத்திய அரசு அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது.
நண்பர் சுப.உதயகுமாரன் தலைமையில் புஷ்பராயன், முகிலன் போன்றோர்கள் இணைந்து நடத்திய போராட்டங்கள் தான் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.


 2.  ஸ்டெர்லைட்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 1994இல் இத்திட்டத்தை துவக்கி வைத்த போது ஆண்டன் கோமஸ் போன்றவர்கள் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆண்டன் கோமஸ், ஜனதா கட்சியின் மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸிற்கு நெருக்கமாக திகழ்ந்தவர். எனக்கும் நண்பர். பெரிய தாட்டியான உருவம். ஸ்டெர்லைட்டைக் குறித்து சென்னைக்கு வந்த போது அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க 1994 காலக்கட்டத்தில் உடனிருந்து ஏற்பாடு செய்தேன். தூத்துக்குடிக்கு வரும்போது இதைக் குறித்து பேச வேண்டுமென்று அழைத்தார். ஒரு முறை சென்றிருந்தேன். தமிழகத்தில் 1996இல் நடந்த பொதுத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்ட போது அங்கு இருமுறை வந்தார். இது குறித்தான துண்டு பிரசுரங்களையும் என்னிடம் கொடுத்துவிட்டு, வைகோ அவர்களிடமும் சொல்லுங்கள் என்ற போது, ஏற்கனவே இதை குறித்து வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். நாங்கள் இதை குறித்து தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் என்பதையெல்லாம் குறிப்பிட்டேன்.
பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் வைகோவின் முழு முயற்சியால் 1996ஆம் ஆண்டு தீவிரமடைந்தது. ஒய். டேவிட், பேராசிரியர் பாத்திமா, மனோன்மணியம் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் (என்று நினைவு) போன்ற பலர் ஆரம்பக் கட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு களப்பணியாளர்கள். கிரீன் பீஸ் இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்தது. இதெல்லாம் 1994லிருந்து 1997 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி பொறுப்பாளராக அன்றைக்கு இருந்த கனகராஜ் போன்றோர்களெல்லம் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்காக காட்டிய ஆர்வமெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்.

3.  டாபர் – டூபான்ட்
கும்மிடிப்பூண்டியில் நச்சு கக்கும் வாகன டயர் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை இதே காலக்கட்டத்தில் ஜெயலலிதா அரசிடம் அமைய டாபர் – டூபான்ட் நிர்வாகம் ஓரளவு அனுமதியும் பெற்றபோது, இந்த ஆலை அமையக்கூடாது என்று நண்பர் பூவுலகு நெடுஞ்செழியனுடன் அடியேனும் இரண்டு முறை கும்மிடிப்பூண்டிக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் தயார் செய்தோம். அப்போது எல்.ஆர்.ஜெகதீசன் (தற்போது பிபிசி, லண்டனில் பணியாற்றுகிறார்), இந்தியா டுடே தமிழ் வார இதழில் சிறப்புச் செய்தியாளராக இருந்தார். டாபர் – டூபான்ட் ஆலை சுற்றுச் சூழலை எப்படி பாதிக்கும் என்பதை குறித்து அந்த இதழில் எழுதியிருந்தார்.
நெடுஞ்செழியனோடு, மனித உரிமை ஆர்வலர் ரபி நாயரும் (டெல்லி. டாக்டர் காமேஸ்வரனின் உறவினர்), நானும் ஒரு முறை கும்மிடிப்பூண்டிக்கு சென்றதெல்லாம் நினைவுகள்.
நெடுஞ்செழியன், இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் பணியாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர், களப்பணியாளர், பண்பாளர். வாரமொருமுறை என்னுடைய இல்லத்திற்கோ, காஸ்மோபாலிட்டன் கிளப்பில் அவரை சந்தித்து பல விசயங்களை பற்றி பேசுவதுண்டு. அற்புதமான மனிதர். அவர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்க வேண்டும். இளம் வயதிலேயே அவர் காலமானது எங்களைப் போன்றோருக்கு பெரும் இழப்பாகும். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1989இல் நான் போட்டியிட்ட போது, ஒரு வார காலம் என்னுடன் தங்கி தேர்தல் பணிகளையும் செய்தார். தமிழகத்தில் சுற்றுச் சூழல் இவ்வளவு விழிப்புணர்வு அடைந்ததற்கு காரணம் அவர் அமைத்த கட்டமைப்பும், அவருடைய செயல்பாடுகளே.
ராஜீவ் படுகொலை அன்று திருப்பெரும்புதூர் கூட்டத்திற்கு எல்.ஆர்.ஜெகதீசனும் கல்கிப் பிரியனும் நெடுஞ்செழியனை அழைத்துக் கொண்டு செல்வதாக திட்டம். குறிப்பிட்ட நேரத்திற்குள் நெடுஞ்செழியன் வராததால் அந்த நிகழ்ச்சிக்கு இவர்கள் செல்ல முடியவில்லை. நெடுஞ்செழியனால் அந்த கூட்டத்தில்  நானும், ஜெகதீசனும் கலந்து கொள்ளவில்லை. அந்த துயர நிகழ்வில் இருந்து எங்களை காப்பாற்றிய நெடுஞ்செழியன் இளம் வயதிலேயே இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாரே என்று வேதனையோடு பிரியன் அடிக்கடி இதைச் சொல்வார்.

#கூடங்குளம்
#ஸ்டெர்லைட்
#டாபர்_டூபான்ட்
#போராட்டங்கள்
#தமிழக_அரசியல்
#தமிழக_நச்சு_ஆலைகள்
#Tamil_Nadu_Toxic_Industries
#Sterlite
#Koodankulam
#Dabur_Dupont
#Agitations_in_Tamil_Nadu
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...