சிறிலங்கா மீதான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணித்தியாலத்துக்கு முன்னரே சிறிலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
ஐ.நா மனிது உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இந்த விசாரணை அறிக்கை நேற்று சனிக்கிழமை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகம் மற்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்கா மீதான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இந்த விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர், அது வெளியில் கசிவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 30வது கூட்டத்தொடருக்கு முன்னதாக இவ்வறிக்கை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் ஏனைய தரப்புகளின் சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையில், மனிதவுரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிறிலங்கா மீதான இந்த அறிக்கை தொடர்பாக ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30ஆம் தேதி விவாதிக்கப்படவுள்ளது.
சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில், ஐ.நாவின் இந்த விசாரணை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment