Sunday, May 20, 2018

Narshimnan Naresh -Singapore பதிவு

கடந்த இரு நாட்களாக ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்து இணையத்தில் பல பதிவுகள். இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்டது திராவிட இயக்கத்தினரும் குறிப்பாக திமுகவினரும், திமுகவில் இருந்தவர்களும் தான் என்பதை வரலாற்று ரீதியாக , செய்தித்தாள் பதிப்புகள் என ஆதராரப்பூர்வமாக பதிவுகள் செய்யப்பட்டது..இதில் பல பதிவுகளின் பின்னனி அண்ணன் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் குறிப்புகள் உதவியது. உதாரணமாக அனைத்து  ஈழத்தமிழர் குழுக்களின்  பெயர்களை கூட விரிவாக அகில இந்திய தலைவர்களுக்கு எடுத்து சொன்னவரும் இணையத்தில் பதிவு செய்தவரும் அவரே. கடந்த இரண்டு நாட்களாக அவரும் சில பதிவுகள் செய்துள்ளார்.  சோற்று பிழைப்புக்கு ஈழத்தமிழர் குறித்து பேசும் சிலருக்கு பயம் வந்துவிட்டது. அவரது பதிவில் தரக்குறைவாக பேசி இருக்கின்றார்கள்.  தங்கள் டைம்லைனில் பதிவுகளும் செய்திருக்கின்றார்கள். 

அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்றை சொல்லிக் கொள்வது என்னவென்றால்
" உங்கள் தலைமை ஈழத்தமிழர் பெயர் சொல்லி பிழைப்பு நடத்துகின்றனர், ஆனால் அண்ணன் KSR அவர்களோ யாரிடமும் ஒருப்பைசாக் கூட வாங்காமல் தன் உழைப்பின் பலனில் கிடைக்கப்பெற்ற பணத்தை செலவு இலண்டன், ஜெனிவா, கனடா போன்ற ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு சென்று அவர்களிடம் கலந்து ஆலோசிப்பவர்.  அவரைப் பற்றி பேச தகுதி வேண்டும். கடந்த 6 ஆண்டுகாலமாக அவரது எழுத்துக்களை தொடர்ந்து  வாசித்து வருகின்றேன். வார்த்தை ஜாலங்கள் இருக்காது. ஆனால் அவரது கட்டுரைகளை ஆய்வுக்காக பயன்படுத்தினால் கூட அதில் பொய் கலப்படம் இல்லாமல் உண்மையாக இருக்கும்.  

இணையத்தில் அளவுக்கு அதிகமாகவே ஈழத்தமிழர் நலன் குறித்து பதிவுகள் செய்துள்ளார்.  சின்ன சின்ன விசயங்களை கூட அவரது ப்ளாக்கரில் பதிவு செய்வார். மாற்று இயக்கத் தோழர்கள், எதிர் தரப்பினர் பெயரைக் கூட தவிர்க்காமல் தன் பதிவில் குறிப்பிடுவார். ஆச்சர்யத்துடன் கேட்பேன்.. இது எனக்காக எழுதப்படுபவை அல்ல.  நாளைய மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரை எழுதினால் அதற்கு குறிப்பாக எனது பதிவுகள் அமையும் , வரலாற்று திரிப்பு ஆபத்தானது , நாம் செய்யும் தவறு துரோகமாகிவிடும், எனவே நமக்கு தெரிந்த வரலாற்றை அப்படியே பதிவு செய்வது தான் சரியானதாக இருக்கும் என்பார்.  

கடந்த ஆறு ஆண்டுளாக அவருடன் அதிகம் பேசுபவனாக, மாணவனாக இருக்கின்றேன் என்பதை பெருமையாக சொல்வேன். காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை ,தமிழக மேல்சபை , கூடங்குளம் என பல விசயங்களில் தெளிவுப்பெற்று இருக்கின்றேன். 

