Tuesday, October 9, 2018

சுற்றுச் சூழல் குறித்த விரிவான பதிவு.


சுற்றுச் சூழல் குறித்த விரிவான பதிவு.
நேற்று பூமி வெப்பமயமாக்கல் குறித்து சிறு சிறு பதிவுகளை இட்டிருந்தேன். விரிவான பதிவு வேண்டுமென்ற நண்பர்களுக்காக இந்த பதிவு.
இந்த பூமிப்பந்தில் வெப்பநிலை உயர்ந்து மானுடம் இங்கு இருக்க முடியுமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இந்த அழிவிலிருந்து சரிசெய்ய வேண்டுமென்றால் இனி எதிர்வரும் 12 ஆண்டுகளுக்குள் இந்த ஆபத்தை போக்கினால் தான் வழிவகை பிறக்கும். கடந்த 2015 இல் பாரீசில் நடைபெற்ற சுற்றுச் சூழல் மற்றும் உலக வெப்பமாதல் குறித்து நடந்த உலக உச்சி மாநாட்டில் 1.5 டிகிரி முதல் 2 டிகிரிக்குள் இந்த வெப்பத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்தனர்.
இந்த மாநாட்டில் கூடிய 195 உலக நாடுகள் அனைத்தும் இந்தளவு வெப்பத்தை கட்டுப்படுத்துவது என்று சூளுரைத்தது. இந்த நிலையில் 50 விஞ்ஞானிகள் தென்கொரியாவின் இன்சே நகரில் கூடி பல விவாதங்கள் நடத்தி ஐ.பி.சி.சி அறிக்கையை நேற்று (08/10/2018) அந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள்;
பூமிப்பந்தில் வெப்பத்தின் தாக்கம் 2.0 டிகிரிக்கு கூடுலானால் அபாயகரமான அழிவுகள் இந்த அகிலத்தில் ஏற்படுமென்றும், 1.8 டிகிரிக்கு கட்டுப்படுத்தை அதனுடைய வெப்பத்தை ஓரளவு குறைக்கலாம். பூமியின் வெப்ப அளவு 1.0 டிகிரி அளவிற்கு இருந்தது. மேலும் வெப்ப மாசு ஏற்பட்டதால் 2030ஆம் ஆண்டுக்குள் 0.5 டிகிரி உயரும் என்று அந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது.
சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி, தென் ஆப்பிரிக்க கேப்டவுனில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத வறட்சி. பனிக்கட்டியின் உறைவிடமான ஆர்க்டிக் பிரதேசத்தில் எற்பட்ட காட்டுத் தீ. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பெரும் சூறாவளிகள் இந்த வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகளால் ஏற்பட்டன.
இது குறித்து, கடந்தகால எச்சரிக்கைகளை இந்த உலகம் கவனிக்கத் தவறியதால் இந்த பூமியில் இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்தன. இந்த 50 விஞ்ஞானிகள் உலகளவில் பல்வேறு தரவுகளை பெற்று 6000த்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் தாள்களை பரிசீலனை செய்த பிறகு 0.5 டிகிரி ஏறலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மேலும் 1.05 டிகிரியிலிருந்து 2 டிக்ரிக்கு வெப்பம் கூடுதலானால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பார்கள். வறட்சியினால் உணவு பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு கோடிக் கணக்கான மக்கள் பட்டினியால் மடிவர். மேலும் மலேரியா, டெங்கு போன்ற திசையன் நோய்களால் மக்களின் உயிரிழப்பு. தாவரங்களும் பாதிக்கப்படும். மகரந்த சேர்க்கையும் நடைபெறாது. அந்த சூழ்நிலையில் எப்படி விளைச்சல் இருக்கும். மேலும் வெப்பம் கூடுதலானால் கால்நடைகளும் தண்ணீர் கிடைக்காமல் நோயினால் அவதிப்பட்டு அதுவும் உயிரைவிடுகின்ற துர்பாக்கிய நிலை ஏற்படும்.
உலக வெப்பமயம் கூடுதலால் கடலின் மட்டம் உயர்ந்து நாட்டுக்குள் கடல் தண்ணீர் பேரெழுச்சியுடள் உள்ளே வரலாம். கடலில் உள்ள பவழப் பாறைகள் அழிந்துவிடும். கடலின் அமிலத் தன்மையும் கூடுதலாகி கடலில் ஆக்ஸிஜன் குறைந்தால் கடல்வாழ் உயிரினங்களும் மடியும். பனிக்கட்டிகளே இல்லாத பகுதிகளாக ஆர்க்டிக், இமயமலை போன்றவை இருக்கும். காஷ்மீரில் பனிப்பொழிவே இருக்காது. சிரப்புஞ்சியில் மழைபொழிவே இருக்காது. இப்படியான அவல நிலையைதான் எதிர்கொள்ள வேண்டிய நிலையை தான் மானிடம் எதிர்கொள்ளும்.
