Tuesday, August 18, 2015

தமிழக உரிமைகளும், நடுவண் அரசின் பாராமுகமும் - தினமணி 18-08-2015.


இன்றைய (18-08-2015)  தினமணி நாளிதழில், “தமிழக உரிமைகளும், நடுவண் அரசின் பாராமுகமும்”  என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது தலையங்கப் பக்க  கட்டுரை.





காவிரிப் படுகையில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய், எரிவாயு எடுக்க சுற்றுச்சூழல் இசைவுக் கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ஷெல் வாயு என்பது பிரதானமாக மீத்தேன் எரிவாயுதான். மீத்தேன் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அதே நீரியல் விரிசல் தொழில்நுட்பம் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது.

மீத்தேன் எடுப்பதற்கு 2000அடி வரை நிலத்தைத் தோண்டி, அதில் மணலையும், 600க்கும் அதிகமான நச்சு வேதிப்பொருள்களையும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரில் கரைத்து, அக்கலவை அதிகமான அழுத்ததில் உள்ளே செலுத்தப்படும்.

சில நூறு அடிகளுக்குப் பிறகு, பக்கவாட்டிலும் துளைத்துக் கொண்டு இந்தக் கலவையைச் செலுத்தும் போது,  நிலத்திற்கு அடியில் உள்ள நிலக்கரி படிமங்களை நொறுக்கி,  இடைவெளிகளில் உள்ள மீத்தேன் வாயு வெளியே எடுக்கப்படும். இந்த வேதியல் கலவை மீண்டும் உறிஞ்சி எடுக்கப்பட்டு கழிவுகளாக நிலத்தின் மேற்பரப்பில் தேக்கிவைக்கப்படும்.

 இதனால் காவிரிப் டெல்டாவில் நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு, பாசான நீர் நஞ்சாகி,  ஒட்டு மொத்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர்  மாவட்டங்களின்  விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பாலைவன ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் நிலத்தையும், விவசாயத்தையும், தொழிலையும் விட்டு இலங்கை அகதிகள் போல நாதியற்று வெளியேற வேண்டிவரும். காவிரி மூலமாக குடிநீர்பெறும் தமிழகத்தின் 19மாவட்டங்களும் தவிப்புக்குள்ளாகும்.

காவிரியில் மீதான தமிழகத்தின் உரிமைகள் ஒருபக்கம் மறுக்கப்படுகிறது. மற்றொரு பக்கம் காவிரி டெல்டாவில் மீத்தேன் மற்றும் ஷெல் வாயு திட்டங்கள் நிறைவேற்றத் துடிக்கின்றது மத்திய அரசு. மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு மாயையைக் கிளப்பிவிட்டு மறுபடியும் பாம்பு படமெடுத்து ஆடுகின்ற கதைதான்.

2013ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் இந்திய பெட்ரோலிய அமைச்சகம் காவிரிப் படுகையில் இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மீத்தேன் வாயுவை கண்டறிய ஷெல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. இப்பகுதியில் 35இடங்களில் ஷெல் எண்ணெய் மற்றும் ஷெல் வாயுவை எடுக்க ஓ.என்.ஜி.சி வேண்டுகோள் விடுக்கவும் மத்திய அரசும் இசைவு தெரிவித்தது.

தமிழ்நாட்டைக் குப்பைக்கூடையாக நினைத்துக் கொண்டு, பிற மாநிலங்கள் விரட்டி அடித்த நச்சுத் தொழிற்சாலைகளை மத்திய அரசு இங்கு அனுமதிக்கிறது.

 உதாரணமாக, மராட்டியத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் குடிகொண்டு விட்டது. கேரளமாநிலம் பிளாச்சிமடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட கோக்ஆலை திருநெல்வேலி கங்கைகொண்டானில் மையம் கொண்டுள்ளது. கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் வயலில் கொட்டப்படும் என்று சொன்னவுடன் கர்நாடகம் எதிர்த்தது. உடனே கூடங்குளம் அணுக்கழிவுகள் தமிழகத்திலே கொட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழகத்திற்கு நியாயமாக நிறைவேற்றப் படவேண்டிய உரிமைகளும், திட்டங்களும் 50ஆண்டுகளாக மறுக்கப்படுகின்றது. ஆனால் தீங்கு விளைவிக்கின்ற திட்டங்கள் மட்டும் தமிழகத்தில் முன்னுரிமையோடு வேகமாக நிறைவேற்றப்படுவதில் என்ன நியாயம் உள்ளது.

தமிழகத்தின் நலன்நாடி செய்யவேண்டிய கீழ்க்குறிப்பிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்கில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக புறந்தள்ளி வருகிறது.

1. அகல இரயில் பாதைத் திட்டம் கூட ஆமை வேகத்தில் தான் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்தது. இன்னும் செங்கோட்டை-புனலூர் கொல்லம் மார்க்கம், மதுரை-போடிநாயக்கனூர் போன்ற திட்டங்கள் மிகவும் தாமதப்படுத்தப் படுகின்றன.

2. சேது சமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

3. கிழக்குக் கடற்கரைச் சாலை முழுமை அடையவில்லை.

4. சுமார் 10க்கும் மேலான மீன்பிடித் துறைமுகத் திட்டங்கள் மத்திய அரசிடம் தூங்குகின்றன.

5. நெய்வேலி என்.எல்.சி பிரச்சனை முடிவுக்கு வராமல் தொடர்கதையாக உள்ளது.

6. சேலம் இரும்பாலை விரிவாக்கம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.

7. உதகை இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை கிட்டத்தட்ட மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

8. சென்னை மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் செயல்பாட்டிற்கு வரவில்லை

9. நியூட்ரினோ திட்டம் அடாவடியாகத் தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கின்றது.

10. குளச்சல், கடலூர் துறைமுகத் திட்டங்கள் பல ஆண்டுகளாக ஏட்டளவில் உள்ளது.

11. நோக்கியோ ஆலைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அதன் கதவுகள் மூடப்பட்டுவிட்டது.

12. 1980களுக்கு முன்னே திட்டமிடப்பட்ட, மரக்காணத்திலிருந்து சென்னை வழியாக ஆந்திரா, பெத்தகஞ்சம் வரை 420கி.மீ தூரமுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப் போக்குவரத்தும் நடைமுறைக்கு வரவில்லை.

13. நீர்வள ஆதாரங்களான குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, திருவில்லிப்புத்தூர் அழகர் அணைத்திட்டம், முல்லைப்பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு ஆகியவை கேரள மாநிலத்தோடு உள்ள நதிநீர்ப் பிரச்சனைகள்.

 காவிரி, ஒகேனக்கல், தென்பெண்ணையாறு, பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி ஆகியவற்றில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களோடு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட படாதபாடு படவேண்டி இருக்கின்றது.

14. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்குப் பயன்படும் அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறு இணைப்புத் திட்டம் 1975லிருந்து கொள்கை வடிவில் தான் இருக்கின்றது. இந்த நீர்ப்படுகை இணைப்பிற்கு கேரளாவை இணங்க வைக்க மத்திய அரசுக்கு மனமில்லை.

இத்திட்டத்தினால் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வரை குடிநீர் வசதி கிடைக்கப்பெறும்.  நதிநீர் இணைப்பு குறித்து நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தபோதுகூட மத்திய அரசிடமிருந்து இந்த இணைப்பைக் குறித்து அழுத்தமாக எந்த பதிலும் இல்லை.

15. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு, காவிரி-குண்டாறு, பெண்ணையாறு-பாலாறு என மூன்று இணைப்புத் திட்டங்களுக்கான உரிய நிதி ஆதாரங்களையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.

16.  தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினால் 30ஆண்டுகளுக்கு மேலாக சொல்லாத் துயரினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

17.  தமிழர் பூமியான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டு, கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்கிறது மத்திய அரசு.

18.  ராஜீவ் படுகொலையில் தூக்குதண்டனைக்குள்ளான அப்பாவிகளை விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு மனமில்லை.