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
தமிழகத்தின் அரசியல் களத்தில் 44 ஆண்டுகளாக களப்பணியாற்றுபவர், வழக்கறிஞர், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், நூல் ஆசிரியர், கதைசொல்லியின் இணை ஆசிரியர், சமூக வலைதளங்களில்  செயல்படுபவர், தமிழகத்தின் அரசியல் கட்சிகளிலேயே முதல் முதலாக செய்தி தொடர்பாளராக 23 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டவர், தேர்தல் களங்களை  கண்டவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசமும் கண்டதும் உண்டு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் என பல அடையாளங்கள் உண்டு. இப்படி பல தளங்களில் செயல்பட்டு வருபவர். கர்மவீரர் காமராஜர், திமுக தலைவர் டாக்டர். கலைஞர், ஈ.வி.கே. சம்பத், கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன், விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு, திரு. வைகோ ஆகியவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார்.  இவரோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆரம்பக் கட்டத்தில் தங்கியிருந்து நட்பு பாராட்டியவர். அப்போது வெளி உலகத்துக்கே தனது முகத்தை காட்டாமல் தலைமறைவு வாழ்வில் இருந்தார் பிரபாகரன். எவ்வளவோ பணிகள், காலம் தந்த பாடங்கள் என கடந்த காலச் சக்கரங்கள் வேகமாக நகர்ந்துவிட்டன. சுடுமணலில் பயணமோ, தென்றல் பயணமோ என்று பாராமல் நிம்மதியான அரசியல் பயணமாக உள்ளது. ஏற்ற இறக்கங்கள் எல்லாம் இதில் இயற்கையான நிலைப்பாடு ஆகும். எவ்வளவோ தமிழக அரசியல் முக்கிய நிகழ்வுகள் கண் முன் நிகழ்ந்துள்ளன.
கே.எஸ்.ஆர் என்ற அழைக்கப்படும் இவர், திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சட்டப் படிப்பில் தனது முதுநிலைக் கல்வியை முடித்தபின் 1981 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வழக்கறிஞர் கழகத்தில் பதிவு செய்து கொண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தின் பல்வேறு சிவில், கிரிமினல் மற்றும் பொதுநல வழக்குகளில் வழக்குரைஞராக வாதாடியுள்ளார்.
 
திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் புது தில்லியில் இயங்கி வரும் இந்திய சட்ட நிறுவனத்திலும், சர்வதேச சட்ட அமைப்பின் (இந்தியா பிரிவு) மற்றும் இந்தியா மத்தியஸ்த கவுன்சில் ஆகியவற்றில் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார். பல்வேறு அரசு அமைத்த விசாரணை கமிஷன்களிலும் வழக்கறிஞராக ஆஜராகி உள்ளார்.
தமிழக அரசின் அறநிலையத் துறையின் சார்பாக பல்வேறு வழக்குகளில் வழக்கறிஞராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் கழகத்தின் சட்ட ஆலோசகராகவும் இருந்து வந்தார்.
கொச்சி துறைமுக கழகத்தின் மத்தியஸ்த அமைப்பின் நடுவராக இருந்தார்.
மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் உறுப்பினராக 12 வருடங்கள் இருந்தார்.
மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் பயணிகளின் நல வாரியத்தின் உறுப்பினர், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்தார்.
மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் அமைந்துள்ள குழந்தை தொழிலாளர் மற்றும் தொழிலாளர் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
ஐ.நா. மன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பை உதறி அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவருடைய சகாக்கள் இன்றைக்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள். இவரால் அரசியலுக்கு வந்தவர்கள், இவரால் உயர்ந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்.
மக்களுக்கான நீதி சேவை:
1.  சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மக்கள் நலனுக்காக பல்வேறு பொது நல வழக்குகளை தொடர்ந்தவர். அதில் நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்குதல், கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைத்தல், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைத்து மற்றும் மேற்கே கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பி விடக் கோரி என்று 1983 ஆம் ஆண்டு முதல் போராடி உச்ச நீதிமன்றத்தில் போராடி 27-02-2012ல் தீர்ப்பையும் பெற்றார். உச்சநீதிமன்றத்தில் சிறைக் கைதிகளுக்கான வாக்குரிமைக்காகவும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மூன்றடுக்கு முறைக்காகவும் போராடினார்.  பல்வேறு ஊழலை ஒழிக்க தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுநல வழக்குகளையும் தொடுத்துள்ளார்.
 
சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் தொடர்ந்த குறிப்பிடத்தக்க பொதுநல ரிட் மனுக்கள்:
2.​விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள், அவர்களுக்கு கடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள் தொடுத்து உரிய ஆணைகளையும் உயர்நீதிமன்றத்தில் பெற்றார்.
3.​தூக்குத் தண்டனை கூடாது என்று இன்றைக்கு எட்டு திக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. 1983 ல் உச்சநீதிமன்றம் நிராகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனிமேல் வேறு வழி இல்லை. தூக்கு தண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில் தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதெல்லாம் கடந்த காலம். இது ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் செய்த கடமையாகும்.
4.​கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் வருவதற்கு கேரள அரசு தடை விதித்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபாட்டை தொடர வழி செய்தார்.
5.​விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கு, ஏனைய வழக்குகளிலும் வழக்கறிஞராக வாதிட்டவர்.
6.​ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹாசன், டாக்டர் சத்யேந்திரா எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலிருந்து நாடு கடத்தியபோது வழக்குத் தொடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிறப்பு அனுமதி பெற்று நடத்தினார்.
7.​1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூட வேண்டி தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்து சுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவால் ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதி மகிழ்ச்சியடைந்து திரு. கே.எஸ்.ஆர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
8.​1983 இவர் தொடர்ந்த ரிட் மனுவினால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு வறட்சி பாதிக்கபட்ட பகுதியாக அறிவித்தது
9. ​காவல் நிலையத்தில் இறந்த பலரது குடும்பங்களுக்கு பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்துள்ளார்.
10.​விவசாய மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் தொடர்ந்த ரிட் மனுக்கள் பல நிலுவையில் உள்ளன.
11.​காவிரி பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறிலும் எடுத்துக் கொண்ட வழக்குமன்ற நடவடிக்கைகள்.
12.​சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றார்.
13.​தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் அப்பாவி மக்கள் கர்நாடக அரசால் மைசூர் சிறையில் வாடியவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்தார்.
14.​கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதல் முதலில் வழக்கு தொடர்ந்தார்
இவருடைய சீனியர் முதுநிலை வழக்கறிஞர் ஆர். காந்தி, மறைந்த பிரபல முதுநிலை வழக்கறிஞர் என்.டி. வானமாமலை ஆகியோர் இவரை வழி நடத்தினர். வழக்குகளில் இவருக்கு வழிகாட்டினர்.
மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள்:
அம்னெஸ்டி போன்ற மனித உரிமை மீறலுக்காக போராடி வரும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் பலவற்றுடன் இணைந்து மனித உரிமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் தொழில் ஒழிப்பு மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கான தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  தமிழகத்தில் விவசாயப் போராட்டம் வலுவாக அரசை எதிர்த்து நடந்தபொழுது அதில் பங்கேற்றவர். இவர் சொந்த கிராமத்தில் காவல்துறையினரி துப்பாக்கிச் சூட்டிற்கு 8 விவசாயிகள் பலியானார்கள். அந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் வரை நடத்தி விவசாயிகளுக்கு விடுதலையும் பெற்றுத் தந்தார். மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்ட சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். ஊடகத்தில் மனித உரிமை குறித்து தொடர்ந்து எழுதிவருவது மட்டுமல்லாமல் பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
எழுத்துப் பணி:
எழுத்து மற்றும் இலக்கியத்தின் மீது இவருக்கு உள்ள ஈடுபாட்டினால் ஊடகத்துறையிலும் அச்சுத்துறையிலும் அனைவராலும் அறியப்படுபவர். திரு. கி. ராஜநாராயணன் அவர்களுடன் இணைந்து கதைசொல்லி எனும் காலாண்டு இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
 
இதுவரை இவர் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதி பல நுல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க சில:
1.​உரிமைக்கு குரல் கொடுப்போம்
2.​மனித் உரிமைகள் என்றால் என்ன?
3.​நிமிர வைக்கும் நெல்லை
4.​தமிழ்நாடு 50
5.​கரிசல் காட்டில் கவிதை சோலை பாரதி
6.​கனவாகிப் போன கச்சத்தீவு
7.​ஈழத் தமிழர் பிரச்சினை
8.​சேதுக் கால்வாய் – ஒரு பார்வை
9.​தூக்குக்கு தூக்கு
10.​முல்லைப் பெரியாறு
11.​மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்
12.​தமிழ்நாடு மேலவை
13.​திமுகவும் சமூக நீதியும்
14.​Eelam Tamil's Issue
15.​Impunity in Sri Lanka
தமிழக நதி நீர் பிரச்சினைகள், மத்திய-மாநில உறவுகள், தமிழக விவசாயிகளின் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சி சீமை சரிதம், Aspects of Democracy  & Concepts, தினமணி கட்டுரைகள் தொகுப்பு என இவரின் நூல்கள் அச்சில் உள்ளன..

மக்கல் வரிப்பணத்தை சம்பளமாக பெற்றவர்  கூட இல்லை ஆனால் அப்படிப் பெற்ற பலரை விட அதிகமாகவே இந்த மண்ணுக்கு மகனாக அர்ப்பணிக்கும் விதமாக கடமைகள்  ஆற்றியுள்ளார். 

Narshimnan Singapore 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...