மழை பேஞ்சதுன்னா சம்சாரிக (விவசாயிக)இருக்குற ஊருல கொண்டாட்டத்துக்கு என்ன கொறைச்சலாவா இருக்கும்.
ஊரே விவசாயத்தை நம்பிதானிருக்கு.மழை பேஞ்சவுடனே மேற்கேயிருந்து பெரிய ஓடையில தண்ணி தட தடத்து ஓடி வரும்.ஊரே புதுபாலத்தில நின்னு வேடிக்கை பார்க்க கூடிறும்.அதென்னமோ அறுபது வருசத்துக்கு முன்னால கல்லால கட்டுன இந்த பாலத்துக்கு இப்பவும் புது பாலம்னு தான் பேரு.
இந்த பெரிய ஓடைத் தண்ணீர் கம்மாய்க்கு போயி அப்புறம் காயல்குடி ஆத்துல விழுந்து கடல்ல போயி முட்டி சேருமாம்.
இத வேடிக்கை பார்க்குற கூட்டத்துல ஜக்கப்ப தாத்தாவும் ஒருத்தரு அவர் பேரு வெங்கிடசாமி தான் ஆனா அவருக்கு எப்படி ஜக்கப்பான்னு பேரு வச்சாங்கன்னு தெரியல கூப்புடறது ஜக்கப்பானு தான்.வெங்கிடசாமின்னா யாருக்கு அவரைத் தெரியும்.
ஊருல இருக்குறவங்களுக்கு மழை ஒரு கொண்டாட்டம்னா இவருக்கு ரெட்டை கொண்டாட்டம்.எல்லாரும் தண்ணிய பார்த்துக்கிட்டிருந்தா இவர் தண்ணிக்குள்ள மீன் வருதான்னு உக்கார்ந்து உத்துப்பார்ப்பாரு .
ஓடையில தண்ணி ஓட்டம் கொறைய ஆரம்பிச்சவுடனே பக்கத்துல நிக்கிற மகன்க ரெண்டு பேர ஒரு புன்னகையோட பார்ப்பாரு .உக்கார்ந்து இருந்த மனுசன் மொழங்கால் வரைக்கும் காலை தேச்சி வேட்டிய தூக்கி நின்னு மகன்கள ஓரப் பார்வையில பார்த்து மண்டைய ஆட்டி போய் எடுத்துட்டு வாங்கடா. தொனைக்கு அவன் ஆதிய கூப்புட்டு வாங்கடாம்பாரு.
அப்பா, மகனுகளுக்குள்ள இந்த சைகை குசுகுசுப்புக்கு அர்த்தம் சாரம் போட்டு மீன் பிடிக்க ஒரு ஏற்பாடு நடக்கனும். ஆக வேண்டியத பாருங்கன்றது தான். சீனீ அண்ணணும்,குருசாமி அண்ணணும் கெளம்பி கா மணி நேரத்துல ரெடியா வந்து சேர்ந்துருவாக.
இப்ப தண்ணிய மறிச்சி மீன் பிடி சாரம் போடனும்.எப்பவுமே அதுக்குரிய ஜாமான ரெடியாத்தான் வச்சிருப்பாரு வீட்ல ஜக்கப்பா தாத்தா.இப்ப இவரு கோளாருபடி தண்ணிய மறிச்சி அணைய போடுவாக.
அதுக்கு மேல ஒரு மரச்சட்டத்த போடுவாக.தண்ணி பொங்கி அளவா கீழே விழுற மாதிரி ரெடி பண்ணுவாக. இப்பத்தண்ணி விழுகுற எடத்துல ஓடைக்கரையில மண் கொடத்தை பதிச்சி வச்சிருவாக.
இப்ப கீழே மூணு சின்ன தூணாட்டம் கட்டி பழைய பாயி,சாரம் இத சோளக்குச்சியில பிரத்தியேகமா செஞ்சி வச்சிருப்பாரு. அதுல விழுகுற தண்ணி வடிஞ்சி போற மாதிரி.இதை சரிவா சாரப்பாய சைசா வச்சி கொடத்துக்கு கொண்டு வந்து சேர்த்துருவாரு.தண்ணி விழுந்து வடிஞ்சி கீழே போகனுமே தவிர கொடத்துக்குள்ளே வரக்கூடாது.மீனு மட்டும் துள்ளி போய் கொடத்துல சேரணும்.
