நாட்டுப்புறத் தெய்வங்களில் பெண்தெய்வங்களே அதிகம் என்பதால் பெண்தெய்வங்களை பிரதான நிலையில் வைத்து வணங்கப்படுகின்றது. பண்டைய காலத்தில் முதன்மைக்கும், வலிமையும், நம்பிக்கைக்கும், பெண்ணிய அடிப்படையில் அவர்களை தெய்வங்களாக்கி வணங்குவதுண்டு. இனக்குழுவாகவும் சமுதாயமாகவும் இந்த நாட்டுப்புற தெய்வங்களைப் பிரித்து அவரவர்களுக்கு உரித்தான தெய்வங்களாக வழிபடுவதுண்டு.
குறிப்பாக தென் மாவட்டங்களில் நாட்டுப்புறச் சிறுதெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், அக்கம்மாள், ரேணுகாதேவி, உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, உலகம்மன், எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. பெண் தெய்வங்களோடு ஆண் தெய்வங்களையும் காவல் தெய்வமாக வழிபடும் பழக்கமும் இருந்து வருகின்றன.
நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்களால் வணங்கப்படும் கற்குவேல் அய்யனார் பற்றியும், அப்பகுதியின் நாட்டுப்புறக் கதைகளும் இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. அதைக் குறித்தான பதிவு.
கற்குவேல் அய்யனார்.
மானவீரவளநாடு ஒரு காலத்தின் குறுநிலமன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசம். மன்னர்களின் அரண்மனையும், மக்களும் வாழ்ந்து வந்த இடத்தில் நல்ல நீர்வளமும், வயல்வெளிகளும் செழித்து நின்றன. இன்றைக்கு அந்த இடம் ஒரு தேரிக்காடு. செம்மண் பாலை நிலமாக மாறி காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், சாத்தான்குளம் பகுதிகள் மூன்றில் ஒருபங்கு நிலம் இப்படித்தான் காட்சியளிக்கின்றன. மணற்குன்றுகளும், பள்ளங்களும் கொண்ட இந்த அகண்ட நிலப்பரப்பு தேரிக்காடு என்று அழைக்கப்படுகின்றன. வாய் மொழிக்கதைகள் வாயிலாக இந்தத் தேரிக்காடுகள் உருவான வரலாறுகள் இன்று இப்பகுதி மக்களால் நினைவுகூறப்படுகிறது.
மானவீரவளநாட்டின் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிய பொதுக்கிணறு ஒன்று கிராமத்தின் ஒதுக்குப் புறந்த்தில் அமைந்திருக்க, அந்த கிணற்றின் அருகே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் ஆச்சர்யகரமான மாமரம் ஒன்று நின்றது. அந்தமரத்தில் பழுக்கும் மாம்பழங்களை சேவகர்கள் மன்னரிடம் சேர்த்துவிடுவது வழக்கம். கிணற்றில் தண்ணீர் எடுக்கவரும் பெண்கள் மரத்தில் பழம் பறித்துவிடக்கூடாது என்று அம்மாமரத்துக்குக் காவலும் போடப்பட்டிருந்தது.
ஆடு மேய்க்கும் ஒரு விதவைப் பெண் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தனியாக தண்ணீர் எடுக்க வருவது வழக்கம். விதவைப் பெண் எதிரில் வந்தால் சகுனம் பார்க்கும் மூடப்பழக்கம் இருந்ததால் இப்படி ஆள் இல்லாத நேரத்தில் வருவது. அப்படி தண்ணீர் இறைக்க வந்த ஒருநாள் மரத்தில் இருந்து கிணற்றுக்குள் விழுந்த மாம்பழம் ஒன்று அவளை அறியாமலே குடத்தோடு வந்துவிட்டது.
விடிந்ததும் காவலுக்கு வந்த காவலர்கள் பழம் குறைவைதைக் கண்டு வீடு வீடாகச் சோதனை போட்டார்கள். ஆடுமேய்க்கும் யாதவரான விதவைப் பெண்தான் மாம்பழத்தைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டாள். விசாரணையில்,“தான் மாங்கனியைத் திருடவில்லை” என்று மன்றாடியும் கேட்காமல் குற்றவாளி என்று மரணதண்டனை வழங்குவதாக மன்னர் தீர்ப்பளித்தார்.
விசாரணை செய்த பரிவாரத்தில் தலைமை அமைச்சராக இருந்தவர் அய்யனார். விதவைப் பெண் குற்றம் செய்திருக்கமாட்டாள் என்று அவர் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், வைக்கோல் பிரி சுற்றி நெருப்பு வைத்து மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. உடலில் தீப்பற்றி எரிய, “எந்தப் பாவமும் செய்யாத என்னை குற்றம் சுமத்திய இந்த நாடு குடி அற்றுப் போகட்டும். நீதி தவறிய இந்த மன்னன் ஊரில் மண்மாரி பெய்து மண்மேடாகட்டும்” என்று சாபம் விட்டு விட்டாள்.