இந்திய போன்ற வெப்பம் நிறைந்த பூமத்திய ரேகை உள்ள நாடுகளில் உணவு உற்பத்தி குறைந்து ஊட்டச்சத்து குறைவான தானியங்களே விளையும். கோதுமை, அரிசி போன்றவற்றின் உற்பத்தி குறையலாம். சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, மகாநதி, காவிரி போன்ற நதிகள் வறண்டு போகும். அதே போல நீரும் மாசபடும்.
இந்தியாவை பொறுத்தவைர இந்த பிரச்சனைகளை பிரத்யோகமாக கவதினத்து, உரிய காலநிலைகளை குறித்தும், வெப்பமயமாதல் குறித்தும் திட்டம் தீட்ட வேண்டும். மேலும் அணுமின் ஆலைகள், நிலக்கரி பயன்பாட்டில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், தாமிரத் தொழிற்சாலை போன்ற திட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மாசு தரும் நஞ்சை கக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடவேண்டும். வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்திற்கு வாகனங்கள் 10,000 மேல் பதிவாகின்றன. இந்த நச்சும் புகை எவ்வளவு சிந்திப்பதில்லை. ஏதோ புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இதை குறித்து சிந்திப்பதில்லை. என் வீட்டில் 5 கார், 10 என்று பெருமைக் கொள்வது போலித்தனமானது. வாகனத்தில் போவதும், குளிரூட்டும் சாதனங்களை வீட்டில் பொருத்துவதும், குளிர் பதன பெட்டி ஆகியவற்றின் பாதிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டுமே அன்றி அதனால் கேடுகள் வருகிறது என்ற விழப்புணர்வு கூட நம்மிடம் இல்லை.
இதை குறித்து இந்திய அரசு கவனத்தோடு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய நிலை வந்துள்ளது. கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக இத்தகைய செயல்பாடுகளை ஆய்வுக்கும், பரிசீலனைக்கும் உட்படுத்த வேண்டும்.
அரசாங்கம்  மட்டுமல்ல, பொது மக்களும் இதை குறித்தான விழப்புணர்வும், அர்ப்பணிப்பான செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு வீட்டிலும் மாலை ஆனவுடன் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களை பார்த்துக் கொண்டிருந்தால் 2030லிருந்து நமக்கு நாமே அழிவைச் சந்திக்க வேண்டிய நிலை வந்துவிடும்.
ஓட்டுக்கு காசு வாங்குவது, தகுதியற்றவர்களை ஆட்சியில் அமரவைப்பது, அரசு கொடுக்கின்ற இலவசப் பொருட்களை பெற்றுக் கொண்டு வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தால் இப்படியான இயற்கை அபாயங்கள் சூழத்தான் செய்யும். யாருக்கோ வந்த கேடு என்று நினைக்காமல் சுற்றுச் சூழலை கவனமாக கையாள வேண்டிய அசாதாரணமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்ற நிதர்சனத்தை அறிந்து செயலாற்ற வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும்.
விவசாய நடைமுறைகளை எல்லாம் மாற்றி தற்சார்பு, பாரம்பரிய விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். மேலும் நச்சுக் கக்கும் தொழிற்சாலைகள் இல்லாமல் நாட்டை வழிநடத்த வேண்டும். இதையும் மீறி தேவையற்ற விடயங்களிலும், கூத்துகளிலும் கவனம் செலுத்தினால் யாரும் இயற்கையிலிருந்து தப்ப முடியாது.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09/10/2018.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
#ஐ_பி_சி_சி
#புவி_வெப்பமயமாக்கல்
#Global_Warming


No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...