Friday, August 7, 2015

அபூர்வமான மனுஷி - Strange Lady.


இலண்டனில் உயர்பதவிகள் வகித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், அன்புக்குரிய மாலினி அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்பட  மெல்லிசைப் பாடல்கள், குறிப்பாக இளையராஜா இசையமைத்த அனைத்துப் பாடல்களையும் திரட்டி, அதனுடைய மூலக்கூறு எந்த ராகத்தில் இருந்து பிறந்தது, அதன் வேர்கள் என்ன என்றெல்லாம் ஆய்வு செய்து, தன் ஆய்வுகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி வருகிறார்.

தமிழ்த்தாத்தா உ.வே.சா அக்காலத்தில் ஓலைச்சுவடிகளைத் திரட்டியதுபோல, மாலினி அவர்கள் இந்தியாவுக்கு வரும்போதெலாம் இப்படியான பாடல்களைத் திரட்டி, அவற்றின் நதிமூலம், ரிஷிமூலமான தரவுகளை எல்லாம் அறிந்து வைத்துள்ளார்.

எந்த இசையைக் குறித்தான எந்த சந்தேகங்கள் கேட்டாலும் உடனே அதுபற்றிய பொருத்தமான பதில் வருவதோடு, அது சம்பந்தப்பட்ட ஆண்டாளின் பாசுரங்களையும், அபிராமி அந்தாதியையும் மேற்கோளாகச் சுட்டிக் காட்டுவதில் அவர் நுணுக்கமான அறிவுத்திறனையும்,  வல்லமையையும் உணர முடியும்.

நல்ல பரதநாட்டியக் கலைஞர். உலக நாகரிகங்களான, திராவிட, எகிப்து, சீன, மெகஞ்சோதரா, ஹரப்பா, சுமேரிய, மெசபடோமிய நாகரீகங்களின் வரலாறுகளை மட்டுமல்லாமல் அதைப்பற்றிய படத்தொகுப்புகள், சிற்பங்கள் போன்றவற்றை உலக அளவில் அலைந்து திரிந்து சேகரித்து, தனது வீட்டில் பார்வைக்கு வைத்துள்ளதைப் பார்க்கும் பொழுது மெய் சிலிர்கின்றது.

அதுமட்டுமில்லாமல், அந்தக் கால தபால் தலைகள், இரபீந்திரநாத் தாகூர் 90ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட “கீதாஞ்சலி நூல்” எனப்பல அரிய பொருட்களை அவரது இல்லத்தில் காணலாம். யாருடைய உதவியும் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் அரிய நூட்களையும், சிற்பங்களையும், திரையிசைப் பாடல்களையும் திரட்டி வைத்திருக்கின்றார்.

பண்டைய இலக்கியங்களான சங்க இலக்கியங்கள், கம்பரின் இராமாயணம், ஆண்டாளின் திருப்பாவை, அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, காளிதாசர், தாகூர், பாரதி மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன் போன்ற கவிஞர்களின் படைப்புகள் அனைத்திலும் எந்த வினா எழுப்பினாலும் தன்னால் இயன்ற அளவு பதில்கள் கொடுக்கும் வல்லமை பெற்றவர்.

அவர் சேகரித்து, ஆய்வுசெய்து, ஆவணப்படுத்தியுள்ள சில மெல்லிசைப் பாடல்களின் தரவுகள்.

******** 1.  “நாச்சியார் திருமொழி (ஆறாம் திருமொழி):
"வாரணமாயிரம்" எனத் தொடங்கி அடுத்து வரும் பத்து பாசுரங்களில் கண்ணனுடன் தனக்குக் கல்யாணம் ஆனதாகக் கனவு கண்டதைத் தோழியிடம் ஆண்டாள் விபரித்துக் கூறுகின்றார். இந்தப் பாடல்களில் பண்டைய காலத்துத் திருமண முறைகள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

பின் வரும் வரிகள் மாப்பிள்ளை அழைப்பு பற்றிச் சொல்லுகின்றன:

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம்எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்....

இந்த வரிகளைக் கேட்கும் போதெல்லாம் உடனே எமக்கு நினைவுக்கு வருவது இசைஞானியின் இசையில் "கேளடி கண்மணி" படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தான்:

S ஜானகியின் குரலில்:
இங்கே வாரணம் ஆயிரம்" உடன் நாச்சியார் திருமொழியிலுள்ள இன்னும் இரண்டு பாடல்கள் (இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம் & வாய் நல்லார் நல்ல மறையோதி) உள்ளன.
http://www.youtube.com/watch?v=0ERzxBw4ABM

SPB-இன் குரலில்:
இங்கே வாரணம் ஆயிரம்" உடன் நாச்சியார் திருமொழியிலுள்ள இன்னுமொரு பாடல் (மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட) உள்ளது.
http://www.youtube.com/watch?v=0mZ2KOt7RbM#t=24

ஆனால் இந்த வரிகள் பல பாடல்களில் வந்துள்ளன.

