Friday, May 11, 2018

ஆளுநர் Governor #Article 356

மின்னம்பலம் இணைய இதழில் ஆளுநரைக் குறித்தும், கடந்த கால வரலாறு, செயல்பாடுகளைக் குறித்தும் பல தகவல்களை விரிவாக பதிவு செய்துள்ளேன். 

எனது பத்தி வருமாறு.

http://www.minnambalam.com/k/2018/05/10/16
http://www.minnambalam.com/k/2018/05/11/7

*ஆளுநர் மத்திய அரசின் கண்காணியா?*
வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
சமீபகாலமாகத் தமிழக ஆளுநர் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. தமிழக சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சூரியநாராயண சாஸ்திரியை நியமித்ததும், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக பெங்களூருவைச் சேர்ந்த ஐஐஎஸ்சி முன்னாள் பேராசிரியர் சூரப்பாவை நியமித்ததும் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

குறிப்பாக மாவட்டங்களுக்கு ஆய்வுக்காகச் சென்றதிலும், துணைவேந்தர் லஞ்சம் பெற்றது தொடர்பான நடவடிக்கையிலும், அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை தேவங்கர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த துணைப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான வழிக்குத் தூண்டுவதாகக் கூறும் ஒலிநாடா வெளியான விவகாரத்திலும் ஆளுநரின் பெயர் அடிபடுகிறது. இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு ஆளுநரால் நடத்தப்பட்டது. ஆனால், சந்திப்பின் முடிவில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தைத் தட்டியதும் பெரும் சர்ச்சையானது.

சமீபத்தில் கோவை ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்கப்பட்டதையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு அதிகாரிகளுடன் வரம்பை மீறி ஆலோசனைகளும் ஆய்வும் செய்தார் என்ற சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஏற்கெனவே புதுவை மாநில துணை நிலை ஆளுநரும், டெல்லி மாநில துணைநிலை ஆளுநரும் அங்குள்ள அரசுகளை மீறி தங்களுக்குத்தான் அதிகாரம் என்ற பிரச்சினைகளைக் கடந்த பல மாதங்களாக எழுப்பிவருகின்றனர். ஆளுநர் எல்லை மீறுகின்றாரா? அவருக்கு அதிகாரம் என்ன?

ஆளுநர் பதவிக்கு எதிரான முதல் குரல்

தமிழகம்தான் முதன்முதலாக ஆளுநர் பதவி கூடாது என்று குரலை உயர்த்திச் சொன்னது. பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டவாறு, ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்ற வகையில் விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அரசியல் களத்தில் ஆறாவது விரல் போல ஆளுநர் பதவி நீட்டிக்கொண்டிருப்பது ஆங்கிலேய ஆட்சியின் சீதனமாகும்.

1991-96 காலகட்டத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி மீது, முதல்வர் ஜெயலலிதா ஒரு கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தினார். அப்போதும் சென்னா ரெட்டி செய்தியாளர் சந்திப்பு எதையும் நடத்தவில்லை. ஆனால் வெளியில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது விளக்கமளிப்பதையும் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபொழுது அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெலலிதாவிற்கும் அவருக்கும் பனிப்போர் நிகழ்ந்தது. பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரே இருக்கலாம் என்ற சட்ட முன்வடிவு வந்தபொழுது சென்னா ரெட்டி தனது அதிருப்தியைத் தெரிவித்தார். அதே காலகட்டத்தில் சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைக் குறித்தான அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா மீது கண்டனம் தெரிவித்தார் சென்னா ரெட்டி. மகாராஷ்டிரா பூகம்ப நிதிக்கு நன்கொடையாக சென்னா ரெட்டியும் ஜெயலலிதாவும் தனித்தனியே நிதி திரட்டினார்கள். ஆளுநர் மாளிகையைப் புதுப்பிக்க சுமார் ரூ.17.90 இலட்ச மதிப்பீட்டில் அனுப்பிய கோப்பினை ஜெயலலிதா கிடப்பில் போட்டுவிட்டார் என்று சென்னா ரெட்டி வேதனைப்பட்டதும் உண்டு. அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் சென்னை வந்தபோது அவரை வரவேற்க ஆளுநரும் முதல்வரும் தனித்தனியே பந்தல்கள் அமைத்து வரவேற்ற நிகழ்ச்சியைப் பத்திரிகைகள் நையாண்டியாகவும் எழுதின.

