Monday, August 31, 2015

தஞ்சை விவசாயிகளை வஞ்சிக்கும் ஷேல் கேஸ் திட்டம். - Shale Gas



இயற்கை எரிவாயு என்பது மீத்தேன். ஈத்தேன், புயூட்டேன், கார்பன் டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் இதர வாயுக்களின் கூட்டுக் கலவையால் ஆனது.

ஷேல் எரிவாயு பூமிக்கடியில் 10ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள பல அடுக்குகள் கொண்ட மென்மையான களிப்பாறைகளை ஹைட்ராலி்க் பிராக்சரிங் முறையில் பாறைகளைத் துளையிடும்போது வெளியெடுக்கப்படும் எரிவாயு.

பூமிக்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கிப்போன தாவரவகைகள் மற்றும் உயிரினங்கள் தான் பல மாற்றங்களை அடைந்து இம்மாதிரி எரிவாயுப்பொருட்களாக உருமாறியுள்ளன.

தஞ்சை வட்டாரத்தில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை நடத்தி எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்களை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தஞ்சையின் வடக்கே பூம்புகாரிலிருந்து, கிழக்கே நாகப்பட்டிணம், தெற்கே பட்டுக்கோட்டை மற்றும் குத்தாலம், கும்பகோணம் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டது. இப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடலிலும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுசெய்யப்பட்ட பகுதிகளில் பெருமாலானவை பச்சைப்பசேலென்று நெற்பயிர்கள் விளையும் வயற்காடுகள்.

ஆய்வுகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில், விவசாயிகளுக்கு முதலில் இதுகுறித்தான விளைவுகளும், பிரச்சனைகளும் தெரிந்திருக்கவில்லை. பல போராட்டங்களுக்குப் பின், மீத்தேன் வாயுத் திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு தற்போது ஷேல் கேஸ் என்ற பெயரில் மீண்டும் துளையிடத் துவங்கியிருக்கிறார்கள்.

450அடி முதல் 1500அடி ஆழம் வரை பூமிக்கடியில் துளையிட்டு, நிலக்கரிப் படிமங்களை அழுத்திக்கொண்டிருக்கும் நிலத்தடி நீரை வெளியே எடுக்கும் போது மீத்தேன் வாயு அந்த வெற்றிடத்திலிருந்து வெளியேறும். அவ்வாறு நீர் வெளியேறும் போது நிலத்தடிநீர் பாதாளத்துக்குப் போய் பற்றாக்குறை ஏற்படும். கடல்நீர் உட்புகவும் வாய்ப்புள்ளது.

ஷேல் கேஸ் எடுக்கும் முறையில், ஒரு துளைக்குள் செலுத்தப்படும் சுமார் 600வகையான ரசாயனங்கள் கொண்ட கரைசல் சுமார் 5முதல் 10கி.மீட்டர் சுற்றளவில் உள்ள நிலத்தடி நீரைப் பாழாக்கிவிடும். இந்த படிமக்கரைசல்கள் அடங்கிய தண்ணீர் மீண்டும் வெளியெடுக்கப்பட்டு நிலத்தில் மேற்பரப்பில் தேக்கிவைக்கும் போது மண்வளம் கெட்டுவிடும். சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படும்.

காவிரி டெல்டா 7சதவிகித விவசாய நிலங்களைக் கொண்டடங்கிய மண். பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வேளாண்மையே பிரதானத் தொழில். நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை பூமியின் விவசாயிகளை பாதுகாக்க முயற்சியெடுக்காமல், விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்தொழிக்கும் திட்டத்தினை Oil and Natural Gas Corporation நிறுவனமான ஓ.என்.ஜி.சி முழுமையாகக் கைவிட வேண்டும்.

ஆனால் இவ்வளவு போராட்டங்கள் தஞ்சை மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தும் அடங்காமல் ஓ.என்.ஜி.சி தன் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்பது மத்திய அரசும் மாநில அரசும் நிறுத்தாமல் வாய்மூடி மௌனியாக இருப்பதற்கு பதில்சொல்லவேண்டிய காலம் வரும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-08-2015.

#ShaleGas_and_CoalBed_Methane_in_Thanjavur_DeltaDistricts.

#KsRadhakrishnan #KSR_posts
See also : http://ksr1956blog.blogspot.in/2015/08/shale-gas-and-coal-bed-methane-in.html


No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...