இசைஞானி இசையில் "ஹே ராம்" படத்தில் Vibha Sharma & Asha Bhosle குரல்களில். இங்கே வாரணம் ஆயிரம்" (@1.40min) உடன் நாச்சியார் திருமொழியிலுள்ள இன்னுமொரு பாடல் (@3.11min மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட) உள்ளது.
http://www.youtube.com/watch?v=PdRHyium9sI

G ராமநாதன் இசையில் "தூக்குத் தூக்கி" படத்தில் M L வசந்தகுமாரி & P லீலா குரல்களில்:
http://www.youtube.com/watch?v=ymaEFeoBY3U

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் "செந்தாமரை" படத்தில் P லீலா குரல் போலுள்ளது. இங்கே வாரணம் ஆயிரம்" உடன் நாச்சியார் திருமொழியிலுள்ள இன்னும் மூன்று பாடல்கள் (நாளை வதுவை மணமென்று, கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி & மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட) உள்ளன.
http://www.youtube.com/watch?v=eUSmA4KsZSw

K V மகாதேவன் இசையில் "திருமால் பெருமை" படத்தில் P சுசீலா குரலில்:
http://www.youtube.com/watch?v=H6tDEJpp81k

கௌதம் மேனனின் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் சிம்ரன் "வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்" என்று சொல்லி இவ் வரிகளைத் தனது வாழ்க்கையோடு இணைத்து விளக்கம் கொடுப்பார். இந்தக் படத்துக்கும் "வாரணம் ஆயிரம்" என்ற படத் தலைப்புக்குமுள்ள ஒரே ஒரு தொடர்பு இந்தக் காட்சி தான்.
 http://www.dailymotion.com/video/x949hr_vaaranam-aayiram-w-eng-sub-part-17_shortfilms

******** 2. நள வெண்பாவும் கண்ணதாசனும் !!
"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச்-செங்கையால்
காத்தாள் அக்கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து"
(நள வெண்பா)
பொருள்:
மலரைக் கொய்பவளாகிய ஒரு பெண்ணின் ஒளி வீசும் முகத்தைச் செந்தாமரை மலர் என்று கருதி மொய்க்கின்ற வண்டுகளை அவள் தனது செந்நிறமான கையால் தடுத்து நின்றாள். அக் கைகளையும் "காந்தள் மலர்" எனக் கருதி வண்டுகள் மொய்த்தன.
இதே கருத்தைக் கண்ணதாசன் இப் பாடலில் இப்படிச் சொ ல்லி உள்ளார்:
"பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"
Tamil version composed by Vedha:
https://www.youtube.com/watch?v=gN1ERkg_dXQ
Hindi version composed by Shankar Jaikishan:
https://www.youtube.com/watch?v=LGx47DWiGWs

******** 3. இசைஞானியும் அபிராமி அந்தாதியும் !!

"அபிராமி அந்தாதி" அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்டது. ஒருபாடலின் முடிவு அடுத்த பாடலுக்குத் துவக்கமாக அமையும் இலக்கண முறையான அந்தாதியை இப் பாடல்களில் காணலாம் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்).

இதில் அம்பிகையை (அபிராமி) நேரில் காண வேண்டிப் பாடும் ஐம்பதாவது பாடல் :

"நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே"

பொருள்:
அம்பிகை, நான்கு திருமுகங்களை உடையவள். நாராயணனின் தங்கை என்பதால் நாராயணி. தாமரை போன்ற கரத்தில் ஐந்து மலரம்புகளை ஏந்தியவள். சம்புவின் துணைவி என்பதால் சாம்பவி. இன்பங்களைத் தருபவளான சங்கரி, பச்சை (சாமள) நிறம் பொருந்தியவளாதலால் சாமளை, வாயிலே நஞ்சைக் கொண்ட பாம்பை மாலையாக அணிந்தவள். ஒரு சமயம் வராகத் தோற்றத்துடன் தரிசனம் தந்ததால் வாராகி, சூலத்தை ஏந்தினவள் என்பதால் சூலினி, மதங்க முனிவரின் திருமகளாதலால் மாதங்கி என்ற பல திருநாமங்களால் அழைக்கப்படும் புகழையுடைய அபிராமியின் திருவடிகள் என்றும் நமக்குப் பாதுகாப்பாயிருந்து காக்க வல்லவை.

