உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு உத்தரகண்ட் நீதிபதி கே.எம்.ஜோசப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்வதற்காக கூடிய கொலீஜியம் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்காக கொலீஜியம் சார்பில் மத்திய அரசுக்கு பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் பெயர்களை அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அவற்றை மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும்.
அவ்வாறு, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசப்பின் பெயரை மத்திய அரசுக்கு கொலீஜியம் அண்மையில் பரிந்துரைத்தது. ஆனால், அவரது பெயரை ஏற்க மறுத்த மத்திய அரசு, இது தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்தை கேட்டுக் கொண்டது.
மத்திய அரசின் இந்த முடிவு நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உத்தரகாண்டில் கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்தவர் என்ற காரணத்தால் தான், நீதிபதி. கே.எம்.ஜோசப்பின் பெயரை மத்திய அரசு ஏற்கவில்லை என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இந்நிலையில், நீதிபதி கே.எம்.ஜோசப்பின் பெயரை மறுபரிசீலனை செய்வது குறித்து டெல்லியில் நேற்று நடந்த கொலீஜியம் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. எனினும், இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் முடிவடைந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-05-2018
No comments:
Post a Comment