Monday, August 10, 2015

விரிவுபடுத்தப்பட்ட சூயஸ் கால்வாய்! ஆனால் சேதுக்கால்வாய் மட்டும் ஒரு கேள்விக்குறி? - Suez Canal.



 


விரிவுபடுத்தப்பட்ட சூயஸ் கால்வாய்! ஆனால் சேதுக்கால்வாய் மட்டும் ஒரு கேள்விக்குறி? - Suez  Canal.

_________________________________________

கடந்த 07-08-2015 அன்று சூயஸ் கால்வாய் விரிவுபடுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. விமரிசையாக நடந்த இந்த திறப்பு விழாவில், ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயஸ் ஹோலண்டே, ஜோர்டான், பஹ்ரைன், குவைத் நாட்டின் மன்னர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். விழாவின் ஒரு பகுதியாக புதிதாக வெட்டப்பட்ட கால்வாயில் கப்பல்களில் பயணம் செய்தனர்.

மேலை நாடுகளுக்கும் கீழைநாடுகளுக்கும் வணிகம், செய்ய ஆப்ரிக்காவின் தெற்கு முனையில் உள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் 1869வரை கப்பல் போக்குவரத்து நடைபெற்றது.

இந்த பயணதூரத்தைக் குறைக்க மத்திய தரைக்கடல், செங்கடல் வழியாக சூயஸ் கால்வாய் 169கி.மீட்டர் நீளத்திற்கு வெட்டப்பட்டது. இதற்கு சூயஸ் கால்வாய் என்று பெயரிடப்பட்டு 1869ல் செயல்பாட்டுக்கு வந்தது.

அப்போது இந்தக் கால்வாயை வெட்டிய எகிப்துக்கு எதிராக பிரான்ஸ் போன்ற நாடுகள் கண்டன குரல் எழுப்பியது. பல்வேறு தடைகளை மீறி இந்த கால்வாய் வெட்டப்பட்டது. ஆனால் இன்றைக்கு சூயஸ் கால்வாய் மூலம் எகிப்துக்கு வருடத்திற்கு 5பில்லியன் டாலருக்கும் மேலாக வருவாய் வந்துகொண்டிருக்கிறது.

எகிப்தில் 2011ல் இருந்து அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் கலகங்களும், கிளர்ச்சிகளும் நடந்ததால் அங்குள்ள பொருளாதாரம் முடங்கியது.  நைல்நதி தீரத்தையும், பாலைவனங்களையும்,. பிரமீடுகளையும், சூயஸ் கால்வாயையும் வேடிக்கை பார்க்கவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது.

எகிப்து அரசு 48,000கோடியில் சூயஸ் கால்வாயை விரிவு படுத்தும் பணியில் இருவழிப் போக்குவரத்தும், மேலும் 22மைல் தூரத்திற்கு கூடுதல் கால்வாயும் வெட்ட, கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தற்போது கால்வாய் திறந்துவிடப் பட்டதை அடுத்து, கப்பல் போக்குவரத்து பயணிக்கும் நேரம் 22 மணி நேரத்திலிருந்து 11 குறையலாம்.

இஸ்மைலியா நகரில் நடந்த இவ்விழாவில் எகிப்து அதிபர் அல் சிசி, புதிதாக சீர்படுத்தப் பட்ட கால்வாயை போக்குவரத்திற்காகத் திறந்துவிட்டார். கோலாகலமாக நிகழ்ந்த இவ்விழாவில், வானத்தில் விமானக்களும், ஹெலிகாப்டர்களும் பறந்து வட்டமிட்டு வண்ண மயமான பொடிகளைக் காற்றில் தூவினார்கள்.

வெட்டப்பட்ட புதிய கால்வாயுடன் பழைய கால்வாய் மற்றும் நான்கு துணைக் கால்வாய்களை இணைத்து மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து முனையம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது எகிப்து அரசு.

உலகில் சுயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் வெட்டப்பட்டு அதன் செயல்பாடுகள் உலகநாடுகளுக்கெல்லாம் பயனாக இருக்கும் போது, இந்தியாவுக்குப் பயனளிக்கும் சேதுக்கால்வாய்த் திட்டத்தை மட்டும் செயல்படுத்த விடாமல் ஒரு சிலர் அதைப் பாழ்படுத்துவது ஏனோ?



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-08-2015

#KSR_Posts #KsRadhakrishnan

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...