கடந்த 24ஆண்டுகளில் இந்திய நதிகள் 14மடங்கு அசுத்தமடைந்துள்ளது என்று இன்றைய புள்ளி விபரங்கள் சொல்கின்றன. 1989ல் 22நதிகள் தான் இந்தியாவில் அசுத்தமாக மாசுபட்டு இருந்தது என்று புள்ளிவிபரம் அன்றைய நிலையில் வெளியிடப்பட்டது.
தற்போது இந்தியாவில் 302 நதிகள் மிகவும் மாசுபட்டு துர்நாற்றத்தோடு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது என்ற நிலை. 62ஆயிரம் மில்லியன் லிட்டர் சாக்கடைத் தண்ணீர் இந்திய நதிகளில் தினமும் விடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தொழிற்சாலைகளுடைய கழிவுகளும் கணக்கில்லாத அளவில் இந்நதிகளில் கலக்கின்றன.
குறிப்பாக, கங்கை போன்ற பெரிய நதிகள் கடலில் கலக்கும்போது கடல் நீர் அசுத்தமாகி, கடல் மட்டமும் உயர்கின்றது என்ற காரணங்களும் சொல்லப்படுகின்றது. கங்கை நதியை சுத்திகரிக்க மட்டும் 15,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
பிரம்ம புத்திராவும், சிந்துவும் இருப்பதில் சற்று மாசுபாடு குறைவாக உள்ள நதிகள் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் அண்டை மாநிலங்கள் தண்ணீரே விடுவதில்லை. அதனால் தண்ணீ ர் பெருகுவதும் இல்லை.
கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளிலும் நொய்யல் ஆறு காவிரியில் கலக்கும் கொடுமுடி வரை தொழிற்சாலை கழிவுகள் சேர்கின்றன. பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகள் சேர்கின்றன. பொருநை ஆற்றில், காகித ஆலைக் கழிவுகளும், ஆறுமுகநேரி தாரங்கதாரா கெமிக்கல் ஆலையின் கழிவுகளும் சேர்கின்றன. இதற்கு பல போராட்டங்கள் நடத்தியும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை.
இப்படித் தமிழக ஆறுகளில் நீர்வரத்துகள் குறைந்தாலும், குறைவில்லாமல் கழிவுகள் பாய்கின்றன. இந்தப் புள்ளிவிபரங்களை எல்லாம் பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்திய நதிகளின் நிலைமை என்னாகுமோ? நதிகளை இந்தியாவில் வணங்குகின்றனர். சிலர் இயற்கையின் அருட்கொடை என்று நினைக்கின்றனர். அதன் ஜீவனை நாம் அழிப்பதும், பாழ்படுத்துவதும் நியாயம் தானா?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-08-2015
#KsRadhakrishnan #KSR_Posts #IndianRiverPollution.
No comments:
Post a Comment