தமிழகத்தில் இருந்த ஆளுநர்கள் சிலர் அந்தப் பதவிக்கேற்ற முறையில் செயல்பட்டதையும் மறக்க முடியாது. சுர்ஜித் சிங் பர்னாலா ஆளுநராக இருந்தபோது 1991இல் அன்றைய பிரதமர் சந்திரசேகர், ஜெயலலிதா தூண்டுதலால் திமுக ஆட்சியைக் கலைக்க முற்பட்டபோது அதற்கேற்ற அறிக்கையைத் தர மறுத்துவிட்டு ஆட்சிக் கலைப்பு கூடாது என்ற நிலையில் இருந்தார். ஆனால் அவரையும் மீறி ‘வேறு வழிகளிலும்’ (Otherwise) மாநில ஆட்சியை பிரிவு 356ஐக் கொண்டு கலைக்கலாம் என்ற நிலையில் கலைக்கப்பட்டது.

ஆளுநர் பதவி அவசியம்தானா?

இந்தியாவில் பல அரசியல் கட்சிகள், ஆளுநர் பதவி இந்திய அரசியல் அமைப்பில் தேவையற்றது என்னும் கருத்தைக் கொண்டுள்ளன. மத்திய அரசை ஆளுகின்ற கட்சியினர், ஒருசில தலைவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் தரப்படுகின்ற பதவிதான் ஆளுநர் பதவி என்றும், மாநில அமைச்சரவை பரிந்துரை செய்யும் கோப்புகளில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பெற்றவர் ஆளுநர் என்ற அலங்காரப் பதவியில் இருப்பவர் என்றும், ஆளுநர்கள் ராஜ்பவனின் வாடகை தராத குடியிருப்புவாசிகள் என்றும் நீதிபதி கிருஷ்ணய்யர் குறிப்பிட்டதுண்டு. இந்தப் பகட்டான பதவியால் அரசு கஜானாவின் பணம் விரயமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் பணியும் பொறுப்பும்

நாடு விடுதலை பெற்றபின் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில், மாநில நிர்வாகத்தில் ஆளுநருடைய பொறுப்பைக் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியலமைப்புச் சட்டக் குழுவானது அமைக்கப்பட்டபோது ஆளுநரின் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆளுநரை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று பல சமயங்களில் விவாதங்களை நடத்தியும் எவராலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பின்னர் ஆளுநரை சிறப்பு தேர்தல் குழு என்ற ஒன்றை அமைத்து அந்தந்த மாநிலத்தின் அரசே நியமிக்கலாம் என்று 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அரசியல் நிர்ணய சபைத் தலைவரிடம் அரசியல் சட்ட வரைவை சமர்ப்பித்தபோதும் இந்த யோசனை குறித்து மீண்டும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் மாநில சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பேரில் ஒருவரை ஆளுநராக நியமிக்கலாம் என்ற கருத்தும், மாநில மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டு தேர்தல் மூலமாக ஆளுநரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற யோசனையும் கூறப்பட்டது.

இதில் எந்த முறையில் ஆளுநரை நியமித்திருந்தாலும் சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலமே ஆளுநரை நீக்கம் செய்யலாம் என்று வரைவுச் சட்டம் கூறியது. இது குறித்து பரிசீலிக்க சிறப்புக் குழுவை அரசியல் நிர்ணய சபைத் தலைவர் அமைத்தார். அந்த குழுவில் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று, குடியரசுத் தலைவரே நேரடியாக ஆளுநரை நியமிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின், அரசியல் நிர்ணய சபை விவாதத்திற்குப் பின் 1949ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி அன்றைய பிரதமர் நேரு கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில், மாநில அரசு பொதுவான ஒரு நபரை ஆளுநராக நியமிப்பது நல்லது. அரசியலில் நேரடியாக ஈடுபடாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த திறமைசாலி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். மேலும் கல்வித் துறையைப் போல பல்துறை அறிஞர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் அவர்கள் மாநில அரசுடன் இணக்கமாக இருந்து அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவராக அவர் இருக்க வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார்.

