Monday, August 24, 2015

நாடாளுமன்ற ஜனநாயகம் - Parliamentary Democracy.







இன்றைய (24-08-2015) மிண்ட் (MINT) ஏட்டில், The politics of Parliamentary Disruption என்ற பத்தியை அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் அஜய் பாண்டே எழுதிய கருத்துகள் யாவும் கவனிக்கப்பட வேண்டியவை.

சிறந்த நாடாளுமன்றவாதியான அயர்லாந்தைச் சேர்ந்த அரசியல் விற்பன்னரான எட்மண்ட் பர்க்கின் கருத்துகளோடு தொடங்கிய கட்டுரை அர்த்தமுள்ளதாக உள்ளது.

நாடாளுமன்றங்களும், சட்டமன்றங்களும் அதனுடைய நோக்கத்தையும்- நியாயமான-நேர்மையான பணிகளுக்கும் இப்போது இடமில்லாமல் ஆகிவிட்டது. 1950-60களில் இருந்து கிட்டத்தட்ட 1970வரை இந்திய நாடாளுமன்றம் பணிகளை முறையாக ஆற்றின.

ஆனால் 1985காலகட்டத்தில் இருந்து இன்றைக்குவரை அடிக்கடி முடக்கப்பட்டு, பணிகளே நடப்பதில்லை. ஏனெனில், அங்கே செல்கின்ற உறுப்பினர்கள் திறமையானவர்களோ, நேர்மையானவர்களோ , தகுதியானவர்களாகவோ இல்லாமல் போய்விட்டது தான்.

வாக்குகளை வாங்கி எப்படியாவது ஒரு ஒரு விதத்தில் வெற்றிபெறும் ஆதிக்க சக்திகளே இந்த அவைகளுக்குச் செல்லமுடியும் என்றால் அது ஜனநாயகம் தானா? ஜனசக்தியின் ஆதரவு ஒரு பக்கத்தில் இருந்தாலும், ஆக்கமில்லாத நோக்கத்தோடு அவை உறுப்பினராகச் செல்வது மக்களாட்சியின் அச்சாணியையே தகர்ந்துவிடும். மக்கள் சக்தியின் பிரதிநிதியாக செல்லும் மாண்பை சீர்குலைப்பதுதான் தற்போது நடக்கின்றது.

வேறு எந்தப்பணிக்கும் செல்லவேண்டும் என்றால் திறமையும், தகுதியும், அர்ப்பணிப்பும், அனுபவமும் தேவை. ஆனால் அரசியலில் நுழைவதற்கு எதுவும் தேவையில்லை. கடுமையான குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள்கூட நாடாளுமன்ற உறுப்பினர்களாக வலம் வருவது நமக்கே தலைகுனிவாக இருக்கின்றது.

எனவே, தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தகுதியான உறுப்பினர்களாக மக்களுடைய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதற்காக 1980லிருந்து பல்வேறு குழுக்கள் தேர்தல் சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்டும் அவையாவும் முறையாகவும், முழுமையாகவும் நடைமுறைக்கு வரவில்லை.

1990ல் தினேஷ் கோஸ்வாமி கமிட்டி, 1998ல் இந்திரஜித் குப்தா கமிட்டி, 1999ல் சட்டக்கமிஷன் அறிக்கை என ஒரு டஜன் அறிக்கைகள் தேர்தல் சீர்திருத்தத்திற்காக பெறப்பட்டும் எந்த மேல்நடவடிக்கையும் முழுமையாக இல்லை என்பதுதான் காரணம்.

தகுதியே தடை என்ற அடிப்படை மாறி நல்லவர்கள், ஆற்றலாளர்கள், நேர்மையாளர்கள், அரசியல் - மக்கள் களப்பணியாளர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்குச் சென்றால் தான் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விடியல் ஏற்படும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-08-2015.

#ThepoliticsofParliamentaryDisruption #ParliamentaryDemocracy.

#‎KSR_Posts‬ ‪#‎KsRadhakrishnan‬

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...