Thursday, August 6, 2015

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மாட்டிக்கொண்ட அப்பாவிகள்.














முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தூக்குதண்டனையிலிருந்து விடுவிப்பது குறித்து விசாரணை உச்ச நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கின்றது.

இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி வாதாடும்போது,    

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இது குறித்தான வழக்கும் தமிழ்நாட்டில்தான் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக மட்டுமே சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நிறைவடைந்து தண்டனை வழங்கப்பட்ட நிலையிலும் சிபிஐ விசாரணையைக் காரணம் காட்டி மத்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் உரிமை கோருவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு, மத்திய அரசின் அனுமதியை கோரத் தேவையில்லை என வாதிட்டார்.    

அதற்கு நீதிபதிகள், “இது மிகவும் முக்கியமான வழக்கு. முன்னாள் பிரதமர் கொலை வழக்கு. அப்படிப்பட்ட வழக்கில் மாநில அரசு முக்கிய முடிவை எடுக்கும் பட்சத்தில் அது குறித்து மத்திய அரசை கலந்து ஆலோசித்து இருக்கலாமே?“ என்று கருத்து தெரிவித்து இந்த வழக்கின் தன்மை குறித்து விளக்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் கூறினர்.

அதற்கு விளக்கமளித்த ரஞ்சித்குமார் “இந்த வழக்கில் 26 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் இந்தியர்கள். 13 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். இதில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும்,
3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றும் 19 நபர்களுக்கு இதர தண்டனைகள் வழங்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தார்.    

இதையடுத்து மீண்டும் வாதத்தை தொடர்ந்த ராகேஷ் திவிவேதி,
 “இந்தியா முழுவதும் ஏறத்தாழ 23 ஆயிரம் வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. அத்தனை வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசின் ஆலோசனை அல்லது அனுமதி பெற்றே எந்த முடிவையும் எடுக்கவேண்டும் என்பது எந்த அளவில் சரியாகும்?

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு என்பது சிறையில் அவர்களுடைய நன்னடத்தை மற்றும் பொதுநலம் கருதி மாநில அரசு முடிவெடுப்பதாகும். இது மாநில அரசுக்கான உரிமை. அதில் எந்த அமைப்பு விசாரணை நடத்தி இருந்தாலும் தண்டனை குறைப்பு என்பது வழக்கில் நேரடியாக தொடர்புடைய மாநில அரசின் உரிமை” என்று குறிப்பிட்டார்.  

மேலும், “மத்திய அரசு சார்பில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசு மூலமாக கவர்னரிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ கருணை மனுவை தாக்கல் செய்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் யாகூப் மேமன் வழக்கில் அதே மத்திய அரசு ஒருவர் எத்தனை கருணை மனுவைத்தான் தாக்கல் செய்வது என்று கேள்வி எழுப்பியது. சட்டப்பூர்வமாக ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கருணை மனுவை தாக்கல் செய்யலாம்.
இது அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமை. எனவே கருணை மனுக்கள் இத்தனை முறைதான் தாக்கல் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கமுடியாது” என்று தெரிவித்தார்.

இவ்வாறு ராஜீவ் கொலை வழக்கின் ஏழு பேரை விடுவிக்கப்பட வேண்டிய எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்களை வாட்டும் வகையில் பாம்பு சுற்றுவதுபோல இந்த வழக்கு வாதங்கள் சுற்றிக்கொண்டே வருகின்றன என்ற வேதனையும், தமிழக அரசும் உரிய நேரத்தில் உரிய முறையில் செயல்பட்டிருந்தால் இந்த ஏழு பேரும் இன்றைக்கு விடுதலையாகி நிம்மதியாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்திருப்பார்கள்.

