இன்று காலை அடையாறு மலர் மருத்துவமனையிலிருந்து
சத்யா ஸ்டூடியோஸ் வரை பயணிக்கும் போது, மலர் மருத்துவமனை அருகிலிருந்தே ஆளுங்கட்சியின் கொடியைக் கட்டிக்கொண்டு, சப்தம் அதிகமான ஹாரன்களைத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே என்னுடைய வாகனத்துக்குப் பின் ஒருவர் தன் காரில் வந்து கொண்டிருந்தார்கள்.
போக்குவரத்து நெரிசலினால் வாகனங்கள் சற்று தாமதமாக நகர்ந்தன. தொடர்ந்து அந்த நபரின் வாகனத்தில் இருந்து ஹாரன் சப்தம் ஒலித்துக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல், ஆந்திர மகிளா சபா அருகில் காரைவிட்டு இறங்கி, அவரைப் பார்த்து கடுமையாக சத்தம் போட்டேன்.
எதோ ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறோம் என்ற நிலையில் இவ்வாறான பகட்டு பந்தாக்களோடு நடமாடுவது என்பது மற்றவர்களுக்கு அருவருக்கக் கூடிய காட்சி.
என்னுடைய ஓட்டுநரிடம், “எப்பொழுதும் ஹாரன் அடிக்கக்கூடாது. அப்படியே தேவை என்றால் ஒருதடவையோ, இரண்டு தடவையோ பயன்படுத்தலாம்” என்றுதான் சொல்வதுண்டு.
சென்னை நகரில் வீட்டைவிட்டுக் கிளம்பினாலே இந்த ஹாரன் சப்தம் மன அமைதியை கெடுப்பதோடு, தலைவலியினையும் உண்டாக்குகிறது. ஒரு சிலர் விலையுயர்ந்த, சப்தம் அதிகமாக எழுப்பும் ஹாரன்களை தங்கள் வாகனத்தில் பொருத்தியிருந்தால் தான் பெருமை என்ற போலியான மனநிலையில் உள்ளனர்.
சிங்கப்பூர், இலண்டன் போன்ற நகரங்களில் ஏர் ஹாரன்கள் ஒலித்தால் கடுமையான நடவடிக்கைகள் உண்டு. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைக்கு நான் பார்த்த அந்த நபர், அந்தக் கட்சியில் பொறுப்பிலோ, பதவியிலோ இருப்பதாகத் தெரியவில்லை. கட்சிக் கொடியினைக் கட்டிக்கொண்டு இவ்வளவு வீம்பாக ஹாரன்களை ஒலித்துக் கொண்டே வருவதற்கு என்ன அவசியம்? அப்படி என்ன அவசரமானப் பணி? மற்றவர்களுக்கெல்லாம் அவசரப்பணிகள் ஏதும் இல்லையா?
“பொதுவாழ்வில் உள்ளவர்கள், போர்குணத்தோடு கூடிய அமைதியும், பழகுவதற்குரிய எளிமையும் கொண்டிருப்பதுதான் அழகு.”
பொதுவாழ்வில் உள்ளவர்கள் சிலர் இந்த வெட்டிப் பகட்டு, விலையுயர்ந்த வாகனம், அதிலும் சாலைவிதிகளை மதிக்காத, வேகமாக முந்திக்கொண்டு வாகனத்தை ஓட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.
பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்காக இதுகுறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தும் உள்ளேன்.
பயணங்களின் போது ஏர் ஹாரன்களை தேவையில்லாமல் ஒலிப்பதும், போலியான முகத்தோடு உலா வருவதையும் தவிர்த்தாலே பொதுவாழ்வில் உள்ளவர்கள் மீது மக்களுக்கு மரியாதையும், மதிப்பும் வரும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-08-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #TrafficCongestion
No comments:
Post a Comment