Tuesday, May 8, 2018

மறைக்கப்பட்ட ஆளுமை, டாக்டர் வரதராஜுலு நாயுடு. Dr. P. Varadarajalu Naidu., The forgotten Leader of Tamil Nadu.

தியாக தீபம் வ.உ.சியால் ”தென்னாட்டு திலகர்” என்றும், வ.ரா-வால்  “தமிழ் பெரியார்” என்றும் பெருமையோடு அழைக்கப்பட்டவர்.  
அரசியல் தலைவர், பத்திரிகையாளர், நாட்டின் விடுதலைக்குப் போராடிய போராளி, நவீன தமிழகத்தை அமைக்கவேண்டும் என அரும்பாடுபட்டவர். சமூக நீதிக்காக பெரியாரின் நண்பராக இருந்து தேசியவாதியாக விளங்கியவர் தான் சேலம் டாக்டர்.பி. வரதராஜலு நாயுடு.

 இந்தியன் எக்ஸ்பிரஸ் , தமிழ்நாடு,  பிரபஞ்சமித்ரன் என்ற நாளிதழ்களைத் தொடங்கியவர். அக்கினியாக  அரசியல் களத்தில் விளங்கியவர். 1951ல் மாகாண மேலவைக்கும், 1952ல் சட்டமன்றத்திற்கும் மட்டுமே இவரை அரசியல் தேர்ந்தெடுத்தது. நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட இந்த ஆளுமையை வ.உ.சியைப் போல் அரசியலில் சில சுயநல சக்திகள் அப்புறப்படுத்தின. அப்பழுக்கற்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரையும், இதே போலவே சில சதிகாரக் கும்பல்கள் அரசியலில் இருந்து பிரித்தெடுக்க சதிராட்டம் ஆடினர்.

அன்றைக்குத் தொடங்கிய இந்த காழ்ப்புணர்ச்சி அரசியல் இன்றைக்கு வரைக்கும் தொடர்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை. உழைப்பை உறிஞ்சிக் கொண்டு தூக்கி எறிவது தான் சில ஆதிக்க சக்திகளின் அரசியல் போக்காக நீடித்து வருகின்றது. எந்தவிதமான  தியாகமும் இல்லாமல், உழைப்புமில்லாமல், சுயமரியாதை என்று எதுவும் இல்லாமல் கைகட்டி நின்று பாசாங்கு செய்பவர்கள் தான் அரசியலில் ஆதரிக்கப்படுகின்றார்கள். நான் எப்போதும் சொல்வது போல தகுதியே தடையாக அமைகிறது. இது பொது வாழ்வில் நிரந்தரமாக நடக்கும் காரியமாகி விட்டது. 

டாக்டர். வரதராஜலு நாயுடு அரசியல் சூறாவளியில் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் இந்துமகா சபையில் சேர வேண்டிய நெருக்கடிக்கு உட்பட்டார். இப்படி இவருடைய உழைப்பும் தியாகமும் இன்றைக்குப் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. 

1987ல் இவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடவேண்டிய அரசும், அரசியல் அமைப்புகளும் கூட அதனைச் சரியாக நடத்தவில்லை. இந்நிலையில் பழ.அதியமான் அவர்கள் டாக்டர்.வரதராஜலு நாயுடு பற்றி “பெரியாரின் நண்பர்” என்ற விரிவான நூலை எழுதி, காலச்சுவடு கண்ணன் அவர்களால் வெளியிடப்பட்டிருப்பது, இன்றைக்கு இவரைப்பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.  

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-05-2018.

#Dr_P_VaradarajaluNaidu
#ForgettenTamilNaduLeaders
#KSR_Posts


தேசிய சங்கநாதமாக முழங்கியவர் - டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு.
_________________________________________

டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு
(பிறப்பு: 1887, ஜூன் 4- மறைவு: 1957 ஜூலை 23)
தென்னாட்டுத் திலகராகப் புகழ்பூத்த வ.உ.சி, 1934-இல் ‘தேசிய சங்கநாதம்’ எனும் தலைப்பில் 32 பக்கங்களில் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இந்தச் சிறுவெளியீட்டில் டாக்டர் நாயுடுவின் தேசியத் தொண்டுகள் 1933 வரையில் நிகழ்ந்தவை மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. 

