கடற்கரையில் நேற்றைக்கு நடைபயிற்சி்க்குச் செல்லும் போது,
சக வழக்கறிஞர் நண்பரின் மகள் ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பியதாக இந்தப் படத்தை எனக்குப் பகிர்ந்தார்.
பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் கடலின் அலைசீற்றத்தை புகைப்படத்தின் வழி அறிய முடிகிறது. நமது தீபகற்ப இந்தியாவின் வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம், அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களின் நீரும் கருநீல நிறமுடையவை. ஆனால் இந்தப்பகுதி கடல் வான்நீல நிறத்தில் உள்ளது.
அலைகள் தாவிக்குதித்து விழும் இடைவெளிக்குள் கேமிராவை வைத்து அந்த வெற்றிடத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார்.இந்த படம் எடுத்த புகைப்பட நிபுணரின் கைவண்ணத்தைப் பாராட்ட வேண்டும்.
இந்தப் படத்தில் உலக மக்களுக்கு ஒரு செய்தி இருக்கின்றது.
என்னவெனில், இயற்கையோடு இயைந்து வாழாமல் புவியின் அமைப்பை நம் விருப்பம் போல மாற்றுகிறோம். அப்படி மாற்றும் போது கடலில் சுனாமியும், நிலத்தில் பூகம்பமும் ஏற்படு்கின்றன.
கடல்கோள்களால் தென்மதுரையும் கபாடபுரமும் மூழ்கியது என்பது வரலாற்றுச் செய்தி அதன் எச்சம் தான் இப்போதுள்ள இலங்கை. நம் கண்முன்னே தனுஷ்கோடி அழிந்ததை நாம் பார்க்கத்தான் செய்தோம். இன்றைக்கு பசிபிக் கடற்பகுதியில் கிரிபாஸ் தீவுக்கூட்டங்கள் புவி வெப்ப உயர்வின் எதிர்வினையாக கடல்நீர்மட்டம் உயர்ந்து இந்தத் தீவுகளே மூழ்கிவிட்டன.
33 தீவுக்கூட்டங்களில் இன்னும் சில சிறிதுசிறிதாக கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. இத்தீவுகளில் வாழ்ந்த மக்கள் அகதிகளாக, அருகேயுள்ள ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, டாஸ்மேனியா ஆகிய நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்தனர்.
கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடம் முன்னால் தஞ்சம் புகுந்த இந்த மக்கள் நியூசிலாந்தில் தங்கி, வேலை செய்ய அனுமதிகள் கொடுத்தபிறகும் அவர்களுடைய துயர் நின்றபாடில்லை.
நாம் வாழும் புவிப்பரப்பில் அளவில்லாத அடுக்குமாடிக் கட்டிடங்கள், வாகனப் பெருக்கத்தால் புவி வெப்பம் அதிகரிப்பு, ஆறுகளை போக்கை நாசப்படுத்தி, மலைமலையாய் மணல் அள்ளி, காடுகளின் பசுமையை அழித்ததால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றைத்தான் வீறுகொண்டு எழுந்துவருகின்ற இந்தக் கடல் அலை நமக்கு எச்சரிக்கையாகச் சொல்கின்ற செய்தியாகும்...
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-08-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #NaturalCalamities
No comments:
Post a Comment