இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இலங்கை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, இன்றைக்கு உள்ள நிலப்பரப்பில் ஒருமைப்பாட்டோடு தீர்வு காணப்படுமென்று ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், இராஜபக்ஷே மீது சுதந்திரமான, நம்பகமான விசாரணையோ, ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்போ, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தைத் திரும்பப் பெருவது, தமிழர்களுடைய நிலங்களை அதன் உரிமையாளர்களுக்குத் திரும்ப ஒப்படைப்பது, மாகாண கவுன்சிலுக்கு உரிய சமஸ்டி பூர்வமான அதிகாரங்கள் வரையறுத்து வழங்குவது குறித்து எவரும் தேர்தல் அறிக்கையில் முழுமையாகவும் உளப்பூர்வமாகவும் சொல்லாதது வருத்தத்தை அளிக்கின்றது.
தேர்தல் காட்சிகள் அங்குள்ள தமிழர்களை ஏமாற்றுகின்ற நிலைதான்.
இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது, யாழ் அரச அதிபர், உதவித் தேர்தல் ஆணையாளர், வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சிலரையும், பொது மக்களையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.
இந்த தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் இரண்டு முக்கிய உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திற்கு சென்றனர்.
Add caption |
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவின் தலைவரும் ருமேனியா நாட்டைச் சேர்ந்தவருமான கிறிஸ்டியல் ப்ரெடா, இலங்கை அரசியலில் யாழ்ப்பாணம் முக்கிய கேந்திரப் பகுதியாகும். ஆகவே, கொழும்பு வந்து பிரதமரைச் சந்தித்ததும் உடனடியாகவே யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகக் கூறினார்.
தேர்தல் கண்காணிப்பின் பின்னர் சுமார் 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை தாங்கள் சமர்ப்பிக்க உள்ளதாகவும், அதில் தாங்கள் கண்டறிந்த அனைத்து விஷயங்களோடு, தங்களின் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேர்தலின்போது, சட்டரீதியான செயற்பாடுகள், ஊடகச் செயற்பாடுகள், தேர்தல் ஒழுங்குமுறைகள், தேர்தல் பிரச்சார நடவடிக்கைள் என தேர்தல் தொடர்பான பலதரப்பட்ட பிரச்சனைகளையும் தாங்கள் கண்காணிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனித்துவமான தேர்தல் கண்காணிப்பு முறைகள் காரணமாக, உலக அளவில் மதிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையின் இம்மாதம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ளது முக்கியமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இவ்வளவு காண்காணிப்புகள், ஈழ மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருந்தாலும், கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்பு, அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப் பட்டது போல இம்முறையும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-08-2015
No comments:
Post a Comment