பின்னாளில் அவையெல்லாம் சம்பிரதாயப் பேச்சோடு போய்விட்டது. ஆளுநர் நியமனம் குறித்தான சர்வ அதிகாரங்களும் மத்திய அரசின் கைகளுக்குச் சென்றுவிட்டது. ஆளுநராக நியமிக்கப்படுபவர் சொந்த மாநிலத்தைத் தவிர்த்து மற்ற மாநிலத்தில் மட்டுமே நியமிக்கப்படுவார் என்ற மரபும் மீறப்பட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சரோஜினி நாயுடுவின் (இவருடைய கணவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்) மகள் அந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைப் போன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உஜ்ஜல் சிங் பஞ்சாபின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சென்னை மாகாணம், மும்பை மாகாணம் மற்றும் அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரகாசா எழுதிய ‘இந்தியாவின் ஆளுநர்கள்’ என்ற புத்தகத்தில் சில ஆளுநர்கள் தங்களது பதவிக் காலத்திலேயே பொறுப்பினை மறந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதால் அன்றைய குடியரசத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து எச்சரிக்கையும் செய்தார். இது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆளுநர்கள், முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்திலும், மாநில அரசுகள் கலைக்கும்போதும் தங்களுடைய பங்கு முக்கியமானது என்று கருதுகின்றனர். மேலும், ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அவர் மத்திய அரசின் கீழ்ப்பட்டவர் அல்லது மத்திய அரசின் கண்காணிப்பிற்கு உட்பட்டவர் என்ற வகையில் இல்லை. ஆனால் அவர் சுதந்திரமான ஒரு தனிப்பட்ட அரசியல் அமைப்பின் அங்கமாகவும், மாநில அரசின் அமைப்பில் தலைமையை ஏற்பவர் எனவும், ஹெக்டே முதல்வராக இருந்தபோது, கர்நாடக அரசு 1980இல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை கூறுகிறது. மத்திய – மாநில உறவை ஆராயும் சர்க்காரியா குழு, ஆளுநரைப் பற்றித் தனியாகக் குறிப்பிட்டுள்ளது. அது, ஆளுநருடைய பொறுப்பு மிக முக்கியமானது என்றும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த பாரபட்சமற்றவரே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும், அரசியலில் அண்மைக் காலம் வரை ஈடுபட்ட அரசியல்வாதியாக இருந்தவரை ஆளுநர் பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது.

சர்க்காரியா கமிஷனில் ஆளுநர் பற்றிய முக்கியமான பரிந்துரைகளை கீழ்வருமாறு தொகுக்கலாம். அதாவது, மத்திய அரசிலுள்ள ஆளும் கட்சியைச் சார்ந்தவரை மாற்றுக் கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு நியமிக்கக் கூடாது. குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் குறிப்பிட்ட மாநிலங்களின் முதல்வரை அவசியம் ஆலோசித்த பின்பு ஆளுநரை நியமிக்க வேண்டும். இதனை முறைப்படுத்தும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 120ஆவது பிரிவைத் திருத்த வேண்டும். ஆளுநர் பதவி ஐந்து ஆண்டுகளுக்கு உரியது என ஆக்கப்பட வேண்டும்.

