ரணில் விக்ரமசிங்கே பதவிப் பொறுப்பேற்கும் விழாவில் அதிபர் மைத்ரி சிரிசேனா, மகிந்த ராஜபக்ஷே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் 19வது பிரதமராகப் பதவி ஏற்கும் ரணில் நான்காவது முறை பிரதமர் பொறுப்பேற்கின்றார். சிறிமாவோ பண்டார நாயகா நான்கு முறை பிரதமராக பதவியேற்றார் என்ற நிலையை ரணில் சமப்படுத்துவிட்டார்.
சிங்களர் கட்சிகள் அனைத்தும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க முடிவு செய்துவிட்டார்கள். அதிபருடைய செயலகத்தில் பதவிப் பொறுப்பையும் ரணில் சற்று முன் ஏற்றுவிட்டார். அவருடன் எந்த அமைச்சர்களும் இன்றைக்கு பொறுப்பேற்கவில்லை.
ஏனென்றால் தேசிய அரசில் அனைத்து சிங்களவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே திரும்பவும் வரும் 24ம் தேதி மற்றவர்களும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என்று தெரிகிறது.
ரணில் விக்ரமசிங்கே கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும்போது 5,00,566 விருப்ப வாக்குகள் (preference vote) பெற்றிருந்தார். இது இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் ஆகும். இதற்கு முன்பு, 1994தேர்தலில் சந்திரிகா 4,64,588 விருப்ப வாக்குகள் பெற்று சாதனை படைத்திருந்தார்.
1993 மே7ம் தேதி பிரேமதாசா குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். பிரதமராக இருந்த டி.பி.விஜயதுங்கே அதிபராக பதவியேற்றபின் ரணிலுக்கு முதன்முறையாக பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஜெயவர்த்னே காலத்தில் பிரதமருக்கான அனைத்து அதிகாரங்களையும், அதிபருக்கு மாற்றி் சட்டத்தைத் திருத்தினார். சமீபத்தில் 19வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தில், இலங்கை பிரதமருக்கு பழைய அதிகாரங்கள் திரும்பவும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அளவில் ரணில் அதிகாரமுள்ள பதவியில் தற்போது அமர்கின்றார்.
கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பிரதமர்கள் அதிகாரம் இல்லாமல், பிரதமர் என்ற அலங்கார பொம்மையாகவே இருந்தனர். இனிவரும் 20வது சட்டத்திருத்தம் மூலம் தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் குறைக்கக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ரணில் ஏற்கனவே தமிழக மீனவர்களை எல்லைதாண்டினால் சுடுவதில் தவறில்லை என்று கொக்கரித்தவர். ஈழத்தமிழ் மக்களுக்கு என்ன விடியல் ஏற்படுமோ?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-08-2015
#RanilWickremesinghe #SriLanka #LankaElectionsandPolitics #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment