Thursday, May 24, 2018

அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் அத்துமீறல்களும்… ஆபத்துகளும்….


ஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன், காவிரிமுல்லை பெரியாறு போன்ற 67 நீராதாரப் பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளன. நீராதாரங்கள் என்றால் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பற்றி மட்டுமே அறிவோம். மற்ற நீராதாரப் பிரச்சனைகளை குறித்து பலருக்கு சரியான புரிதலும், அறிதலும் இதுவரை ஏற்படவில்லை. இப்பிரச்னைகள் எல்லாம் நம் மண்ணிலே போராடக்கூடியவை.


இன்னொரு பெருங்கேடு ஒன்றை, நாம் எதிர்காலத்தில் தென் திசையில் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழகம் மட்டுமல்ல, கேரளமும் கூட. அது வேறொன்றுமல்ல. அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் சீசல்ஸின் டீகோகார்சியா பிரிட்டன் மூலமாக அமெரிக்கா குத்தகைக்கு எடுத்து ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது. பிரான்சும், ரஷ்யாவும் இந்த கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டங்களை தீட்டியுள்ளது. பேருக்குத் தான் இந்தியப் பெருங்கடல். நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும், சீனாவும் வியாபாரத்திற்காகவும் (Silk Road), தனது போர்க்கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்தவும் மட்டுமல்லாமல் கடற்படை பயிற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன.
நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் போன்றவற்றுடன் நல்ல ஒருங்கிணைப்பான உறவுகள் இந்தியாவிற்கு இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியப் பெருங்கடல் என்று பெயர் இருந்தாலும், நமது கட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அயலார்களுடைய அத்துமீறலும் ஆதிக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்த கடலில். அமைதி மண்டலமாக இருந்த இந்த கடல் அயல்நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் பெரும் குழப்பங்களை உருவாக்கும் கடல் மண்டலமாக ஆகிவிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.

நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர். அவர் காலத்திற்கு பின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இம்மாதிரியான நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் ஏற்படுகின்றது. அப்படி போர் மூண்டால் கூடங்குளம், மகேந்திரகிரி, தும்பா, ஐஎன்எஸ் கட்டபொம்மன், தூத்துக்குடி ஆலைகள், கல்பாக்கம் வரை தாக்குதல் நடத்தினால் பெரும் துயர விளைவுகள் ஏற்பட்டுவிடலாம். எனவே இதை முன்கூட்டியே தடுக்கக் கூடிய வகையில் இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவின் இறையாண்மை காக்கக் கூடிய நிலையில் அயல்நாட்டுடைய அத்துமீறலை கண்காணித்து உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் தென் மாநிலங்களுக்கு பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழல் வரலாம்.
பண்டித நேரு அவர்கள் தென் தமிழகம் அமைதியான பகுதி என்று நினைத்துதான் ஒரு காலத்தில் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடமாநிலங்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் போர் பிரச்சனை ஏற்படும் என்றெண்ணினார். ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறி இந்து மகா சமுத்திரத்தில் அந்நிய நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் தென்மாநிலங்களுக்கு ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரமும், அவசியமான பணியாகும்.

#இந்து_மகா_சமுத்திரம்
#டீகோகார்சியா
#சீனாவின்_பட்டுப்_பாதை
#Indian_Ocean
#china_silk_road
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2018


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...