‘டாக்டர்’ எனும் பட்டப் பெயர், அவர் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில் பெரும்புகழ் பெற்றதால் அமைந்தது. 

சேலம் மாவட்டம், ராசிபுரத்தில் 1887-ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வரதராஜுலு நாயுடு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள் உயர் நிலைக் கல்வி கற்கும்பொழுதே நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. இளைஞரான வரதராஜுலு ‘முற்போக்காளர் சங்கம்’ எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.

அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய லட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டதைப் பற்றி பிற்காலத்தில் 1936 செப்டம்பர் 26-ஆம் தேதியிட்ட தமது ‘தமிழ்நாடு’ இதழின் தலையங்கத்தில் பின் வருமாறு கூறியுள்ளார்:
“1906ஆம் ஆண்டில் எனது 19 வயதில் இந்திய தேசிய இயக்கத்தில் நான் ஈடுபட்டேன். 1908ஆம் வருஷம் புதுச்சேரிக்குச் சென்று, சுப்பிரமணிய பாரதியாரின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.

“1916இல் தேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றேன். இந்த வரலாற்றுச் சிறப்பை, ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்புகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-
”பால்- பால்-லால் என்று பாரதநாடு முழங்கிய காலமுண்டு. நாயக்கர், நாயுடு, முதலியார் என்று தமிழ்நாடு முழங்கிய காலமுண்டுமேலே,
‘பால்’ என்பது பாலகங்காதர திலகரையும்
‘பால்’ என்பது விபின் சந்திர பாலையும்
‘லால்’ என்பது லாலா லஜபதிராயையும்
குறிப்பிடுவனவாகும்.
இவ்வாறே,
நாயக்கர் என்பது, ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும்
நாயுடு என்பது டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவையும்
முதலியார் என்பது திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரையும்
குறிப்பிடுவனவாகும்”.

இவரது முதல் சிறைவாசம், 1918-இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக விதிக்கப்பட்டது. சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையில், நாயுடுவின் சார்பில் சேலம் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) வாதாடினார்.
இவருக்குத் துணையாக, சேலம் ஆதி நாராயண செட்டியார்,
மதுரை ஜார்ஜ் ஜோசப், எம்.கே.சுந்தரராஜ ஐயங்கார்,
ஆர்.எஸ். வரதராஜுலு நாயுடு
ஆகிய வழக்கறிஞர்கள் உதவினர்.

உயர் நீதிமன்ற மேல் முறையீட்டில் ராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்க வாதத்தால், நாயுடு விடுதலை பெற்றார்.
அவர் சேலத்தில் வாரப் பதிப்பாக 1919-ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த ‘தமிழ் நாடு’ இதழில் அவர் எழுதிய இரு கட்டுரைகள், ராஜதுரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறை வாசத்தை ஏற்றார்.

1923-இல் பெரியகுளம் தாலுகா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இது மூன்றாவது சிறைத்தண்டனையாகும்.

24-ஆம் வயதில் அவர் ருக்மணி எனும் பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். 1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்தபொழுது, டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். 1921-இல் மீண்டும் சேலம் வந்தபொழுது டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி, தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியடிகளிடம் கொடுத்துவிட்டார்.
1922-இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்டபொழுது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க புதுமையைக் கையாண்டார், டாக்டர் நாயுடு. 

அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு தான் வரிகட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.
வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம், காந்தியடிகளின் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தது. 1925-இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார். 1929-இல் காங்கிரஸோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரஸை விட்டு வெளியேறினார். பின்னர் ஆர்ய சமாஜத்தில் இணைந்தார்.

‘ஜஸ்டிஸ்’ கட்சியை எதிர்த்ததில் டாக்டர் நாயுடுவின் பங்களிப்பைப் பின்வருமாறு திரு.வி.க. பாராட்டியுள்ளார்:
“ஜஸ்டிஸ் கட்சி முளைவிட்டபோது, அதைக் கிள்ளியெறிவதற்கென்று புறப்பட்டவர் டாக்டர் வரதராஜுலு. வரதராஜுலுவின் பிரசாரம் தமிழ்நாட்டில் நாலா பக்கமும் பரவாவிடின், ‘ஜஸ்டிஸ்’ கொடி நாடு முழுவதும் பரவி, காங்கிரஸ் உணர்ச்சிக்கேடு சூழ்ந்திருக்கும். தென்னாட்டில் காங்கிரஸ் பக்தியை வளர்த்த பெருமை நாயுடுவுக்கு உண்டு”
-என்று திரு.வி.க. எழுதியுள்ளார்.

ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு.வி.க.வைத் தொடர்ந்து, தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் டாக்டர் நாயுடு.
இவருடைய இதழியல் பணி, ‘பிரபஞ்ச மித்திரன்’ எனும் வார இதழ் மூலம் தொடங்கியது. மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும், சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட ‘பிரபஞ்சமித்திரன்’ மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்தபொழுது, டாக்டர் நாயுடு 1916-இல் அந்த இதழை வாங்கினார். அவர் ஆசிரியரானார். இது இரண்டாண்டுகள் வெளிவந்தது. 1918ஆம் ஆண்டு டாக்டர் நாயுடு சிறைப்பட்டபொழுது, ஆயிரம் ரூபாய் ஈடுகாணம் அரசால் கேட்கப்பட்டு, பத்திரிகை முடக்கப்பட்டது. 

பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு தமிழ்நாடு இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து ஆற்றிய நாயுடுவின் பணி ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

அவருக்கு இவ்வகையில் பெரிதும் துணை நின்றவர் ‘பேனா மன்னன்’ என்று பிற்காலத்தில் புகழப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் ஆவார்.
1919-இன் இறுதியில் சேலத்தில் வாரப் பதிப்பாக வெளிவரத் தொடங்கிய தமிழ்நாடு இதழில், 21 வயதான இளைஞர் டி.எஸ்.சொக்கலிங்கம் 1923-இல் துணை ஆசிரியரானார்.1926 ஏப்ரல் 14-இல் வாரப் பதிப்புடன் நாளிதழையும் தொடங்கினார். பாரதியார் பாடல்களைச் சித்திர விளக்கங்களாக வெளியிட்ட முதல் இதழ் தமிழ்நாடு எனும் பெருமை பெற்றது.

“காலஞ்சென்ற ஜி.சுப்பிரமணிய ஐயரைப் போல டாக்டர் நாயுடுவும் பத்திரிகை உலகில் ஒரு தனிச் சுடராக விளங்கினார். தேசிய ஆதர்சங்களுடன் வெற்றிகரமாக ஒரு தேச பாஷை பத்திரிகை நடத்திய வீரர்களில் டாக்டர் நாயுடுவைக் காலஞ்சென்ற ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு இணையாகச் சொல்லலாம்” -என்று வ.உ.சி. ‘தேசிய சங்க நாதம்’ எனும் வெளியீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழும் டாக்டர் நாயுடுவின் முயற்சியே. 1916-லேயே ஆங்கில இதழ் ஒன்றைத் தொடங்க வேண்டும் என விரும்பிய டாக்டர் நாயுடு, 1932-இல் தமிழ்நாடு நாளிதழுக்கு சகோதரப் பத்திரிகையாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ எனும் பெயரில் ஓர் ஆங்கில நாளேட்டைத் தொடங்கினார். ஆனாலும், சில மாதங்களிலேயே ‘ப்ரீ பிரஸ் ஆப் இந்தியன்’ எனும் சுதேச செய்தி நிறுவனத்தை நிறுவிய தேசிய வீரர் எஸ்.சதானந்தம் வசமாயிற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’.
1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும், சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் டாக்டர் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும், தமிழ்நாடு இதழின் நலிவிற்கும் காரணமாயிற்று.

விடுதலை பெற்ற இந்தியாவில் டாக்டர் நாயுடு 1951-இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.

சிற்சில சந்தர்ப்பங்களில் பெரியாருக்கும், காமராசருக்கும் இடையே பாலமாகவும் திகழ்ந்தார். 23.7.1957-இல் அவர் இறந்தபொழுது அவருடைய இறுதிச் சடங்குகள் ஆரிய சமாஜ சடங்குகள் வழியே எரியூட்டப்பட்டது. இவரைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறு வெளிவருதல் இன்றியமையாததாகும்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...