வெறும் பேட்டரி செல்லை வைத்துக் கொண்டு இந்த குற்றவாளிகளின் உடம்பில் உள்ள செல்களை அரிக்கச் செய்வது நியாயம் தானா.
எந்த உண்மைகளும் புலப்படாமல் ராஜீவ் கொலையினுடைய முடிச்சுகள் பலவும் அவிழ்க்கப்படாமல் இன்னும் ஏராளமான, இவ்வழக்கைக் குறித்தான சதிகள் வெளிப்படாமல் உள்ளன.

ராஜீவ் கொலைவழக்கில் சில விடயங்கள் சொல்லியாக வேண்டும்.

1. ராஜீவ் காந்தி அவர்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும்முன் விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் ராஜீவ் காந்தி இருந்தபொழுது அவர் செல்லவேண்டிய விமானம் பழுதடைந்துவிட்டது.  விமானத்தைச் சரி செய்தபிறகே பயணிக்கமுடியும் என்று சொல்லி ராஜீவ் காந்தி அங்கிருந்து புறப்பட்டார்.  ஆனால், உடனே அவரிடம் விமானம் சரியாகிவிட்டது நீங்கள் சென்னைக்குச் செல்லலாம் என்று சொன்னதன் நோக்கம் என்ன?

2. சுப்பிரமணிய சுவாமிக்கு ராஜீவ் படுகொலை பற்றி, இந்தத் துயரச் சம்பவம் நிகழ்வதற்கு முன்பே எப்படித் தெரியும்?

3. திருப்பெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தும் இடம் பாதுகாப்பான இடம் இல்லை என்று கண்டிப்போடு சொன்னபோது, அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் மார்க்ரெட் ஆல்வா அங்குதான் கூட்டம் நடத்தவேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் நோக்கம் என்ன?

4. எப்படி சிவராசனுக்கும், தனுவுக்கும் ராஜீவ் காந்தி கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள்ளும் செல்ல அனுமதிச் சீட்டு வழங்கியது யார்? அன்றைக்குக் காங்கிரஸ்காரர்கள் தானே அந்தத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தை நடத்தினார்கள்?

5. ராஜீவ் படுகொலை நேரத்தில் ஏடுகளில் மரகதம் சந்திரசேகருடைய உறவினர்கள் தனுவையும் சிவராசனையும் தொலைக்காட்சியில் பார்த்து அறிந்தமாதிரி சொன்னதாகச் செய்திகள் வந்தது பற்றி முழுமையாக விசாரிக்கப்பட்டதா?

6. தேவையற்ற வகையில், சம்பந்தமில்லாத தி.மு.க மீது பொய்யான பழி போட்டது குறித்து இறுதியாக உரிய விளக்கத்தை ஏன் தரமறுத்தது புலன் விசாரணைக் குழுவும், விசாரணைக் கமிசனும்?

இப்படி பல விடயங்களை விடைகாண முடியாமல், இந்த வழக்கு மூன்றாவது தலைமுறை வந்த பின்னும் விடுகதை விளையாட்டாக உள்ளது வேதனையிலும் வேதனை; கொடுமையிலும் கொடுமை.


இது குறித்து ஏடுகளில் எழுதிய என்னுடைய கட்டுரை :

இராஜீவ் கொடுங்கொலையையாரும் நியாயப்படுத்த முடியாது.எந்த கொலைக்குற்றம் செய்த கொடியவரும் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும் இதுவே இயற்கை நீதியும் ,நமக்கு நாமே வகுத்துக்கொண்ட நெறிமுறையும் ஆகும். 22 வருடம் ஆகியும் இராஜீவ் படுகொலை பற்றிய உண்மைகள் புலப்பட்டதாகவோ,தீர்வு கிட்டியதாகவோ தெரியவில்லை.இது எப்படிஎன்றால் வரும் நவம்பர் 21ம் தேதியோடு அமெரிக்க அதிபர் கென்னடி கொலைசெய்யப்பட்டு 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. ,யார் அந்த கொலைக்கு காரணம் என்று இன்றுவரை தெரியவில்லை.

இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள் அதேபோல் நேதாஜி எங்கு சென்றார் என்ற கேள்விக்கு இன்றுவரை விடையில்லை.அணு விஞ்ஞானி பாபா விமானப்பயணத்தில் இறந்தது இன்னும் மூடுமந்திரமாக உள்ளது.

அதேபோல் இராஜீவ் காந்தி படுகொலையில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய பல்வேறு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டும் உறுதியான ,தெளிவான உண்மைகளை மக்கள் மன்றத்தில் இதுவரையிலும் வைக்க முடியவில்லை.எனவே இராஜீவ் காந்தி கொலை குறித்து பல வினாக்கள் நம்முன் உள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத்தைப்பற்றி அறியாத நேரத்தில் 1982 -ல் இருந்து விடுதலைப் புலிகள் இயக்க தோழர்களோடு நெருக்கமும்,அவர்களது வழக்குகளில் வாதாடிய வகையிலும்,நட்பு ரீதியாக அவர்களோடு நெருக்கமாக பழகி கலந்து பேசிய சூழலில் பல்வேறு விடயங்களை ,தகவல்களை நான் சொல்லியாக வேண்டும்.

ஒரு சிலருக்கு இவர் எப்படி சொல்லலாம் என்ற வினா எழலாம்? சி பி எம் (எம் எல் ) ஆதரவான புதிய கலாச்சாரம் ஏட்டில் கூட 1980-களில் தோழர் .மாணிக்கவாசகம் எழுதிய கட்டுரையில் பழ.நெடுமாறனோடு நெருக்கமான வழக்கறிஞர் இராதகிருஷ்ணன் விடுதலைப் புலிகள் இயக்க தோழர்களுக்கு ஆதரவாக பணியாற்றுகிறார் என குறிப்பிட்டதை யாரும் மறுக்க முடியாது. பிரபாகரன் அவர்களோடு தங்கியிருந்த நாட்களும்,புலிகள் இயக்கத்தின் நாற்றாங்கால்களாய் இருந்த பேபி சுப்பிரமணியன், பாலசிங்கம், ரகு, நேசன், நடேசன், திலகர், கிட்டு, புலேந்திரன், குமரப்பா, சூசை, பண்டிதர், சங்கர், ரஞ்சன், செல்லக்கிளி, ஜானி போன்ற முன்னணி தோழர்களோடு நெருங்கிய நட்போடு இருந்த காரணத்தினால், சில மனதில் இருந்த கேள்விகளை எழுப்பி ,அதை ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்க விரும்புகிறேன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் சிலர் இந்த வழக்கில் நாம் சம்பந்தமில்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்று 1991-ம் ஆண்டு வழக்கு சம்பந்தமாக என்னிடம் பேச வந்தவர்கள் மூலம் அறிய முடிந்தது.


ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத கேள்விகள் : 
 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீ பெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

4. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுசுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

5. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

6. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

7. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

8. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா .பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?


9. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

10. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

11. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?


12. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
13. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்? என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

14. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு!

15. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

சிவராசனும்,தாணுவும் இராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் ? என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை.

16. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

17. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

18. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

19. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

20. பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

21. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

22. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகிய மூவரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?

23. அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜிவை கொன்றார்கள் என கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?

 24. சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார் என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?

 24-திருச்சி வேலுசாமி கூற்றுபடி சுப்ரமணிய சாமி இராஜீவ் படுகொலைக்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே இராஜீவ் கொலைசெய்யப்பட்டார் என்று கூறியதை பற்றி ஏன் இதுவரை விசாரிக்கவில்லை.

 25. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கிய கோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திராசாமியின் நெருங்கிய நண்பரும் அன்றைய பிரதம மந்திரியுமான நரசிம்ம ராவ் அந்த முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்த கோப்புகள் அழிக்கப்பட்டது?

 26. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீ பெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்?

