திராவிடம் - சில வரலாற்றுக் குறிப்புகள்.
-------------------------------------------


“திரிபுவன சக்கிரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம், கிழக்கு நாட்டு ஸ்ரீகெருவூரான வீர சோழச் சதிர்வேதி மங்கல(த்து)முடைய நாயனாருக்கு” (சாசனம் – 714, பக் – 670, South Indian Temple Inscriptions Volume – 2) இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கெரூர் தற்போதைய தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கடந்த காலத்தில் திராவிட தேசத்தில் கொங்கு பகுதியும் உள்ளடக்கியுள்ளது என்பதை சொல்வதாக வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு சோழ மன்னர் விக்கிரம சோழனின் 11வது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் ஆகும். தேசம் என்பது பெரிய அழகு. அதில் உள்ள சிறிய அழகு தான் நாடு என்றாகிறது. இந்த கல்வெட்டின் காலம் கி.பி.1129 ஆக இருக்கலாம். அதுபோலவே அந்த காலத்தில் பல்வேறு செப்பேடுகளில் திராவிடம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை காணலாம். “யிப்படி அநேகஞ் சதுர்யுகம் பூசை கொண்டருளிய தேவர் தேவன் தெய்வ சிகாமணி தேதேவோர்த்தமஞ் தேவதாசாரப்பூமன் பத்தர் பிரியன் பக்தவத்சல பார்பதி வல்லவன் பார்பதி மநோகரன் பார்பதினாயகன் முத்திக்குவித்து முக்கணிசுபர னின்றகோல மழகிய நிமலன் நேரமொரு பஞ்சவர்ன்னப் பிரகாசன் திருமுகவோவன் தெண்டாயுத அஷ்த்தன் சம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் காஞ்சிமானகரில் திருக்கம்பை யாத்திலே பார்பதா தேவி அற்தபாகம் பெற வேண்டி தபசு பண்ணுகையில்” (பக் – 152, அல்லாள இளையோன் செப்பேடு, கொங்கு சமுதாய ஆவணங்கள் – புலவர் ராசு) இந்த செப்பேட்டிலும் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக தொண்டை மண்டலமும் உள்ளதாக புலவர் ராசு என்பவர் தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த செப்பேடும் 1584ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உண்டு. இதற்கு வலு சேர்க்கும் விதமாக மற்றொரு செப்பேடான மொரூர்காங்கேயர் ஏடு எனப்படும் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்புகள் உள்ளது. “செம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் திருக்கம்பையாற்றில் பார்வதி தேவியம்மான அர்த்த பாகம் பெற வேண்டிய அரியதபசி பண்ணுகையில்…” (பக் – 222, கொங்கு சமுதாய ஆவணங்கள் என்ற புத்தகத்தில் இந்த ஆவணம் தமிழ் துந்துவி ஆண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.) இந்த ஆவணத்திலும் தொண்டை மண்டலம் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10/10/2018.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
#Dravidam
#திராவிடம்
#கல்வெட்டுகள்
#வரலாற்றுத்_தரவுகள்
No comments:
Post a Comment