Wednesday, May 16, 2018

பஞ்சாயத்து ராஜ் சட்டமும், உச்சநீதிமன்றத்தில் எனது வழக்கும்

பஞ்சாயத்து ராஜ் சட்டமும், உச்சநீதிமன்றத்தில் எனது வழக்கும்
---------------------------------------------------

பஞ்சாயத்து ராஜ், நகர் பாலிக்கா சட்டங்கள் மூலமாக மத்திய அரசு இந்த அமைப்புகளுக்கு வழங்கும் நிதி வெளிப்படையாக இருக்க வேண்டும். அதே போல மத்திய அரசும், மாநில அரசும் சில அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த நிதிப் பங்கீடு இருக்க வேண்டும் என்றும், மாநில உரிமைகள் இதனால் பாதிக்கப்படக் கூடாது என்று [ WP (c) No. 34/2005 ] பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 12 இன் கீழ் மாநிலங்களுக்கான அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த நிதிப் பகிர்வீடுகள் நிர்வாகங்கள் இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் 73இன் படி மூன்றடுக்கு அமைப்பாக பஞ்சாயத்து ராஜ் அமைவது கிராம உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு நல்லது தான். இருப்பினும் மாநில நிதிக்குழுவின் சிபாரிசுகளையும் கணக்கில் கொண்டு, மாநில அரசின் அறிக்கை பெற்று மத்திய அரசு அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப திட்டங்களையும், நிதிப் பங்கீடுகளையும் செய்ய வேண்டும். 
இந்த நிலையில் மாநில அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்டால், உள்ளாட்சி அமைப்புகளில் தவறுகள் நடந்தால் கண்காணிக்கவும் முடியாது, உள்ளாட்சி நிதி அவசியம் குறித்து அமைந்த கமிட்டி 1951இல் இதைக் குறித்தான பரிந்துரைகளை செய்துள்ளது. அதை போல, 1954இல் Taxation Enquiry Committee, 1963இல் சந்தானம் கமிட்டி, 1978இல் அசோக் மேத்தா கமிட்டி, 1986இல் சிங்வி கமிட்டி போன்ற குழுக்கள் உள்ளாட்சி அதிகாரங்களை குறித்து ஆராய்ந்து உள்ளாட்சி அதிகாரங்களை குறித்து பல பரிந்துரைகளை வழங்கினர். வரி வசூல், நிர்வாகம், கிராம சபையின் தனித்துவம், சுயாட்சியும் என்பது குறித்து இந்த குழு ஆராய்ந்தன. உள்ளாட்சியும், கூட்டுறவும் ஜனநாயகத்தின் அச்சாணிகள் ஆகும். கிராமத்தில் துவங்கும் இந்த ஜனநாயக முறை நாடாளுமன்றம் வரை ஆரோக்கியமாக செயல்பட வேண்டும். அதில் எந்த மறுப்பும் இல்லை. இருப்பினும் அந்த உள்ளாட்சி நிர்வாகத்தில் சில சீர்கேடுகள் நிகழ்ந்தால் அதை கண்காணிக்க கூடிய அதிகராங்களும் அவசியமே. மாநில அரசின் கையில் சரியாக அமைந்தால் உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்படும் என்று எனது வாதத்தில் வைக்கப்பட்டது. மத்திய அரசும் நிச்சயமாக இதை கவனிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் தவறு செய்யும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது மாநில அரசிற்கு தெரிவித்துவிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எந்த வகையிலும் மாநில அரசின் அதிகாரங்கள் பறிபோகின்றன என்ற நிலையில் அரசியல் சாசனத் திருத்தம் 73 வழிவகை செய்யவில்லை என்ற உத்தரவாதம் மத்திய அரசு வழங்குகின்றது என மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் சாரம் என்னவென்றால், மாநிலத்தின் அதிகாரங்கள் பறிபோகாமல் உள்ளாட்சி அமைப்புகளை சீராக நடக்க வேண்டும் என்பது தான். மத்திய அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் என்னுடைய வழக்கு [ WP (c) No. 34 / 2005 ] முடித்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே அவசர நிலைக் காலம் 1975 காலக்கட்டத்தில் கல்வி மாநில அரசின் கையிலிருந்து மத்திய அரசின் பட்டியலுக்கு சென்றுவிட்டது. வேளாண்துறையிலும் மாநில அதிகாரங்களில் மத்திய அரசு கைவைத்துவிட்டது. இப்படி ஒவ்வொரு துறைகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்யும் போது அதை எதிர்த்து உரிமைக் குரலை எழுப்ப வேண்டும். 
அடியேன் அதிகாரமற்றவன். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கிடையாது. வெறும் கையுடன் இப்பணிகளை என்னால் இயன்றதை இன்றைக்கல்ல பல ஆண்டுகளுக்கு முன் செய்தது பதிவில் கொண்டுவர வேண்டியது என்னுடைய கடமை. பொது வாழ்வில் பலரால் அடியேன் உழைப்பை பெற்றுக் கொண்டு பலரால் புறக்கணிக்கப்பட்டாலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற இம்மாதிரியான நடவடிக்கைகளால் மனதிற்கு ஆறுதல் கிடைக்கின்றது. இதை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆகுமுன் இப்படியான செயல்களை செய்திருப்பார்களா என்பதை நண்பர்களின் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன். எத்தனை வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில், மனித உரிமை ஆணையத்தில்…
இந்த பயணம் 1983இல் தொடங்கி இன்றைக்கு வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டில் யாரும் நம்மை கட்டுப்படுத்தவும் முடியாது, புறக்கணிக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. தகுதியே தடை என்ற நிலையில் பதவிகளை வேண்டுமானால் மறுக்கலாம். அந்த பதவிகளில் யார் யாரோ கழிசடைகள் எல்லாம் இன்றைக்கு உட்கார்ந்திருக்கும் போது அந்த பதவிகளை பற்றியோ அக்கறை இருக்காது. அப்படியான பதவிகள் நாம் அமர நமக்கு தகுதியற்றது. 

#பஞ்சாயத்து_ராஜ்
#மூன்றடுக்கு_உள்ளாட்சி_அமைப்பு
#நகர்ப்_பாலிக்கா
#கிராம_சபை
#Local_Administration
#Village_Panchayat
#Grama_Sabha
#Nagar_Palika
#three_layered_local_bodies
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
16-05-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...