கோளாரா செஞ்சி தண்ணிய லேசா சைசா தெறந்து விட்டு செக் பண்ணுவாரு .சரியா வச்சாச்சி.இப்ப தண்ணி ஓடுற தெசைய எதுர்த்து மீன் கூட்டம் கூட்டமா வரும் அம்புட்டும் மீடியம் சைசு அயிரை,கெழுத்தி வந்து அணையிலிருந்து அருவி மாதிரி விழுகுறத்தண்ணியில மீன்கள் தாவி ஏறும். மீன் ஏறுதான்னு பார்ப்பாரு அதுக்கு தக்கன அட்ஜஸ் பண்ணுவாரு .இப்ப பாதி மீனு தண்ணிய எதுர்த்து தாவி ஏறுப்ப சாரத்துல விழுந்து கொடத்துக்கு போய் சேர்ந்துக்கிட்டே இருக்கும். கொடம் நெறைய நெறைய அள்ளிக்கொண்டு போக வேண்டியது தான்.
இராப்பகல் இந்த சாரம் தண்ணி கொறையற வரைக்கும் ஒரு வாரத்துக்கு கூட இருக்கும்.அள்ளுற மீன்கள பக்கத்துல மத்தவங்களுக்கும் மீனோ,கொழம்பாவோ கொண்டு வந்து கொடுப்பாரு.
இந்த ஊர்ல ஒவ்வொருத்துருக்கும் ஒரு தெறமை இருக்கு.இதுல இவருக்கு ஒரு தெறமை மீனு,கோழி,கறின்னா அவருக்கு கொள்ளப்பிரியம் கவுச்சு இல்லாம இருக்க மாட்டாரு.
ஆளு வத்தல் மாதிரி தான் இருப்பாரு.தப்புன்னா யாரையும் கூசாம பேசிப்புடுவாரு.மிலிட்டிரியிலிருந்து,காலேஜ்லயிருந்து லீவுல வர்றவங்களுக்கு இவரால தான் பொழுதே நகரும் பிளேயிங் கார்டுல மன்னன்.
ஆனா பணத்தை வச்செல்லாம் வெளையாடமாட்டாரு.சாய்ந்தரம் நாலு மணியாச்சுன்னு இவர் வருகையை எதிர்பார்த்து ஒரு கூட்டம் காத்துக்கெடக்கும் தெற்குத்தெரு பஜனை கோயில்ல.
ஆமா இவர் தான் சீட்டுக்கட்ட கொண்டு கிட்டு வருவாரு நாள் தவறுன்னாலும் இந்த கிரவுண்டுக்கு இவர் வருகை தவறாது.சீட்டுக்கட்டு வைக்கறதுக்கு டெய்லர் சுப்பையாகிட்ட ஸ்பெஷலா ஒரு பையே தைச்சி வாங்குனார்னா அவரோட ஆர்வத்தை என்னன்னு சொல்றது.
நானும் இவங்க கூட சரிக்குசரி சீட்டு விளையாடிய நாட்களுண்டு.
904 னு ஒரு விளையாட்டு 8 பேர் உக்கார்ந்து விளையாடுவோம் அதுல தப்பா எவனாவது டிஸ்கார்டு பண்ணுணா அவன் செத்தான் கட்டி ஏறி காத அத்துருவாங்க வேர்ல்டு கப் புட் பால் எல்லாம் தோத்து போகும் அம்புட்டு சவுண்ட கொடுப்பாங்க .
மறக்கமுடியாத அனுபவம். ஜக்கப்ப தாத்தா இறந்து பல வருசங்களாச்சு இருந்தாலும் அவர மறக்க முடியல .அவர் ஒரு பெக்குலியர் கேரக்டர் ஆமாம். அந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்.
Nachiarpatti. Dhanasekaran Nks.
No comments:
Post a Comment