ஆளுநரைப் பதவியில் இருந்து விருப்பப்படி விடுவிக்கக் கூடாது. ஒருவரை ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கும் முன்பு அவரின் விளக்கத்தைப் பெற வேண்டும். ஓர் ஆளுநரை பதவியில் இருந்து விலக்க நேர்ந்தாலோ, மாற்ற நேர்ந்தாலோ அதற்கான காரணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆளுநர் அதைப் பற்றி விளக்கங்கள் அளித்திருந்தால் மக்களவை உறுப்பினர்கள் கவனத்திற்கு அதையும் கொண்டுவர வேண்டும். ஆளுநர் பதவி வகிக்கின்றவர் வருமானம் தரும் வேறு எந்தப் பதவியையும் ஏற்கக் கூடாது என்ற மரபை உருவாக்க வேண்டும். கோப்புகள் பற்றி விளக்கம் பெற, மாநில அரசின் ஆலோசனை பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. கொள்கைத் திட்டங்களை மாநில அரசிடம் வலியுறுத்துவது ஆளுநரின் பணியல்ல. பெரும்பான்மை ஆதரவு ஓர் அரசியல் கட்சிக்கு இருக்கிறது என்பதை சட்டமன்றத்தில்தான் சோதிக்க வேண்டுமேயொழிய ஆளுநர் ராஜ்பவனில் சோதனையில் ஈடுபடக் கூடாது.

இதுதான் ஆளுநரைப் பற்றி சர்க்காரியா வழங்கிய சுருக்கமான தொகுப்புரை ஆகும். ஆனால் நாட்டில் நடப்பில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?…

*

மேலே குறிப்பிட்ட கர்நாடக மாநில வெள்ளை அறிக்கையோடு இல்லாமல், 1965இல் மொரார்ஜி தேசாய், ஹனுமந்தய்யா தலைமையில் அமைத்த ‘நிர்வாகச் சீர்திருத்தக் குழு அறிக்கையும், தமிழகத்தின் திமுக அரசு அமைத்த ராஜமன்னார் குழுவின் அறிக்கையும், இந்திரா காந்தி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு அறிக்கையும், மேற்கு வங்க ஜோதி பாசு அரசு அளித்த வெள்ளை அறிக்கையும், என்.டி.ராமாராவ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட ஹைதராபாத் பிரகடனமும், ஸ்ரீநகரில் ஃபரூக் அப்துல்லா நடத்திய மாநாட்டின் ஸ்ரீநகர் பிரகடனமும், கர்நாடகத்தில் அப்போதைய முதல்வர் ஹெக்டே எடுத்த தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளும், அதன் பின் உச்ச நீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பும், மத்திய அரசின் பூஞ்ச் கமிஷனின் பரிந்துரைகளும், மாநிலங்களிடையேயான கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகளும் ஆளுநரின் பணிகள், அதிகாரங்கள், வரம்புகள், சமன்பாடுகள், ஆட்சிக் கலைப்பு குறித்தான முடிவுகள் போன்றவற்றை வரையறை செய்திருக்கின்றன. இருந்தாலும், மத்திய அரசின் கண்காணியாகவே ஆளுநர்கள் இதுவரை செயல்பட்டுவந்துள்ளனர். இவ்வளவு குழுக்களின் ஆய்வறிக்கைகள் இருந்தும் எதுவுமே ஈடேறாமல் இருக்கின்றன.

அமெரிக்காவில் ஆளுநர் பொறுப்புக்கு சமமான பதவியை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். பிரிட்டிஷ் காலனியின் கீழிருந்த இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற காமன்வெல்த் நாடுகளில்தான் ஆளுநர் என்ற பொறுப்பு உள்ளது.

