Saturday, August 22, 2015

லேண்ட் மார்க் - Land Mark







சென்னையின் பழைமையான புத்தகக் கடையாக ஒரு காலத்தில் திகழ்ந்தது ஹிக்கின் பாதம்ஸ். இங்கிலாந்திலிருந்து ஒரு கப்பலில் மெட்ராஸுக்கு டிக்கெட் வாங்க காசில்லாமல் வந்தவர் ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ். மதராஸில் இயங்கிய வெஸ்லியன் என்ற புத்தகக்கடையில் நூலகராக பணியாற்றினார். கடுமையான நஷ்டம் காரணமாக அந்த கடை இழுத்து மூடப்பட்டது.

மிகக்குறைந்த விலைக்கு அந்த கடையினை வாங்கி 1844ம் ஆண்டில், அண்ணாசாலையில் அமைந்துள்ள இன்றைய ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையை தோற்றுவித்தார். இன்றைக்கு அந்த புத்தகக் கடை நெல்லைச் சீமையான ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியினை நிறுவிய, மறைந்த அனந்தராம கிருஷ்ணன் அவர்களால் வாங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

ஹிக்கின்ஸ் பாதஸ் மற்றும் மெட்ராஸ் மெயில் ஆங்கில தினசரி மாலை ஏட்டையும் 1945ல் அவர் விலைக்கு வாங்கினார். இன்றைக்கு சென்னையின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று ஹிக்கின்ஸ் பாதம்ஸ்.

1986 இறுதி என்று நினைக்கின்றேன். நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் அபெக்ஸ் பிளாசாவில் (Apex Plaza) புதிதாக நவீன வசதிகளோடு துவங்கப்பட்ட புத்தகக் கடையான லேண்ட்மார்க் சென்னைக்கு மற்றொரு அடையாளமாகத் திகழ்ந்தது.

இதன் தொடக்கவிழா அன்று, நானும் என் மனைவி மறைந்த சரளாவும் முதல் பத்து வாடிக்கையாளர்களாகச் சென்றிருந்தோம். சற்று வெளிர்நீல நிறத்தில் லேமினேசன் செய்த வங்கி டெபிட் கார்டு அளவிலான முகவரி எழுதிய வாடிக்கையாளர் அட்டையினை வழங்கினார்கள். அப்போதெல்லாம் இம்மாதிரி அட்டைகள் புழக்கத்தில் இல்லாத நேரம்.

நீண்டகாலமாக அந்த வாடிக்கையாளர் அட்டை என்னிடம் இருந்தது. அதன் மூலம் புத்தகங்கள் வாங்கும் போது, புத்தக விற்பனை விலையில் பத்து சதவிகிதம் கழிவு கிடைக்கும்.

முதல் முதலாக அங்கு, Democracy of America- Alexis de Tocqueville என்ற நூலை நானும், Oxford Book of English Verse - Helen Gardner என்ற புத்தகத்தை எனது மனைவியும் வாங்கினோம்.

அடுத்த சில காலங்களில் லேண்ட் மார்க்கின் கிளைகள் ஸ்பென்ஸர், சிட்டி சென்டர், ஆகிய சில இடங்களிலும், கோவை போன்ற நகரங்களிலும் துவக்கப்பட்டன.

எந்த புத்தகமானாலும் அங்கு கேட்டால் கிடைக்கும். இதுமாதிரி பரந்த வளாகமும், அமைதியாக புத்தகங்களை படிக்கக்கூடிய வசதிகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் கூட இல்லை. எழுதுபொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் என வித்தியாசமாகவும் அனைவரையும் ஈர்க்கக் கூடியவகையி்லும் இருக்கும். இதனை மனதில் கொண்டு தான் பெங்களூருவில் “சப்னா புத்தகக் கடை” துவக்கப்பட்டது.

இந்தியாவில் பல நகரங்களில் பெரிய புத்தகக் கடை திறக்கவேண்டுமென்றால் லேண்ட்மார்க் தான் அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

திடீரென்று ஓராண்டுக்கு முன்னால் அபெக்ஸ் ப்ளாசா கடை மூடப்பட்டதை அறிந்து அனைவரும் ஒரு இழப்பாகவே கருதினர். நான்கூட பிபிசி முரளிதரன் தனது முகநூலில் எழுதிய பிறகுதான் லேண்ட் மார்க் மூடப்பட்டதை நம்பினேன். தற்போது “த்ரீ எலிபெண்ட்ஸ்" “Three Elephants” என்ற பெயரில் புதிதாக ஒரு புத்தகக் கடை அதே இடத்தில் துவங்கப்பட்டுள்ளது.




லேண்ட் மார்க் அங்காடி 29ஆண்டுகள் Hemu Ramaiah அவர்களால் திறம்பட நடத்தப்பட்டு, தற்போது டாடா நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. திரும்பவும் லேண்ட் மார்க் புத்துயிர் பெறுமா என்பது சென்னை நகரவாசிகளுக்கு ஒரு ஏக்கமாகவே உள்ளது.

376வது சென்னையின் பிறந்த நாளான இன்று “லேண்ட் மார்க்” புத்தகக் கடை மீண்டும் மலரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-08-2015


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...