Tuesday, May 7, 2019

இந்த மாதம் (மே 2019) அந்திமழை இதழில் வெளிவந்துள்ள #தேர்தல் களம் தொடர்பான எனது பேட்டியில் .....

இந்த மாதம் (மே2019) அந்திமழை இதழில் வெளிவந்துள்ள #தேர்தல் களம் தொடர்பான எனது பேட்டியில் .....
காமராஜர் நாகர்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட காலத்திலிருந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் பணி செய்து வந்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் தொண்டர்கள் தேநீர் குடித்துவிட்டு, முறுக்கு சாப்பிட்டுவிட்டு எளிமையான முறையில் பணிபுரிவார்கள். சட்டமன்றத் தேர்தல் 1967இல் திமுக வென்றபோது நடந்த தேர்தலில் மிகப் பெரிய போஸ்டர்கள் மக்களை கவரும் வாசகங்களுடன் ஒட்டப்பட்டன. சுவர் விளம்பரங்கள் எங்கும் காணப்படும். ஆனால் இப்போதெல்லாம் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக தோன்றுகிறது. ஆனால், அண்டை மாநிலமான கேரளத்தில் போஸ்டர்கள், பேனர்கள், பெரிய பெரிய ஹோர்டிங்குகள் எல்லாம் வைத்து தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இப்போதைய தேர்தல்களில் பணமும் சாதியும் முக்கியமான பங்கு வகிப்பதாக உள்ளது. அன்றைக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்கிற ஐயங்கார் திருச்செந்தூரில் போய் நின்றார். ஜி.ஆர்.தாமோதரன் என்ற நாயுடு இனத்தவர் பொள்ளாச்சியில் கவுண்டர் இனத்தவர்கள் மத்தியில் போட்டியிட்டார். ராம்நாத் கோயங்கா திண்டிவனத்தில் நின்றார். இன்று இதுபோல் போட்டியிட முடியுமா. சிரிப்பார்கள் என்கிற அளவுக்கு நிலைமை மாறி விட்டிருக்கிறது.
நான் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் போன்ற சட்டமன்ற தொகுதி கிராமங்களில் வேட்பாளர் கனிமொழி அவர்களுக்காக தேர்தல் பணி செய்தேன். இந்த பகுதியில் போட்டியிட்டவன் என்பதால் அங்கே நெருக்கமானவர்கள் பலர் உண்டு. இந்த சமயத்தில் சுமார் 300 கிராமங்களுக்கு சென்றேன். மைக் பிடித்து பிரச்சாரம் செய்யவில்லை. ஒரு ஊருக்குள் போவோம். அங்கே யார் வீட்டு திண்ணையிலாவது அமர்ந்து நலம் விசாரிப்போம். பழைய நண்பர்கள் வருவார்கள். உறவினர்கள் வருவார்கள். முன்பே தொலைபேசியில் சொல்லியிருப்பதால் அவர்கள் கூடியிருப்பார்கள். கிராமப்புறங்களில் முதியோர் ஓய்வூதியம் சரியாக இல்லை. தண்ணீர் பஞ்சம் கடுமையாக நிலவுகிறது. கோமலின் “தண்ணீர், தண்ணீர” படம் எடுக்கப்பட்ட ஏழுபட்டி கிராமம் எங்கள் பகுதி தான். இன்றும் விவசாயம் பொய்க்கும் நிலைதான் நிலவுகிறது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை என்று வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பயிர்களை காட்டி கண்ணீர் வடிப்பதை கண்டேன்.
Image may contain: 1 person, text
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற திமுகவின் சீரிய திட்டங்களை எடுத்துச் சொன்னேன். தனிப்பட்ட கிராமவாசிகளின் நலன்களை கேட்டதுடன் இதுபோன்ற பொது பிரச்சனையையும் கேட்டேன். எங்கள் பகுதியில் கயத்தாறு, கோவில்பட்டியில் விமான ஓடுபாதைகள் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், விவசாய பொருட்களுக்கு குளிர்பதன கிடங்குகள் உருவாக்கலாம். கழுகுமலையை சுற்றுலாத் தலமாக அறிவிக்கலாம். இதுபோன்ற விஷயங்களை பேசினோம். தலைவரின் புதல்வி என்ற அளவுக்கு நல்ல செல்வாக்கும் புகழும் இருப்பது எங்கள் வேட்பாளர் கனிமொழிக்கு சிறந்த விதத்தில் கைகொடுத்தது. அவருக்கு மேலும் வலுசேர்ப்பதற்காக இந்த பகுதியில் மேற்கொண்ட பிரச்சாரங்களும் நுண்வியூகங்களும் மேற்கொண்டிருக்கிறோம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-05-2019

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...