Sunday, October 28, 2018

கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் ராஜபக்சே பிரதமரானதை குறித்து கண்டித்து வெளியிட்ட அறிக்கை.

கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் ராஜபக்சே பிரதமரானதை குறித்து கண்டித்து வெளியிட்ட அறிக்கை.
————————————————
இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா?”
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இலங்கையின் பிரதமராகத் திடீரெனப் பதவியேற்று இருக்கிறார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. அந்நாட்டு சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமலும் ராஜபக்சேவைப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த அதிபர் மைதிரிபால சிறீசேனாவின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய நிலையில், தானும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக இத்தனை காலம் அதிபரின் கூட்டாளியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்கேவும் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசில் நடைபெற்றுள்ள இந்தத் தலைகீழ் மாற்றங்கள், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் பதற்றத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலைத் தாக்குதல் நடத்தி வேட்டையாடிய மகிந்த ராஜபக்சே, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் இலங்கைக் கடற்படையால் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியவர். இவை குறித்து, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச அமைப்புகளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் நடத்திய டெசோ மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் குறித்து முழுமையாகவும் சுதந்திரமாகவும் விசாரணை நடத்தி, அதற்குரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் கலைஞர் அவர்களின் உத்தரவுப்படி ஐ.நா.மன்றத்தில் நேரில் சென்று அளித்துள்ளேன். தமிழர்கள் வெகுகாலமாக நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அநீதியான முறையில் ராஜபக்சே திடீரென பிரதமர் பொறுப்பேற்றிருப்பது ஈழத் தமிழர்கள் நெஞ்சில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தார். அதுபோல, ரணில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுக்கு வருகை தந்தார். ராஜபக்சேவின் வருகையின்போது அரசியல் காழ்ப்புணர்வுடன் பேட்டிகள் - செய்திகள் வெளியிடப்பட்டன. அதே சூழலில், இலங்கை அதிபர் மைதிரிபால சிறீசேனாவைக் கொல்வதற்கு இந்திய உளவுப் பிரிவான ‘ரா’ அமைப்புத் திட்டமிட்டிருப்பதாக இலங்கையில் செய்திகள் வெளியாயின. பின்னர் மறுப்பறிக்கையும் அவசரமாகத் தரப்பட்டது. எனினும், இது தொடர்பாக அந்நாட்டில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் பிரமுகர்களின் பயணங்களும் குற்றச்சாட்டுகளும் வெளியான நிலையில், பிரதமர் பொறுப்பில் ரணில் விக்ரமசிங்கே நீடிக்கும் நிலையிலேயே, பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்சே திடீர் பிரதமராகப் பொறுப்பேற்றிருப்பதன் பின்னணி, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இலங்கை தொடர்பான வெளிநாட்டு உறவு மற்றும் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடக்கும் பனிப்போரின் பின்னணியில் இலங்கை அரசில் இந்த திடீர் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆங்கில ஊடகங்களும் அயல்நாட்டு செய்தி நிறுவனங்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இத்தகைய நிலை தொடருமானால் அது இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு சவாலாக அமையும் ஆபத்து உண்டு என்ற கவலையும் பிரதமருக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.
ஒரே இரவில் இலங்கை அரசில் நடந்துள்ள மாற்றங்கள் பல மர்மங்களை உள்ளடக்கிய நிலையில், அவை அனைத்துமே வாழ்வுரிமை மறுக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் வதைபடுகின்ற ஈழத்தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளன. அதுபோலவே தமிழக மீனவர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது. எனவே இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் அதன் வெளியுறவுத்துறையும் தமிழர்கள் நலன் கருதியும் இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதியும் இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்தும், ரா உளவுப் பிரிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தெளிவு படுத்திட வேண்டும்.
தமிழர்கள் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருக்கும் 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் பிரதிநிதியான தமிழக ஆளுநருக்கு அனுப்பி இத்தனை காலம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு விடுக்கப்பட்ட சவாலாகத் தெரிகிறது.
ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது சாதகமான முடிவினை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதன் மீது மத்திய அரசும் கவனம் செலுத்திட வேண்டும். தமிழர்கள் பிரச்சினையைத் தனது கவனத்திற்கு அப்பாற்பட்டதாகவோ சம்பந்தம் இல்லாததாகவோ மோடி அரசு கருதிடக் கூடாது. தமிழர் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எத்தகைய செயல்பாடுகளையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறேன்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-10-2018
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், சூட் மற்றும் திருமணம்

No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...