Wednesday, May 23, 2018

இன்னும், காவிரி ஒரு தொடர்கதையா?.

இன்னும், காவிரி ஒரு தொடர்கதையா?.
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பல நாடுகளிலோ, பல மாநிலங்களிலோ பாயும் நதி தீரங்களின் உரிமைகளில் மேல்பாசனங்களில் என்ன உரிமைகள் உள்ளனவோ, அதே கடைமடைப் பகுதிகளான கீழ்ப்பாசனப் பகுதிகளுக்கும் உண்டு என்று சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஹெல்சின்கியில் (Helsinki) 1956இல் கூடி முடிவெடுத்தனர். அனைத்து உலக நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன. இதன்படி பன்னாட்டு நதிகளின் நீர்ப் பகிர்வீடு குறித்தான பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட 62 ஆண்டுகளாக நதிநீர்ச் சிக்கலுக்கு இதுதான் அடிப்படை தீர்வுக்கு பயன்படுத்தப்படும் கொள்கையாகும். அந்த கொள்கையின்படி காவரியில் தமிழகத்துக்கான உரிமைகள் அனைத்தும் இருந்தும் தொடர்ந்து மத்திய அரசாலும், கர்நாடக அரசாலும் மறுக்கப்பட்டு வருகின்றது. அதுவும் குறிப்பாக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட பின் 22 ஆண்டுகளாக மூத்த சகோதரர் போல மத்திய அரசை கர்நாடக அரசு அணுகியது வெட்கக்கேடான முடிவுகளாகும். 

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தன் விருப்பம்போல அணைகளை கர்நாடகம் கட்டும் போது இந்திய அரசு 50 ஆண்டுகளாக வேடிக்கை தான் பார்த்து வந்தது. காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே 21 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனற்றுப் போய்விட்டது. உச்ச நீதிமன்றத்தில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்த காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. அப்போது தமிழகத்தில் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். நடுவர் மன்றம் 1990இல் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் விசாரணையை துவங்கி இடைக்கால நிவாரணம் என கடந்த 21-06-1991இல் உத்தரவு பிறப்பித்தும் அதையும் கர்நாடகம் மதிக்கவில்லை. மத்திய அரசும் இதைத் தட்டிக் கேட்கவும் இல்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை 05-02-2007இல் வழங்கி உச்ச நீதிமன்றம் தலையிட்டபின் தான் 19-02-2013இல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. 

இதனால் தமிழகத்திற்கு மாதவாரியாக 192 டி.எம்.சி., நீர் 2007லிருந்தே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் வழங்கவில்லை. மத்திய அரசும் பாராமுகமாக இருந்தது. இதன்பின் தமிழகம் மேல்முறையீடு செய்து 10 ஆண்டுகளுக்கு பின் 2017ஆம் ஆண்டில் வழக்கை விசாரித்து இதன் இறுதித் தீர்ப்பை 16-02-2018இல் வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் அளவு 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டி.ம்.சியாக குறைத்துவிட்டது. அத்தோடு இதை நடைமுறைப்படுத்த 6 வாரங்களில் ஒரு வரைவுத் திட்டத்தை (Scheme) வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் மத்திய அரசோ, கர்நாடகத் தேர்தலில் பிரதமர் பிரச்சாரத்தில் இருக்கிறார். கேபினெட் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கவில்லை என்று அவகாசத்தை மேலும் கேட்டது. உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் போக்கை கண்டித்தபின் கடந்த 14-05-2018இல் வரைவு காவிரி செயல்திட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இடைப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றமும் 15 ஆண்டுகளுக்கு இதை குறித்து வழக்கு தொடுக்க முடியாது என்ற ஆணையையும் தனது இறுதித் தீர்ப்பில் பிறப்பித்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வரைவு மசோதாவை திருத்தியளிக்க காவிரிப் பாசன நான்கு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியது. அதை ஏற்று உச்ச நீதிமன்றம் திருத்தி அளிக்குமாறு உத்தரவிட்டது. மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர். யு.பி.சிங், கடந்த 17-05-2018இல் திருத்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் கடந்த 18-05-2018இல் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. நடுவர்மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு, நதிநீர் தாவாச் சட்டம் 56 பிரிவு 6(ஏ)ன்படி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி,