விதவைப் பெண்ணின் சாபம் போலவே அந்நாட்டில் தொடர்ந்து மண்மாரி பெய்து வளமெல்லாம் அழிந்துபோனது. அபலை ஒருத்திக்கு நேர்ந்த அவலத்தைத் தடுக்க முடியாத குற்ற உணர்ச்சியில் அய்யனார் தன் அமைச்சர் பதவியைத் துறந்து கால்போன திக்கில் நடந்தார்.
அப்படி அவர் சென்ற திசையில் இருந்த ஒரு கற்குவளை மரம் இரண்டாகப் பிளந்து அவரை உள்வாங்கிக் கொண்டது என்றும், பிற்காலத்தில் மண்ணில் புதையுண்டு போன அம்மரத்தின் வேர்ப்பகுதியில் சில அற்புத நிகழ்வுகள் ஏற்பட, யாதவர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கற்குவேல் அய்யனாருக்குக் கோவில் கட்டியதாக மானவீரவளநாடு தேரிக்காடான கதையைச் சொல்லப்படுகிறது. இப்படி பல கதைகள் செவிவழிச் செய்தியாகவும் காவியங்களாகவும் மக்களிடையே திகழ்கின்றன.
பேச்சியம்மன்
சோழமன்னனுக்கு பல வருடங்கள் கழித்துக் குழந்தை பிறக்கப் போகிறது. ஆனால் அந்தக் குழந்தை ஓர் அசுரக் குழந்தை எனத் தெரிய வருகிறது. அந்தக் குழந்தை பிறந்தால், அதன் பாதம் பூமியில் பட்டால் சோழநாட்டில் மழை பொழியாது, பஞ்சம் வரும், நாடு நாசமாகும் என அரண்மனை ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மன்னன் செய்வதறியாது தவித்து அம்பாளைப் பிரார்த்திக்கிறான். ராணிக்குப் பிரசவ நேரம் நெருங்க நெருங்க மன்னனுக்குத் தன் நாட்டைக் காப்பதா? குழந்தை காப்பதா? ராணியைக் காப்பதா எனப் போராட்டம். பிரசவத்திற்கு என ராணிக்கு உதவ மருத்துவச்சிகள் வரவழைக்கப் படுகின்றனர். ஆனால் எவராலும் சரியான முறையில் ராணிக்கு உதவமுடியவில்லை. அப்போது மன்னன் எதிரே ஒரு வயதான மூதாட்டி வருகிறாள். அவள் தான் மருத்துவம் பார்ப்பதாகக் கூறவே மன்னனும் சம்மதிக்கிறான்.
மருத்துவச்சி பிரசவ வலியில் துடிக்கும் ராணியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொள்கிறாள். அவள் வயிற்றைத் தன் விரல்களால் கிழிக்க, பதறிய மன்னன் தன் அருமை ராணியைக் காக்க எண்ணி வாளை ஓங்கிக்கொண்டு அந்தக் கிழவி மேல் பாய்கிறான். கிழவி அசரவில்லை. மன்னனை இழுத்துத் தன் காலடியில் போட்டுக்கொண்டு ராணியின் வயிற்றைக் கிழித்துக் கருப்பையிலிருந்து குழந்தையை எடுக்கிறாள். குழந்தையின் தொப்புள்கொடியை தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். அந்தக் குழந்தையின் சொட்டு ரத்தம் கூடப் பூமியில் சிந்தாவண்ணம் காக்கிறாள்.
பின்னர் ராணியையும், மன்னனையும் விடுவிக்கிறாள். மன்னனுக்கு அதன் பின்னரே உண்மைபுரிய வருகிறது. வந்தவள் வேறு யாருமில்லை. தான் அன்றாடம் வழிபட்டு வந்த அன்னையே எனத் தெரிந்து கொண்ட மன்னன் அவளை அந்தக் கோலத்திலேயே அமர்ந்து அனைவருக்கும் அருள் செய்ய வேண்டுகிறான். பெரியாச்சியாக வந்த பேச்சி இதற்கு சம்மதிக்கிறாள்.
பிரசவத்திற்காகக் கஷ்டப்படும் பெண்கள் தன்னை வந்து வணங்கினால் தான் துணை இருப்பதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ வேண்டியே தான் இருப்பதாகவும் உறுதியாய்க் கூறி அன்றிலிருந்து மன்னன் குலத்தையும் காத்து வருகிறாள்.
கிராமங்களில் மாரியம்மன் கோயிலில் முன் வாசலில் பேச்சியம்மன் கோயில் இருக்கும். பேச்சியம்மன் அனுமதி வாங்கியே ஊருக்குள் உள்ள மாரியம்மனைக் காணச் செல்ல முடியும். மதுரையில், “பேச்சியம்மன் படித்துறை” என வைகைக்கரையில் ஓர் படித்துறையே உண்டு. ஆனால் அங்கே பேச்சியம்மன் பேச்சுக்கு அம்மன் என்பார்கள்.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சோழ மன்னன் பாண்டிய மன்னனாகக் கொண்டு இக்கதைகள் பலவாறாக வழங்கப்படுகின்றன.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-08-2015.
#FolkloreGods
No comments:
Post a Comment