அரசியல் சாசனம் பெரும்பான்மையைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்படவில்லை. மக்களவைக்கு அல்லது மாநில சட்டமன்றத்திற்கு அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. இதுவரை சட்டமன்றப் பெரும்பான்மை பெற்றுத்தான் ஆட்சியமைக்கும் மரபு நடைமுறையில் உள்ளது. 1960இல் திருவிதாங்கூரில் பட்டம்தாணுபிள்ளை அமைச்சரவை அமைத்தார். அவரது கட்சியில் 10 உறுப்பினர்களே இருந்தனர். பல மடங்கு மாற்றுக் கட்சி உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு பட்டம்தாணுபிள்ளை தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு இந்திரா காந்தி மத்தியில் சிறுபான்மை பலத்தைப் பெற்றிருந்தாலும், மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தினார். இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுகிறபோது குடியரசுத் தலைவர், ஆளுநரின் முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகும். ஆளுநர் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டுச் செயல்பட வேண்டுமேயொழிய அதனை மீறிச் செயல்படுவது நல்லதல்ல.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பிரகாசா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்ததால், முதல் காங்கிரஸ் அமைச்சரவை உருவாகக் காரணமாக இருந்தார். இதில் அவரது முடிவு சர்ச்சைக்குள்ளானது.

ஏஜெண்ட் அல்ல, உறவுப் பாலம்

ஆளுநர் மத்திய அரசின் கீழுள்ள ஏஜெண்டாகவோ அல்லது ரப்பர் ஸ்டாம்பாகவோ செயல்படுகிறார். ஆளுநர் பதவி என்பது வெறும் அலங்காரத்திற்காகவும், அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்காகவும் மட்டுமே என்று இல்லாமல், மத்திய – மாநில அரசுகளுக்கு ஒரு பாலமாக இருந்து மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய பயன்களைப் பெற்றுத்தருவதில் முக்கியப் பங்கு ஆற்றினால், மக்கள் பிரச்சினைகள் தீர வாய்ப்புண்டு. மத்திய – மாநில உறவுகளில் பிரச்சினைகள் ஏற்படாவண்ணம் கவனித்துக்கொள்வதிலும், மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி இல்லாதபோது அதை நிர்வாகம் செய்யும் பொறுப்பிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலங்களில் சம்பந்தப்பட்ட அரசை அகற்றுவதிலும் ஆளுநரின் பங்களிப்பு முக்கியமானது.

அரசியல் சட்டத்தின்படி ஆளுநர் என்பவர் நிர்வாகத் தலைவராக இருந்தாலும், அவருக்கான அதிகாரங்கள் குறைவு என்பதையும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் அவர் செயல்பட வேண்டும் என்பதையும் அரசியல் சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநர், கூட்டாட்சித் தத்துவத்திற்கு முக்கியமான அங்கம் வகிக்கிறவராகவும் ஒரு மாநிலத்தில் சட்டமன்றம் இல்லாத நேரத்தில் அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற பொறுப்பை உடையவராகவும் இருக்கிறார் எனவும் வழக்கறிஞர் சோலி சோரப்ஜி கூறுகின்றார்.

கடந்த கால ஆளுநர்கள்

கடந்த காலங்களில் ஆளுநர்களை நியமிக்கும்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ஆளுநரை நியமிக்கும்போது பல பிரச்சினைகள் எழுந்தன. இமாசலப் பிரதேச உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ஆளுநராக நியமிக்க இருந்த ராம்லாலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து ராஜமன்னார் குழு தன் அறிக்கையில் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே ஆளுநரை நியமிக்கவேண்டுமென்று பரிந்துரைத்தது.

ஆளுநரை நியமிக்கும்போது மத்திய அரசு பாரபட்சமாகவும், தங்களுடைய கட்சியில் உள்ள ஒரு சிலரைத் திருப்திப்படுத்தும் வகையிலும், ஆளுநருடைய அரசியல் வரலாற்றைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமலும், அவருடைய நேர்மையை ஆராயாமலும் நியமிப்பது நல்லதல்ல.

ஆளுநரை நியமிக்கும்போது சம்பந்தபட்ட மாநில முதல்வருடைய ஆலோசனையைக் கேட்க வேண்டும். ஆளுநராக நியமிக்கப்படுபவர் தங்களுக்கென தனியாக அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில் செயல்படாமல், வீண் ஜம்பத்திற்கு ராஜ்பவனில் செலவுகள் செய்து மக்களுடைய வரிப்பணத்தைப் பாழ்படுத்துவதைத் தவிர்த்து எளிமையாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் ஜனதா ஆட்சி மத்தியில் இருந்தபோது பிரபுதாஸ் பட்வாரி தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் காந்தியவாதி. சென்னை ராஜ்பவனில் மது, புகைபிடிப்பதை அறவே தடுத்துவிட்டார். அந்தப் பிரச்சினையால் காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பட்வாரி விலக்கப்பட்டார். மத்திய அரசு தாங்கள் விரும்பும் ஒருவரைத் தங்களின் ஏஜெண்ட் என்ற அடிப்படையில் நியமிப்பதோ விரும்பாதபோது பதவியில் இருந்து தூக்கி எறிவதோ கூடாது.

ஆளுநர் ஒரு மாநில நிர்வாகத்தில் நண்பராகவும், அதை வழிநடத்திச் செல்லக்கூடிய வழிகாட்டியாகவும் மாநில அரசுக்காக வாதிடுபவராகவும், அரசியல் அமைப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநருடைய அதிகாரங்கள் 154, 160, 161, 162 ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. 356ஆவது பிரிவில் இந்தியக் குடியரசுத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, ஆளுநருடைய பங்கு மிக முக்கியமானது. ஆனால் எஸ்.ஆர். பொம்மை வழக்குக்குப் பின் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ தங்களது விருப்பத்திற்கேற்றவாறு பிரிவு 356ஐப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த 356ஆவது பிரிவைக் கொண்டு உத்தராகண்ட் அரசோடு சேர்த்து 126 முறை மாநில அரசு கலைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பதவி தேவையில்லையா?

ஆளுநர் பதவி தேவையில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா 25-07-1980இல் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்து, ‘மக்களின் வரிப்பணத்தில் தண்டத் தீனியாக இருக்கும் ஆளுநர் பதவி தேவையற்றது’ என்று கூறினார்.

அரசியலமைப்பு அவையில் கவர்னர் பதவியைப் பற்றிய விவாதம் வந்தபொழுது விடுதலைப் போரின் முக்கிய தளபதியாக விளங்கிய மஹாவீர் தியாகி, ‘மத்திய அரசின் ஏஜெண்டாகத்தான் ஆளுநர் இருப்பார்’ என்று பேசினார்.

சென்னை ராஜ்பவனில் பட்வாரி ஆளுநராக இருந்தபொழுது கிருபளானி விருந்தினராக வந்து தங்கினார். தற்போது தினமணி ஆசிரியரான வைத்தியநாதன் போன்றவர்களெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு. கிருபளானி காந்தியார் காலத்திலேயே மூத்த தலைவராக விளங்கியவர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பட்வாரி, என்னை ஊருக்குச் செல்லவிடமாட்டேன் என்கிறார். இந்த மாளிகை மாதிரியான ராஜ்பவனில் தங்க மனது ஒப்பவில்லை. வேலையில்லாத மூத்த காங்கிரஸ்காரர்களைத் திருப்திப்படுத்த, வசதியோடு அவர்கள் வாழ நியமிக்கும் பதவிதான் கவர்னர். இதுவரை இப்படித்தான் நடந்துள்ளது’ எனச் சொன்னதுண்டு.

இன்று பல்வேறு சர்ச்சைகளில் அடிபடும் தமிழக ஆளுநர் புரோகித், ராஜ்பவனின் செலவுகளைக் கட்டுப்படுத்தி எளிமையாக வாழ்கின்றார் என்றும், அங்கு நடக்கும் ஊழலைக் கண்டுபிடித்து சட்டரீதியாக முறையாக நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தகவல்.

என்றாலும், எந்தவொரு தகுதி அடிப்படை இல்லாமல், தேர்ந்தெடுக்கப்படாத அரசியல் சாசன பதவியாக விளங்கும் ஆளுநர் பதவி தேவைதானா, அல்லது அதை முறைப்படுத்த வேண்டுமா என்று ஆய்வு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com
#கவர்னர்
#ஆளுநர்
#Article 356
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...