 27. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

 28. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவைஎன்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

 29. இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

 30. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? இது சம்பந்தப்பட்டவர்கள் மீது புலனாய்வுத்துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

 31. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீ பெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை?

 32. ராஜிவின் பயணத் திட்டத்தை தீட்டிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

 33. வெளிநாட்டு உளவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணிய சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல் என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்று பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாக கூறுவது எப்படி?

 34)தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம் என்று மறுத்தபோதும் ,டெல்லி மேலிடத்தில் இருந்த மார்கிரெட் ஆல்வா அங்குதான் நடத்தியாகவேண்டும் என கூறியது,எப்படி என்று விசாரிக்கப்பட்டதா?

 35. பெல்ட் பாம்(வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது, என்று இதுவரையில் விசாரிக்கவேயில்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக சொல்லி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை அறிவித்து 22 ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது எதனால்?

 ராஜீவ் கொலை வழக்கில் 22 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்விகள் இது போன்று பல இருக்க.. காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக சொல்லி ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது உலகில் எந்த நாடுகளின் நீதித்துறையும் பின்பற்றாத ஒரு நடைமுறையை இந்தியாவில் பின்பற்றுவது நியாயத்திற்கும், நேர்மைக்கும் உகந்ததா?

 இவ்வாறு குழப்பமான நிலையில் ,இன்று வரை இருக்கின்ற வழக்கால் தி.மு. ஆட்சியை இழந்தது.தி.மு. நிர்வாகிகளும், ஈழ ஆதரவாளர்களும், தாக்கப்பட்டனர், கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.இவர்களின் வீடுகளும், வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன .

தி.மு. கொடி கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. மேலும் விளாத்திகுளத்தை சார்ந்த தி.மு. இளைஞர் அணி பொறுப்பாளர் போஸ் என்ற இளைஞர் காவல்துறையின் அத்துமீரளாலும், அராஜகத்திலும் இறந்தார் .தடா என்ற கொடிய சட்டம் பாய்ச்சப்பட்டு, இந்த கொலை குற்றத்தில் சம்பந்தம் இல்லாதவர்கள் சிறைப்பட்டனர்.

இவ்வாறெல்லாம் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இன்று நினைத்தாலும் பதறுகிறது.தி.மு. ஆட்சியில் இராஜீவ்காந்தி குறுக்கும் நெடுக்கும் பல பயணங்கள் மேற்கொண்ட போதும் பாதுகாப்பாக டெல்லி திரும்பினார். அதற்கு பிறகுதான் ஏதோ சூழ்ச்சிகள் நடந்தது தெளிவாகிறது.

சரியான புலனாய்வும், தெளிவும் இந்த வழக்கில் இல்லாததால், விருப்பத்திற்கு ஏற்றவாறு பலருடைய வாழ்க்கையும்,அமைதியும் பறிபோயின. இன்னும் சிறையில் சிலர் குற்றவாளிகளாக இந்த வழக்கில் வாடுகின்றனர். தெளிவான புலனாய்வும் விசாரணையும் செய்திருந்தால் நியாயமான முடிவுகள் தெரிந்திருக்கும்.ஏதோ ஒரு முடிவு எடுத்துக்கொண்டு தி.மு., ஈழ ஆதரவாளர்கள் தான் காரணம் என்று பிணையப்பட்ட, உண்மைக்கு மாறாக எடுத்த முடிவினால் ஏற்பட்ட விளைவுகளை துலாக்கோல் நிலையில் இருந்து எண்ணி பார்க்க வேண்டும். நியாயங்கள் மறுக்கப்படக்கூடாது.நீ தி மயக்கத்தில் இருக்கக்கூடாது என்பது தான் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட வழிமுறைகளும்,நெறிமுறைகளும் ஆகும். இந்த செய்தியை சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதிகேட்ட முறையிலிருந்து நாம் படித்த படிப்பினையாகும். நாள் :  ( 06-06-2014 )

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-08-2015. 

























No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...