19. வடமாநில உயர் நீதிமன்றங்களில் இந்தியும், குஜராத்தில் குஜராத்தியும் வழக்காடு மொழியாக இருப்பது போல, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரிக்கை எழுப்பியும் அதை மத்திய அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

20. அந்தமானில் வாழும் தமிழர்களுடைய வழக்குகள் யாவும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய  சூழ்நிலை மாற வேண்டும்

21. கூடங்குளம் அணு உலை கேள்விக்குறியாக இருக்கின்றது.

22. கொங்குமண்டல விவசாயிகளைப் பாதிக்கும் கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிடாமல் மத்திய அரசு விதண்டாவாதம் செய்கின்றது.

23. பழநி வழியாக கேரளா செல்லும் இரயில் வழித்தடமும் நடைமுறைக்கு வந்தபாடில்லை.

24. தென்மாவட்டக் கடற்கரை ஓரங்களில் கொள்ளையடிக்கப்படும் தாதுமணல் கொள்ளையினைத் தடுக்கவும், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலையைப் புதுப்பிக்கவும் மத்திய அரசு முயலவில்லை.

25. தூத்துக்குடி மாவட்ட குலசேகரப் பட்டிணத்தில் இராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

26. நெல்லைமாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரிவாயு தொழில் நுட்ப மையம் துரிதமாக அமைக்கவும் மத்திய அரசிடம் முயற்சிகள் இல்லை.

27. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள் திருவனந்தபுரம் இரயில்வே கோட்டத்தோடு  இணைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தியும் இதைக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு உள்ளது.

28. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நெசவு ஆலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. அவற்றைப் புனரமைக்க எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.

29.  வளைகுடா நாடுகளில் தென் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் தான் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்கு விரைவாக வரவேண்டுமென்றால் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வளைகுடா நாடுகளிலிருந்து விமான சேவை வேண்டுமென்று நீண்டகாலமாக வற்புறுத்தியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது மத்திய அரசு. திருவனந்தபுரம் அல்லது கொழும்பு வழியாகத்தான் பல மணிநேரம் காத்திருந்து தென் மாவட்டங்களுக்கு வந்து சேர முடிகிறது.

30. தூத்துக்குடி விமான நிலையத்தை பன்னாட்டு விமான முனையமாக மாற்றும் திட்டமும் நிலுவையில் உள்ளது.

31.  எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய வாய்ப்புகள் இருந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது.

32. புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் ஓவியங்களை உலகிற்கு பறைசாற்றும் வகையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தில் பரிந்துரைக்கப்பட்டும் அவையாவும் கோப்பில் தூங்குகின்றன.

33. திருநெல்வேலி அருகே நாகரிகத் தொட்டிலான ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையை பத்தாண்டுகளாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிடவே இல்லை.

34. இயற்கையின் அருட்கொடையான ரம்யமான கொடைக்கானலில் 1984ல் நிறுவப்பட்ட இந்துஸ்தான் யுனிலிவர் தெர்மாமீட்டர் ஆலையிலிருந்து பாதரசக் கழிவுகள் வெளியாகி பம்பாறு சோலை தண்ணீரில் கலக்கின்றது. இதனால் கொடைக்கானல் நகரத்தின் சுற்றுச்சூழலும், அங்குள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் உடைந்த கண்ணாடிக் கழிவுகளும் குப்பைகளாகக் குவிகின்றன. இங்கு செய்யப்படும் தெர்மா மீட்டர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பிரச்சனை பலதடவை அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டும் பாராமுகமாக இருக்கின்றது.

35.புதுவையை தனிமாநிலமாக அறிவிக்கக் கோரியும் முறையான நடவடிக்கைகளும் இல்லை.  

இப்படி தமிழ்நாட்டு உரிமைகளும், பிரச்சனைகளும் என ஒரு நீண்ட பட்டியலே இருக்கின்றது. இவற்றையெல்லாம் நிறைவேற்றாமல் சுற்றுச்சூழலையும், தமிழகத்தையும் வஞ்சிக்கின்ற திட்டங்களைத்தான் மத்திய அரசு இங்கு நிறைவேற்றத் துடிக்கிறது.

“தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை வளநாட்டை” பாழாக்கும் ஷெல், மீத்தேன் எரிவாயுத் திட்டங்களை தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-08-2015




No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...