1. காவிரி மேலாண்மை ஆணையம் அனைத்து அதிகாரங்களோடு அமைக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு எந்த அதிகாரங்களும் இல்லையென்று சொன்னாலும் இந்த உத்தரவில் சில குழப்பங்கள் உள்ளது.
2. அணைகளில் உள்ள நீர்த் திறப்பு மற்றும் பகிர்வு போன்றவற்றை இந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தாலும், குறிப்பாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட முழு கட்டுப்பாடும் இந்த ஆணையத்தின் கைகளில் இருக்கிறதா என்பதும் சற்று குழப்பமாக உள்ளது.
3. பெங்களூருவில் இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டது ஓரளவு நிம்மதி. ஆனால் நிர்வாக அலுவலகம் ஒன்று பெங்களூருவில் திறக்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லை.
4. ஆணையத்தின் தலைவராக நன்கறிந்த தலைமைப் பொறியாளர் ஒருவரோ, மூத்த இந்திய ஆட்சிப்பணியில் இருப்பவரையோ நியமிக்கப்பட்டு, இரண்டு முழுநேர உறுப்பினர்கள், இரண்டு பகுதிநேர உறுப்பினர்கள், காவிரி பாசான மாநிலங்களைச் சார்ந்த நான்கு பிரதிநிதிகள் இந்த ஆணையத்தில் இடம் பெறுவார்கள்.
5. இன்னொரு பிரச்சனை என்னவென்றால், காவிரியின் துணை ஆறுகளின் கட்டுப்பாடு அந்தந்த மாநில அரசுகளின் கையில் தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் கர்நாடகம் துணை ஆறுகளில் தனது விருப்பம் போல தடுப்பணைகளை கட்டிக்கொள்ளும். இது கர்நாடகத்திற்கு சாதகமானதாக அமைந்துவிடும்.
6. அதுபோல, பிலிகுண்டுலுவில் இருந்து நீர்வரத்தை கண்காணிப்பதையும், அளவீடு செய்யும்போது தமிழகத்திற்கான நீர்வளத்தின் அளவில் குறையலாம். 
7. இந்த நிலையில் தமிழகம் நிலத்தடி நீர் பிரச்சனைகளைக் குறித்து சரியான நிலையை எண்ணி வாதாடவில்லை. பெங்களூருவிற்கு குடிநீர் கொடுப்பதை குறித்து நாம் சரியாக வாதாடவில்லை.
8. குறுவை சாகுபடியில் சரியான காலக்கட்டத்தில் தண்ணீர் கர்நாடக அரசு திறந்துவிட தமிழக அரசு தன்னுடைய வாதத்தை சரியாக மேற்கொள்ளவில்லை. கர்நாடக அரசு 1974 ஆம் ஆண்டுக்கு பிறகு குறுவைச் சாகுபடிக்கு தண்ணீர் தராமல் இழுத்துக் கொண்டு தான் வருகிறது. பயிர்கள் நடப்பட்டு கருகும் நிலைமை தான் ஒவ்வொரு முறையும் நடந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட இந்த வரைவு திட்டத்தையாவது வருகின்ற ஜுன் முதல் வாரத்தில் வெளியிட வேண்டும். திரும்பவும் மத்திய அரசு ஒப்புதல் பெறவில்லை என்று ஏதாவது கதைகளை பேசி காலத்தை தாழ்த்த கூடாது.
9. பக்ரா – பியாஸ் போன்ற மேலாண்மை பொறியமைப்பை தமிழகம் பெற்றிருக்க வேண்டும். தவறிவிட்டது. ஏனென்றால் இந்த அமைப்பு முறை அந்தந்த மாநிலத்தில் உரிய விகிதத்தில் பகிர்ந்தளிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
10. தமிழகத்தில் கீழ்பவாணி, மேட்டூர், அமராவதி, கர்நாடகத்தின் ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர், கபினி, கேரளாவின் பாணாசுர சாகர் போன்ற அணைகளின் ஒட்டு மொத்த மேலாண்மையை இந்த ஆணையத்திடம் வழங்கியிருக்க வேண்டும். 
11. கர்நாடக அரசு புதியதாக அணை கட்ட திட்டமிட்டுள்ள மேகதாது, இராசிமணல், சிவசமுத்திரம் குறித்தான அனுமதிகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கின்றதே. இதன் முடிவு என்னவாகும்.

காவிரிப் பிரச்சனையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 11 பிரதமர்களின் கவனத்திற்கு வந்தும் உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராடியும் நமக்கான தீர்ப்பு சரியாக, நியாயமாக கிடைத்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இந்த பிரச்சனையினுடைய போக்கு எதிர்காலத்தில் எப்படியிருக்கும். இன்னும் 15 ஆண்டுகளில் இந்த பிரச்சனை குறித்து வழக்கு மன்றத்தில் எடுத்துச் செல்ல முடியுமா? என்பது நம்முடைய வினா.

செய்தித்தொடர்பாளர், திமுக.,
நூலாசிரியர், 
இணையாசிரியர், கதை சொல்லி,
பொதிகை – பொருநை - கரிசல்
rkkurunji@gmail.com

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...