மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அசோக் மித்ரா நேற்று (01/05/2018) காலமானார். அவருக்கு வயது 90. மார்க்சிய பொருளாதார சிந்தனையாளரராக விளங்கிய அசோக் மித்ரா, விடுதலைக்கு முந்தைய வங்க தேசத்தில் பிறந்தவர். டாக்கா பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த சமயத்தில் வங்க தேசப் பிரிவினைக்கு பிறகு இந்தியாவிற்கு வந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலை படிப்பை முடித்தார். பின்னர், லக்னோ பல்கலைக்கழகத்திலும், கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் பேராசிரியராக பணியாற்றியவர்.
மேற்கு வங்கத்தில் ஜோதிபாசுவின் அமைச்சரவையில் கடந்த 1977 முதல் 1987 வரை நிதியமைச்சராக பதவி வகித்தார். மாநிலங்களவைக்கு 1990இல் தேர்வான இவர், தொழிற்துறை - வர்த்தக விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் இருந்தார். இந்திரா காந்தியின் அமைச்சரவையில் 1970 முதல் 1972 வரை தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்தார்.
சென்னையில் அண்ணச்சி வைகோ நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டிலும் பங்கேற்றார். அந்த சமயத்தில் அவர் கொல்கத்தா செல்லும்வரை உடனிருந்தேன். நான் கொல்கத்தா செல்லும்போது அவரை சந்திப்பதுண்டு. சென்னையில் ஏதேனும் தேவையெனில் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வோம்.
என்ன வருத்தமென்றால் தன்னலம் கருதாத இப்படிப்பட்ட மாமேதையின் இறப்புக்கு டெல்லி வட்டாரத்திலிருந்து ஒரு இரங்கல் செய்தி கூட வரவில்லையே. தகுதியான, ஆற்றலான ஆளுமையை இனிமேலாவது வாய்ப்புள்ளவர்கள் வாசிக்க வேண்டும்.
#பொருளாதார_நிபுணர்
#அசோக்_மித்ரா
#மேற்கு_வங்கம்
#West_Bengal
#Ashok_Mithra
#Economical_advisor
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-05-2018
No comments:
Post a Comment