Monday, August 31, 2015

தமிழ்நாடு - TamilNadu.




ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கருப்பண்ணன் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகின்றது என்று அப்பகுதியை தனி மாநிலமாக தமிழகத்திலிருந்து பிரிக்கவேண்டும் என்று ஒரு பிரசுரத்தை எழுதியுள்ளார்.

இந்நூலை கடந்த 30-08-2015 அன்று நாமக்கல்லில் சிலம்பொலி செல்லப்பன் வெளியிட்டுள்ளார். சென்னையில் எல்லா தொழில்களும், வளங்களும்  குவிந்துவிட்டன. கொங்குநாடு புறக்கணிக்கப்படுகின்றது என்ற கருத்தை இந்நூலில் சொல்லியுள்ளார்.

அதேபோல தென்மாவட்டங்களான, காவிரிக்குத் தென்புறத்தில்,  திருவரங்கத்தில் அரங்கன் பள்ளிகொண்ட இடத்திலிருந்து தென் தமிழகம் வேண்டும் என்ற குரலும் ஆங்காங்கு ஒலிக்கின்றன.

ஒரு புறத்தில் தென்கோடியிலிருந்து சென்னைக்கு வருவது சிரமமான காரியம். அந்த வகையில் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு தென் தமிழகம் அமைந்தால் நல்லது என்று விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தின் வரலாறே தெற்கே இருந்துதான் துவங்குகிறது. மதுரைதான் புராதான, கலாச்சார மிக்க தமிழர்களின் தலைநகரம். அந்தவகையில் ஏன் மதுரை தலைநகராகக்கொண்டு ஏன் தென் தமிழகம் அமையக்கூடாது என்ற வினாக்களும் உள்ளன.

மற்றொருபுறம் தென் தமிழகம், வட தமிழகம், கொங்கு மண்டலம் என்று பிரிந்தால் ஜாதிய அரசியல் தலை எடுக்கும் என்று எதிர்வினைக் கருத்துகளைச் சொல்லி கடுமையான எதிர்ப்பும் உள்ளது.

இன்றைய தமிழகத்தின் எல்லைகள் அமைந்து 59 ஆண்டுகள் நிறைவாகின்ற நிலை. ஏற்கனவே தெற்கே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேனி அருகே தேவிகுளம், பீர்மேடு, கொங்கு மண்டலத்தில் பாலக்காடு பகுதியில் பல கிராமங்களை கேரளாவிடம் இழந்தோம்.

கர்நாடகத்தில் கொள்ளேகால், மாண்டியா வரை உள்ள பகுதிகள் நம் கையைவிட்டுப் போனது. ஆந்திரத்தில் திருப்பதி, சித்தூர், நெல்லூரில் சில பகுதிகளை  தமிழகத்திடமிருந்து பிரித்து விட்டார்கள்.

பாரதிய ஜனதா ஆட்சிகாலத்தில் வாஜ்பாய் பிரதமராகவும்,   எல்.கே.அத்வானி உள்துறை அமைச்சராகவும் இருந்தபொழுது,  சிறுமாநிலங்களை அமைத்தால் நிர்வாகம் எளிதாக இருக்கும் என்று கொள்கை ரீதியாக முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து தெளிவான அறிக்கையும் உள்துறை அமைச்சகம் அப்போது பெற்றது.

தமிழகம் இப்படி இரண்டு மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் கடந்த 2007ல் இருந்து ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இதைக்குறித்து மக்கள் கருத்து என்ன என்று தெரியவில்லை. இது ஒரு விவாதப் பொருள். காலம் தான் இதற்கு பதில் தரவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-08-2015.

#TamilNadu #KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...