இதிலுள்ள 42-ஆவது பாடலானது உலகினை வசப்படுத்தப் பாடுவதாகும்.

"இடம் கொண்டு விம்மி
இணைகொண்டு இறுகி
இளகி முத்து வடம்கொண்ட
கொங்கை மலை கொண்டு
இறைவர் வலிய நெஞ்சை
நடம் கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங் கொண்ட அல்குல்
பனி மொழி வேதப் பரிபுரையே"

பொருள்:
அளவில் பரந்து பருத்தனவாயும் ஒன்றோடொன்று இணையாய்க் காணப்படுவனவாயும் தளர்ச்சியின்றிச் செழித்தும் குழைந்தனவுமான கொங்கைகளாகிய மலைகளின் மீது அழகிய முத்துமாலையை அணிந்தவாறு ஈசனின் வன்மை மிகுந்த நெஞ்சத்தைத் தாம் எண்ணியபடியெல்லாம் ஆட்டி வைக்கும் உறுதியையும் அதற்கேற்ற பேரெழிலையும் படைத்த தேவி, நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையும், இனிமையான வாய்ச்சொற்களையும் வேதமாகிய சிலம்பையும் உடையவளாவாள்.

அபிராமி அந்தாதியில் வரும் இவ்விரண்டு பாடல்களையும் இசைஞானி இளையராஜா குணா படத்தில் வந்த இப் பாடலில் அழகாகப் பயன்படுத்தியுள்ளார். எனது பெயர் "மாலினி" கூட மேலுள்ள முதலாவது பாடலில் உள்ளது

Tamil, sung by K J Yesudas:
https://www.youtube.com/watch?v=yKfwk8Atd1k
Telugu, sung by SPB:
https://www.youtube.com/watch?v=IxNZ7nN2w5Q&feature=youtu.be

****** 4. மாலினி நதி (River Malini) !!

விஷ்வாமித்திரரின் நீண்ட தவத்தைக் கலைத்து அவர் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்ட மேனகை மேல் கோபம் கொண்ட விஷ்வாமித்திரர் மேனகையையும் குழந்தையையும் விட்டு விலகுகிறார். குழந்தையை விஷ்வாமித்திரரிடம் ஒப்படைக்க முடியாத மேனகை குழந்தையைக் காட்டில் விட்டு விட்டு இந்திரலோகம் சென்று விடுகிறார். காட்டில் சகுந்தா பறவைகளால் (Shakunta birds) பாதுகாக்கப்பட்ட குழந்தை கண்வ ரிஷி (Sage Kanva) கண்களில் படுகிறது. சகுந்தா பறவைகள் சூழவிருந்த குழந்தை என்பதால் இக் குழந்தைக்குச் சகுந்தலை (Shakuntala) என்று பெயரிடுகிறார். குழந்தை சகுந்தலையை மாலினி (River Malini) என்னும் பெயர் கொண்ட நதிக் கரையிலிருக்கும் தனது ஆச்சிரமத்தில் கண்வ ரிஷிகள் வளர்க்கிறார். சகுந்தலாவும் துஷ்யந்தனும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டது இந்த மாலினி நதிக் கரையிலேயே. இவர்களைப் பற்றிய கதை, காளிதாசரால் (Poet Kalidasa) அபிஞானசகுந்தலம் (Abhijnanashakuntala) என்ற நூலில் நாடக வடிவில் இயற்றப்பட்டது. இவர்களுக்குப் பிறந்த குழந்தையான பரதன் (Sarvadamana Bharata) வழித் தோன்றல்கள் தான் பாண்டவர்களும் கௌரவர்களும். மகாபாரதம் இதிகாசத்தின் (Mahabharata) பெயர் காரணம் இந்தப் பரதனே. இந்தியா பாரதம்/பரதம் (சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்) என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படுவதற்கும் பரதனின் பெயரே காரணம் என்று பல இடங்களில் கண்டுள்ளேன். தெலுங்கானாவிலிருக்கும் குந்தலா நீர் வீழ்ச்சி (Kuntala Waterfall) சகுந்தலையின் பெயரைச் சார்ந்தே வைக்கப்பட்டுள்ளது. சகுந்தலா, துஷ்யந்தன் என்னும் போது உடனே எம் மனதில் தோன்றும் அவர்கள் காதலை விட அவர்கள் சார்ந்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சகுந்தலா தனது பிள்ளைப் பருவம், துஷ்யந்தன் மேல் காதல் கொண்ட இளமைப் பருவம் இரண்டையும் மாலினி நதிக்கரையிலேயே கழித்திருக்கின்றார். இருந்தும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாலினி நதியின் பெயர் எங்கும் தென்படுவதில்லை. கங்கை, யமுனை, காவேரி போன்று மாலினி நதி உண்மையான ஒரு நதி இல்லையா, ஒரு கற்பனை நதியா என்று மனதில் தோன்றியது. தேடிப் பார்க்கும் போது தெரிந்தது மாலினி நதி உத்தரகாண்டத்தில் (Uttarakhand) கன்வாஷ்ரம் (Kanvashram) என்னும் காடு, மலை சார்ந்த பிரதேசத்தில் இன்றும் இருக்கிறது.

