Sunday, October 7, 2018

*நான் பார்த்த தமிழகத் தலைவர்கள். *



-------------------------------------
இன்றைக்கு இந்த கருப்பு வெள்ளை அரிய படத்தை பார்க்க நேர்ந்தது. இது தந்தை பெரியார் மறைவின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 

இந்த படத்தில் பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கலைஞர், எம்.ஜி,ஆர், ஈ.வி.கே.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர், கே.ஏ.மதியழகன், ப.உ.சண்முகம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி போன்ற ஆளுமைகள் ஒரு சேர இருக்கும் காட்சி. இதில் கே.ஏ.மதியழகன், ப.உ.சண்முகம் ஆகியோருடன் தொடர்போ, அறிமுகமோ எனக்கு கிடையாது. ஆனால், மற்றவர்களோடு என்னை பெயர் சொல்லி அழைக்கப்படும் அளவிற்கு அறிமுகமும், அவர்கள் வழங்கிய பணிகளையும் செய்துள்ளேன். நான் அறிந்த தலைவர்களுள் பிரபாகரன் மட்டும் இங்கில்லை. அவரின் காலக்கட்டம் அப்போது இங்கே எழவில்லை. 

பெருந்தலைவர் காமராஜர் என்னை கோவில்பட்டி தம்பி என்றும், தலைவர் கலைஞர் என்னை இராதா என்றும், எம்.ஜி.ஆர் வக்கீல் என்றும் அழைப்பார்கள். ஈ.வி.கே. சம்பத் அவர்களுடன் நன்கு அறிமுகம். நெடுமாறனோடு நான் அரசியலில் களப்பணியாற்றும போது சம்பத் அவர்கள் என்னை தம்பி என்றே அழைப்பார். நாவலர் அவர்கள் நான் தினமணியில் எழுதிய கட்டுரைகளை படித்துவிட்டு, அவரை நேரில் சந்திக்கும் போது பாராட்டுவதும் உண்டு. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் கட்டுரைகளை படித்தேன். பொதுத்தளத்தில் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அடிக்கடி ஆலோசனை சொல்வார். எ.வி.பி..ஆசைத்தம்பி எனது பக்கத்து ஊரான விருதுநகரைச் சேர்ந்தவர். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் வேலு மெஸ்சின் அருகில் அவரது வீடு உள்ளது. அவரை சந்திக்கும் போதெல்லாம் விருதுநகர், சாத்தூர் பகுதிகளைப் பற்றி கேட்பது வாடிக்கை. தொடர்ந்து புகைபிடித்துக்கொண்டே இருப்பார். அது தான் அவருக்கு ஆபத்தாக முடிந்தது.

பொது வாழ்வில் 48 ஆண்டுகளில் நான் பார்த்த இந்த அரசியல் தலைவர்களோடு பழகியது இன்றும் பசுமையாக நினைவுகள் உள்ளன. இப்படி ஆளுமையான தலைவர்களோடு அறிமுகமாகி அன்பு பெற்றதே பெரும் வரம் மட்டுமல்ல. நான் செய்த அரசியல் தவத்தின் கொடையாகும். இதை தாண்டி வேறு என்ன அங்கீகாரங்கள் வேண்டும். 

தமிழகத்தில் அரசியல் மனமாச்சரியங்களை கடந்து இப்படி தலைவர்களை அப்போது ஒருங்கிணைந்து பார்த்தது இன்றைய வரலாறு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07/10/2018

#தமிழக_தலைவர்கள்
#tamilnadu
#KSRPostings
#KSRadhakrishnanPostings

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...