----------------------------------
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஈழத்தமிழர்கள் அகதிகளாக 1983 காலக்கட்டத்திலிருந்து இருந்து வருகின்றனர். அவர்களில் பலர் சிறப்பு முகாம்களில் இன்றும் சிறைக் கைதிகளாக வாடுகின்றனர். அப்படி அகதிகளாக வந்தவர்களுக்கு இங்கே திருமணமும் ஆனது. அவர்கள் குழந்தைகளையும் பெற்று அவர்களும் வளர்ந்துவிட்டனர். கிட்டத்தட்ட மூன்றாவது தலைமுறையும் குழந்தைகளாக உள்ளனர். அகதிகளாக வந்தவர்கள் திரும்பவும் தங்களது சொந்த நாடு செல்ல விரும்புகின்றனர். அவர்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதில் தான் பல சிக்கல்கள் உள்ளன. பல வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்ததற்காக அதற்கான உரிய கட்டணங்களை (Over stay charges) செலுத்திவிட்டு தான் தங்களது நாட்டிற்கு செல்ல வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தேவையற்ற நடைமுறை. அவர்களின் ஜீவனத்திற்கே இந்திய அரசு மற்றும் தமிழக அரசு வழங்கும் உதவிகளை நம்பியே உள்ளனர். அவர்கள் வாழ்வதற்கே கையில் காசில்லாதபோது, பல்லாயிரக்கணக்கில் பணம் செலுத்த முடியுமா?.
திபெத்திய அகதிகளுக்கு அகில இந்திய அளவில் அவர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் உதவிகள் இருந்தன. ஈழத் தமிழருக்கு தமிழகத்தில் தங்கியிருந்தால் தான் உதவிகள் கிடைக்கும். மற்ற மாநிலங்களில் அகதிகளாக இருந்தால் தமிழகத்தில் கிடைக்கும் உதவிகள் அவர்களுக்கு கிடைக்காது. அதேபோல, பங்களாதேஷ் பாகிஸ்தானிலிருந்து பிரியும்போது (கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகவுள்ளது) அவர்கள் மேற்கு வங்கத்திலும், அசாமிலும் அகதிகளாக குடியேறினார்கள். அவர்கள் பங்களாதேசிற்கு செல்வதற்கு இத்தகைய கட்டணங்கள் விதிக்கப்படவில்லை. அசாம் மாநில வாக்காளர் பட்டியலிருந்து அவர்களின் பெயரை நீக்கி அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி சென்றுவிடுங்கள் என்று மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. இப்படியெல்லாம் இருக்கும்போது தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு மட்டும் மத்திய அரசு இத்தகைய கட்டணங்களை விதிப்பது நியாயமா?
திமுக ஆட்சிக்காலத்தில் 2009, செப்டம்பரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கள் நாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் அவர்கள் சிரமங்களின்றி செல்வதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், ஒரு வேளை இந்தியாவிலேயே வாழ விரும்பினால் அவர்களுக்குரிய குடியுரிமையை இந்திய அரசு வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தை அன்றைக்கு கலைஞர் முன்மொழிந்தார். இதை அன்றைக்கு ஆட்சியிலிருந்த திமுகவும் தமிழக அமைச்சரவையைக் கூட்டி இதுகுறித்து விவாதித்து மத்திய அரசுக்கு பரிந்துரையும் செய்தது. இப்படி இலகுவாக நடைமுறைகளை ஈழத்தமிழ் அகதிகள் அவர்களுடைய தாய்நாடு திரும்ப செய்து தராமல் இங்கு தங்கியதற்கு கட்டணம் செலுத்திவிட்டு போ என்பது எந்த வகையில் நியாயம்.
ஐ.நா. மன்றத்தில் அகதிகள் குறித்தான நடைமுறை விதிகளுக்கும், சர்வதேச அகதிகள் சட்டத்திற்கும் முரணாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. இந்த பிரச்சனைகளை மத்திய அரசு கருத்தில் கொண்டு ஈழத்தமிழ் அகதிகள் தங்களது தாய்நாடு திரும்ப எந்தவித சிரமுமின்றி, எத்தகைய கட்டணத்தையும் வசூலிக்காமல் அனுப்பி வைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவர்களும் எந்தவித சிக்கலுமின்றி நிம்மதியாக தங்களது நாட்டிற்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
12-10-2018
#ஈழத்தமிழ்அகதிகள்
#KSRadhakrishnan_postings
#KSRpostings
#Tamil_Eelam
#தமிழ்_ஈழம்
No comments:
Post a Comment