சகுந்தா பறவைகள் (Shakunta birds) என்பது Jungle babbler பறவைகளா என்பதைத் தெரிந்தவர்கள் சொல்லவும்.

இந்த மலையாளப் பாடல் மாலினி நதியுடனே ஆரம்பிக்கிறது.

https://www.youtube.com/watch?v=bNvCJhCa1rk

******* 5. இசைஞானியும் அபிராமி அம்மைப் பதிகமும் !! (பாடல் 8)

அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்ட "அபிராமி அம்மைப் பதிகம்" முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என மூன்று பாகங்களைக் கொண்டுள்ளது. இதில் முதலாவது பதிகத்திலுள்ள முதலாவது பாடலான "கலையாத கல்வியும்" பாடலே அநேகமாக எங்கும் பாடப்படுகிறது. முதாலாவது பதிகத்தில் இடம் பெற்ற எட்டாவது பாடலிலுள்ள நான்கு வரிகள்:

"வான் அந்தம் ஆன விழி அன்னமே உன்னை என்
அகத் தாமரைப் போதிலே வைத்து வேறே கவலை அற்று
மேல் உற்ற பரவசம் ஆகி அழியாதது ஓர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்"

விளக்கம்:
வானத்தை முடிவாகக் கொண்ட விழிகளைக் (மிக நீண்ட பெரிய கண்கள்) கொண்டவளே, அன்னத்தைப் போன்றவளே, உன்னைத் தாமரைப் பூப் போன்ற என் மனதில் வைத்து, வேறு எதுவும் கவலைகள் இன்றி, உச்ச சந்தோசத்தை அடைந்து, அழியாத ஒரு ஆனந்தக் கடலில் ஆழ்ந்து போகின்றதை நீ காண்பாய்.

இவ் வரிகளை இசைஞானி "கொக்கரக்கோ" படத்தில் இடம் பெற்ற இப் பாடலில் அழகாக உபயோகித்துள்ளார். இப் பாடலில் இன்னுமொரு சிறப்பு இப் பாடலின் காட்சியமைப்பைப் பாராமல் முழுப் பாடலை மட்டும் கேட்டால் இந்து சமயப் பெண் கடவுளை (சக்தி) நினைத்து ஒரு பக்தன் உருகப் பாடுவது போல இருக்கும் (பக்தனின் காதல்). சினிமாவில் வந்த காதல் பாடல் என்பது காட்சியோடு பார்க்கும் போது மட்டுமே புரியும் (காதலனின் பக்தி). இசையையும் வரிகளையும் இரண்டு சந்தர்ப்பத்துக்கும் பொருந்துமாறு அமைக்க இசைஞானியால் மட்டுமே முடியும்.



https://www.youtube.com/watch?v=VPplwC-XVTg

***************************************************************
கனாக்கண்டேன் தோழி என்ற ஆண்டாளின் பாசுரங்களுக்கு ஏற்ப இப்படியான பணிகளில் அவருடைய கனவும், செயல்பாடுகளும் நீண்டுகொண்டே இருக்கின்றது. அதில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

பொறுப்பான, முக்கிய கடுமையான பணிகள் இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் நேரத்தை ஒதுக்கி, ஈடுபாடு காட்டுவதோடு,  “தன்னை முன்னிறுத்துவதை” சற்றும் விரும்பாமல் செயல்படுவது  எல்லோராலும் முடியாது.  Salute to Her.

 “இந்த இனிய நாளில்” அவரை தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்ட வேண்டும்.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-08-2015.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...