கிளியோபட்ரா - Zabi Zabi
மண்டியிட்டாள் சீசரின் முன்
அவளுக்கு இருந்தது ஒரே ஒரு இரவு
பெரும் ராஜ்ஜியத்தின் மீதான இச்சைக்கும்
துப்பி வீசப்பட்டதின் குரோதத்திற்கும்
போர்வைச் சுருளுக்குள்
சுவாசிக்க திராணியற்று
பிதற்றியதெல்லாம்
எகிப்தின் கிரீடம்
எகிப்தின் சிம்மாசனம் என்றே
திருகிச் செதுக்கப்பட்ட
எழுதுகோலைப் போல் எழுந்தாள்
சீசரின் முன்ஆயுதமாய்
மிஞ்சிய அங்கமே பிரதானாமாய்
கருவிழியின் எல்லைத் தாண்டிய
கருமைக் கோட்டினை தாண்ட முடியாமல்
தவித்தான் சீசர்
ஒரு சகாப்தத்திற்கான பத்திரத்தை
அவனைச் செதுக்கி செதுக்கி தீட்டினாள் அவள்
ஆம்….அவளுக்கு இருந்தது ஒரே ஒரு இரவு
கிளியோபாட்ரா
ரோமின் எல்லைக்குள் அறைந்த
கேலிச் சிரிப்பின் முகங்களுக்கு முன்
சீசரின் பாதத்தில் சமர்ப்பித்தாள்
கயிறு பிடித்து தொங்கி
யோனி கிழித்து தானேப் பிரசவித்த
முதல் சிசேரியக் குழந்தையை
கழுக்குச் சிரிப்புக்காரர்களின்
முகத்தில் அப்பிக்கொண்டு வழிந்தது கரி
தமயன்களிரண்டு
சீசர் உட்பட நாலென மணந்தும்
பேரழகியின் ஆளுமைக்கு முன்
ஆண்மையற்றுதான் போனது
ரோமும், எகிப்தும்
செழிப்பும் வனப்புமாய் அலங்கரித்துக் கொண்டு
மின்னலென நெளிந்து வளைந்த
கருநாகத்தின் பற்களுக்கு மார்பைத் தந்த பேராளுமை அவள்
______________________
சீசர் பற்றிய பிறப்பைக் குறிப்பிட்ட வரிகள் நம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சீசர் உலகின் முதல் சிசேரியன் குழந்தை என்று வர்ணிக்கப் படுவதால் சிசேரியன் என்ற வார்த்தையே அவர் பெயரை வைத்து அழைக்கப்படுகிறது. வயிற்றைக் கிழித்து பிறப்பது தானே சிசேரியன் என்பது நமது சந்தேகம். மற்றபடி கவிதையின் ஈர்ப்பு அற்புதம் பாராட்டுக்கள். Zabi Zabi
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-08-2015
No comments:
Post a Comment