Friday, May 4, 2018

யார் வேண்டுமானாலும் தகுதியே இல்லாமல் தமிழகத்தில் முதல்வராகலாம்.

சற்று முன்,சர்தார் படேல் சாலையில் ராஜ்பவன் அருகில் வேளச்சேரி சந்திப்பில் 10, 15 நிமிடங்கள் காவல் துறையினர் வாகனப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்திவிட்டனர். வேளச்சேரியிலிருந்து கிண்டியை நோக்கி 20 படைப் பரிவார கார்களோடு கடந்து சென்றது. காவல்துறை காத்திருந்த வாகனங்களை செல்ல அனுமதித்தனர். யாருக்காக இப்படி என்று கேட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் பழனிச்சாமி என்றார்கள். அப்போது கோபமும் ஆத்திரமும் வந்தது. யார் இந்த பழனிச்சாமி? எம்.ஜி.ஆருக்கு இந்த பழனிச்சாமியைத் தெரியுமா? என்ற கேள்வி எழுகிறது.

அத்தோடு எந்த பதவியும் வகிக்காமல் தமிழகத்திற்காக களப்பணியாற்றி மறைந்த சுத்தமான ஆளுமைகளான வ.உ.சி,, சேலம் வரதராஜூலு நாயுடு, பெரியார்,ஜீவா போன்றோரோடு தமிழகத்தில் பதவிகளை வகித்த ஓமந்தூரார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், அண்ணா, கலைஞர், மறைந்த பக்தவச்சலம், தமிழக எல்லைகளைமீட்டுக்கொடுத்தம.பொ.சி, கக்கன்,காய்தேமில்லத், இரா. செழியன், அழகர்சாமி ........
தற்போது நம்முடன் இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யா இன்றும் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பழ. நெடுமாறன்,நல்லகண்ணு, வைகோ போன்றவர்களெல்லாம் இந்த இடத்திலிருந்தால் எளிமையாக இருப்பார்களே என்று தோன்றியது. இப்படியான பிம்ப,போலி அரசியலில் தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை, மீட்கப்பட வேண்டிய உரிமைகளை இவர்களைக் கொண்டு என்ன மீட்கப் போகிறோம் என்று தான் தோன்றியது. மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார்கள். என்ன செய்ய?

காசுக்கு ஓட்டை விற்றால் வணிக அரசியல் காலத்தில் நேர்மையான அரசியல் எங்கே எடுபடும். இந்த எடப்பாடி பழனிச்சாமி 1980களில் எங்கே இருந்தாரோ? பரமபத விளையாட்டில் ஏணி ஏறி உயர்ந்துவிட்டாலே தலைவராகிவிடலாம். தகுதிகள் வேண்டாம், உழைப்பு வேண்டாம், நேர்மை வேண்டாம், ஆளுமை வேண்டாம், படிப்பு -புரிதல் வேண்டாம், மக்களைப் பற்றி சிந்தனை வேண்டாம், அனுபவம் வேண்டாம், களப்பணிகள் வேண்டாம், யார் வேண்டுமானலும் முதலமைச்சராகலாம்.
ஒரு சாதாரண அலுவலக உதவியாளர் பணியை கேட்டு விண்ணப்பித்தாலே அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும், தகுதிகளையும் கேட்டு தான் பணியமர்த்துகின்றனர். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்ற நிலையில் பல கசடுகளும் உள்ளே நுழைந்து எளிதாக உயர்ந்த இடத்திற்கு வந்துவிடுகிறார்கள்.
ஏனென்றால் தகுதியும், தரமும் தேவையில்லை. தகுதியே தடை தான்.
விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்
….. …. ….. … …..
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே, தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்,
“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டுஎனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்!
… … … ….
விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-05-2018

No comments:

Post a Comment

Reached me today…