Sunday, August 9, 2015

மோடியிடம் ஜெயலலிதாவின் மனு - சில வினாக்கள்.



கடந்த 07-08-2015 அன்று பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்திற்கு சென்ற போது, தமிழ்நாடு கோரிக்கைகள் என
 21பக்கங்கள் அடங்கிய மனுவை அளித்தார். அதில் 19  தலைப்புகளில் கோரிக்கைகள் அடங்கியிருந்தது. அம்மனுவைக் குறித்து சில அய்யங்களும் வினாக்களும் எழுந்துள்ளன. அவை...

I . 1 மற்றும் 2ஆம் பக்கத்தில் நதி நீர் ஆதாரங்கள் பற்றிக் குறிப்பிட்ட இடத்தில்  தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே பிரச்சனையாக உள்ள பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா மற்றும் நெல்லை மாவட்டத்தின் செண்பகத் தோப்பு, உள்ளாறு, விருதுநகர் மாவட்டத்தில் அழகர் அணைத்திட்டம் போன்ற பிரச்சனைகளைக் குறிப்பிடவில்லை.

அதுமட்டுமில்லாமல், தேசிய நதிநீர் இணைப்பு பற்றி தெளிவாகக் குறிப்பிடாமல் ஒரே பத்திதான் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக அச்சன்கோவில்-பம்பை இணைப்பினால்  22டி.எம்.சி மேலாக கேரளாவிடமிருந்து தமிழகம் தண்ணீர் பெற வேண்டும். இத்திட்டம் 1975ல் இந்திராகாந்தி காலத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட திட்டம். அதைக் குறித்து கேரள அரசிடம் மத்திய அரசின் மத்தியஸ்தத்தில் பலமுறை பேசி எந்த  முன்னேற்றமும் ஏற்படவில்லை.

30ஆண்டுகாலமாக தேசிய நதிகளின் நீர் இணைப்பு,  அச்சன்கோவில்-பம்பை இணைப்பு குறித்தும் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தீர்ப்பைப் பெற்ற நிலையில், இதைக்குறித்தான குறிப்புகளை எல்லாம் எடுத்துச்சொல்லி அழுத்தத்தோடு வாதித்திட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

அண்டை மாநிலங்களோடு தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தென்பெண்ணை, பாலாறு, பொன்னியாறு போன்ற நீர் ஆதாரப் பிரச்சனை குறித்து எந்த குறிப்புகளும் காணப்படவில்லை.

II . தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் தி.மு.க ஆட்சியில் தலைவர் கலைஞரால்  நிறைவேற்றப்பட்டு, துணைமுதல்வராக இருந்த தளபதி மு.க ஸ்டாலின் அதைப் பார்வையிட்டு நான்குநேரி வரை கால்வாய்கள் வெட்டப்பட்டது. அதிமுக ஆட்சி வந்தவுடன் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக, மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதியைக்குறித்தும் குறிப்பிடவில்லை. தென்மாவட்டங்களுக்குப் பயன் சேர்க்கும் அத்திட்டத்தைப் பற்றியே இம்மனுவில் சொல்லப்படாதது தி.மு.க ஆட்சியில் வந்தத் திட்டம் என்று மாற்றாந்தாய் மனப்போக்கில் ஒதுக்குவது போல் உள்ளது.

III .திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 7 மின் திட்டங்களைக் குறித்து சரியான கோரிக்கைகள் எதுவும் இம்மனுவில் இடம்பெறவில்லை.

IV.  கிழக்குக் கடற்கரைச் சாலை பணிகள் இன்னும் முழுமையாகாமல் இருக்கின்றது. இதில் வேகம் காட்டவும், திட்டத்தை இறுதிப்படுத்தவும் எந்தக் கோரிக்கைகளும் இம்மனுவில் இல்லை.

V.  தமிழ்நாட்டின் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கும் திட்டம், குளச்சல், கடலூர் துறைமுகத் திட்டங்கள் பற்றியான கோரிக்கைகள் இல்லை.

VI.  மதுரை-போடி நாயக்கனூர், செங்கோட்டை-புனலூர்-கொல்லம் வரை செல்லும் ரயில் மார்க்கங்களைப் போன்று, தமிழகத்தில்  சீரமைப்புப் பணிகள் பல இடங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றியான நிலைப்பாட்டையும் தமிழக அரசு குறிப்பிடவில்லை.

VII. ஈழத்தமிழர் பிரச்சனையில், முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்பைக் குறித்து சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை பற்றி ஆணித்தரமாகவும், தெளிவாகவும் சொல்லாமல் பட்டும் படாமல் சொல்லியுள்ளது ஏனென்றுத் தெரியவில்லை. சட்டமன்ற தீர்மானத்திற்கும் இந்த மனுசில் குறிப்பிட்டதற்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது.

VIII. உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவ வேண்டுமென்ற  கோரிக்கையும் இந்தமனுவில் குறிப்பிடப் படவில்லை.

IX . நெய்வேலி என்.எல்.சியும், சேலம் இரும்பு ஆலை குறித்தும், நீலகிரி போட்டோ பிலிம் தொழிற்சாலை குறித்தும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதைக்குறித்து தெளிவான பார்வையோடு இந்த மனுவில் அணுகவில்லை.

X.  பழவேற்காடு ஏரியில் தமிழகத்துக்கும், ஆந்திராவுக்கும் ஏற்பட்டுள்ள மீனவர் பிரச்சனை பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

XI.  இன்றைக்குத் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியும் தமிழகத்தின் மதுவிலக்குப் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டு, அதைக் குறித்து அகில இந்திய வகையில் கொள்கை வகுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. கேரளம், குஜராத் மாநிலங்கள் மத்திய அரசிடம் மதுவிலக்குக்காக நிதியுதவி கேட்டுக் கொண்டதுபோல முதலைமைச்சர். ஜெயலலிதா ஏன் கோரிக்கை வைக்கவில்லை?

XII. ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறைக்கொட்டடியில் வாடும் அப்பாவி தூக்குதண்டனைக் கைதிகளின் விடுதலை பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லையே?

இந்த மனுவை ஒப்புக்குக் கொடுத்தோம் என்ற அளவில்,  பல தமிழக பிரதான பிரச்சனைகள் இருந்தும் அவையாவும்  கோரிக்கையாக ஏன்  முதல்வர். ஜெயலலிதா எடுத்துவைக்கவில்லை என்பது புரியவில்லை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-08-2015

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...